அரசுப் பணியில் சேர்ந்தால் உழைக்காமல் மாதாமாதம் சம்பளம். தினமும் கை நிறைய கிம்பளம். மாட மாளிகைகள், சொகுசுகார்கள், தங்கம், வெள்ளி நகை இவைகள் கிலோ கணக்கில் சேர்க்கலாம். அசையா சொத்துக்களை குவிக்கலாம் என்பவர்களுக்கு மத்தியில், இப்படியும் ஒருவர்!….

“தண்ணீர் தண்ணீர்” திரைப்படத்தில் வருவதைப்போன்ற கரிசல் கிராமம் ஒன்றில் பிறந்து 36 ஆண்டு கால அரசுப் பணியில் 16 வருடம் பதவி உயர்வே இல்லாமல் உழைத்து பணி ஓய்வு பெற்றும் தனது அறிவுப் பசிக்கும், சமூகப் பணிக்கும் ஓய்வு கொடுக்காமல் ஊடகம், வானொலி என தனது பங்கைச் செலுத்தி வருபவர் சிவகாமிநாதன்.

ஆவின் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்ததால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பங்கேற்கும் விழாவில் அவர்களின் நிகழ்ச்சி நிரல்
தயாரிப்பது, விழாக்களில் முதல் ஆளாக நின்று பணிகளை மேற்கொள்வது என்பது அவர் இயல்பில் ஊறிய விஷயங்கள்.

அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரைக்கும் ஓய்வு பெறும்போது கையில் காசோலை, கழுத்தில் மாலை, ஊர்வலம் என தடபுடலாக ஏற்பாடுகளுடன் அவர்களை குடும்பத்தில் ஒப்படைக்கும் பணியை நிறைவாக செய்து பிறர் மனம் மகிழ செய்தவர். ஆனால், அவர் ஓய்வு பெறும் தினத்தன்று ஒரு கப் ‘தேனீர்’ கொடுக்கக் கூட ஒருவரும் இல்லை. பிறகு, மாலை, மரியாதை என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஓய்வூதியம் இல்லை. பணப் பலனும் கிடையாது என வெறும் கையோடு அனுப்பி வைத்துள்ளனர்!…

மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில், பால் விலையை உயர்த்தக் கோரி நடந்த உற்பத்தியாளர்களின் போராட்டத்தை அரசுக்கு ஆதரவாக முடித்து வைக்க ஆவின் நிறுவனம் சார்பில் பலவேடமிட்டு சமாளித்த எனக்கு வீதியில் நின்று போராட
வும், நீதிமன்றத்தை நாடவும் மனம் இல்லை.

ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள் சட்டப்படி வேலைகேட்டு கொடுத்த மனுக்கள் எப்படி கண்டு கொள்ளப்படாமல் போனதோ, அதைப்போன்றே தான், ஓய்வூதியம் கேட்டு முதலமைச்சர்கள் முதல் உயரதிகாரிகள் வரைக்கும் நான் கொடுத்த மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. மனச்சோர்வு இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை. ஓய்வு பெற்ற பத்து ஆண்டுக ளுக்கு பிறகு, பதவி உயர்வும் ஓய்வூதியமும் கிடைத்ததையும் “நினைவில் நின்றவை” நூலில் நினைவில் நிறுத்துகிறார் சிவகாமிநாதன்.
“வாழ்க்கையில் ஒரு சிலரால் மட்டுமே சிகரத்தை தொடமுடியும். பலரால் அப்படி முடியாமல் போனாலும் உயரங்களையாவது எட்டுவதற்கு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்கிற சிறு நெருப்பு சிறுகச் சிறுக பற்றி எரிந்து, பெரிய தீப்பிழம்பாக பின்னர் மாறும்! அப்படிதான் வயது 80 தொட்டாலும் சிவகாமிநாதனிடம் நெருப்புக் கனல்
கனன்று கொண்டே இருக்கிறது.

விடா முயற்சி, கடின உழைப்பால் உயர்ந்து நிற்கும் சிவகாமிநாதன், பள்ளிப் பருவம் தொடங்கி கல்லூரிக் காலம் வரைக்கும் குடும்பத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் தொகுத்திருக்கிறார். இடைஇடையே, சொந்த ஊரின் பெருமையோடு, அன்பு காட்ட வேண்டிய மனநோயாளிக ளிடம் அருவெறுப்பாக நடந்துகொண்ட அன்றைய சமூகத் தையும், சாமியார் வேடமிட்டவர்கள் மூடநம்பிக்கையை எப்படியெல்லாம் வளர்த்திருப்பார்கள் என்பதை சொந்த அனுபவத்தில் நேரில் பார்த்ததையும் பதிவு செய்துள்ளார்.
1980 களில் சென்னை மாநகரில் சாமியார் ஒருவரின் லீலைகளை அம்பலப்படுத்துகிறார். இந்த சாமியார் மீது தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளும், ‘உயர்குடி’ பிரமுகர்களும் அபிமானம் கொண்டு அடிபணிந்து திரிந்தனர் என்று கோபாவேசத்தோடு எழுதிச் சொல்கிறார். பெரியாரின் பாதையை விரும்புவதாக கூறுகிறார். இப்படி தெரிவிக்கும் அவரே, யாகத்தில் கலந்துகொண்டதால் பணி நியமனம் கிடைத்ததாக ஓரிடத்தில் தெரிவிப்பது சற்று நெருடலாக உள்ளது.
விருப்பமே இல்லாத எழுத்தர் பணியில் சேர்ந்தாலும் படிப்படியாக உயர்ந்தவர். வேலையில் மட்டுமல்ல படிப்பிலும்! பட்டமேற் படிப்பை முடிப்பதற்குள் உயரதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் செய்த சூழ்ச்சியையும் பளிச்சென்று கூறியுள்ளார்.

சொந்த ஊர்க்காரான மறைந்த முதலமைச்சர் ராஜாஜி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, உத்தரகாண்ட், ஆந்திர முதல்வர்கள், இசை மேதை எம்.எஸ். சுப்பு லட்சுமி, திரைத்துறை, செய்தித்துறை என பலதுறைகளிலும் தலைவர்களுடன் நெருங்கி பழகிய அனுபங்களையும் 192 பக்கத்தில் எளிமையான மொழி நடையில் நினைவு கூர்ந்துள்ளார்.

“நினைவில் நின்றவை”
ஆசிரியர் க.சிவகாமிநாதன்
வெளியீடு: கலைஞன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17.
பக்:192 விலை.ரூ.180/-தொலைபேசி: 044 – 24345641

Leave a Reply

You must be logged in to post a comment.