சிவகங்கை, ஜன. 04 –

சிவகங்கை மாவட்டத்தில் திமுக பிரமுகரான சரவணராஜன் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் சரவணராஜன் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தி.மு.க. 3-வது வார்டு பிரதிநிதியாகவும் உள்ளார். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, 3-வது வார்டில் போட்டியிட தி.மு.க. சார்பில் சரவணராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று காலை சரவணராஜன் தனது 2 குழந்தைகளையும் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அவரின் கார் மீது ஒரு கல் விழுந்துள்ளது. இதனால் காரை நிறுத்திய சரவணராஜன் கீழே இறங்கி பார்த்தார். அப்போது 10 பேர் கும்பல் சரவணராஜனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணராஜனை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply