சேலம்,
தமிழக உழைப்பாளி மக்கள் மிகக் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், தொடர்ந்து மவுனம் சாதித்து வரும், தமிழக அரசைக் கண்டித்து, ஏப்ரல் 4-ஆம் தேதி 1 லட்சம் பேர் திரண்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதென சிஐடியு முடிவு செய்துள்ளது.

சிஐடியு-வின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், சேலத்தில் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவிப் பொதுச்செயலாளர்கள் வி. குமார், ஆர். கருமலையான், கே. திருச்செல்வன் உட்பட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில், செவ்வாயன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:காவிரியில் நீர்வரத்து குறைந்ததாலும், பருவமழை போதிய அளவு இல்லாததாலும் தமிழகம் இதுவரை கண்டிராத வறட்சியை எதிர்கொண்டுள்ளது. நிலத்தடி நீர், மழை நீரை நம்பி ஓரளவு நடைபெற்ற விவசாயமும் நீரின்றி கருகி விட்டன. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 55-க்கும் மேற்பட்டோர் இதுவரை மரணம் அடைந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கேட்டு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

ஆனால், இப்பிரச்சனையில் மாநில அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திட வேண்டும்; தமிழக அரசு உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி, தமிழக வறட்சி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் தேவையான நிதியை பெற்று தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்; இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவிக்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுக்கிறது. அதேபோல, தமிழகத்தில் குறைந்தபட்சம் மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்; நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக மற்றும் இதர பிரிவு தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; முறைசாரா நலவாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும்; அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழக உழைப்பாளி மக்களின் பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. எனவே, இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்துகிறது.

மேலும், விவசாயிகள் – தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் கோரிக்கைகள் மீது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஏப்ரல் 4-ஆம் தேதி சென்னை கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தை 1 லட்சம் பேருடன் முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்துள்ளது.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்பைக் கண்டித்தும், சேலம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை எதிர்த்து, சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் விவசாயிகள் மரணமடைந்து வரும் நிலையில், விவசாயிகளின் துன்ப துயரங்களில் தொழிலாளர்கள் பங்கெடுக்கும் வகையில் சிஐடியு ஆதரவு இயக்கங்களை நடத்தும் என்றும் தீர்மானம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் இன்று பங்கேற்பு சென்னை பள்ளிக்கரணை காவல்துறை, வாலிபர் சங்கத்தினர் மீதும், இளம்பெண்கள் மீதும் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் சிபிஎம் புதனன்று நடத்தும் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பங்கேற்பார்கள் என்றும் சிஐடியு மாநிலக்குழு கூட்டம் முடிவு செய்துள்ளது.

Leave A Reply