அகர்தலா:
திரிபுரா மாநில உள்ளாட்சிகளுக்கான இடைத்தேர்தலில் இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. அம்மாநிலத்தில் காலியாக இருந்த 47 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 21 அன்று நடைபெற்றது.மொத்தமுள்ள 47 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியின்றி இடது முன்னணியின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒரு ஜில்லா கவுன்சில் பதவியும், இரண்டு கிராமபஞ்சாயத்துகளும் அடங்கும். மற்ற இடங்களுக்கானதேர்தல்முடிவுகள் டிசம்பர் 23 அன்று அறிவிக்கப்பட்டது. உனக்கொடி ஜில்லா கவுன்சிலுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான ஹரேகிருஷ்ண மஜூம்தார் பாஜகவின் வேட்பாளரான லட்சுமிராணி சங்கரை படுதோல்வியடையச் செய்தார். பாஜகவின் வேட்பாளர் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. அவர் 320 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் டெபாசிட் இழந்தார்.

அதேபோல் குர்நாநகர் வட்டத்தில்நடைபெற்ற 7 கிராம பஞ்சாயத்துக்களிலும், தலாய் வட்டத்திலுள்ள 6 கிராம பஞ்சாயத்துக்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 41 கிராம பஞ்சாயத்துக்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இடது முன்னணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக தலா இரண்டு பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 47 உள்ளாட்சி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 43 இடங்களைக் கைப்பற்றி இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் வசமிருந்த 5 கிராம பஞ்சாயத்துக்களையும் இடது முன்னணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 38 கிராம பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு கிராம பஞ்சாயத்துக்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.இந்த மகத்தான வெற்றியை இடது முன்னணி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இடது முன்னணி மீதும் இடது முன்னணி அரசின் மீதும் திரிபுரா மாநில மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது.

வெற்றி பெற்றுள்ள இடது முன்னணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் இடது முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை விடுக்கப்பட்டது. அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சி என்பதை அடிப்படையாக கொண்டு மக்கள் நலன் காக்கும் அரசாக இடது முன்னணி அரசு செயல்படுகிறது. இடது முன்னணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள அழுத்தமான நம்பிக்கையே தேர்தல் முடிவாக வெளிவந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்களில் காங்கிரஸ் கட்சிபோட்டியிட்டது. பல்வேறு பஞ்சாயத்துகளில் பாஜகவோடு ரகசிய உடன்பாட்டையும் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு இடத்தில் கூடகாங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: