நாகப்பட்டினம்:
கருகிய பயிர்களைக் கண்டு, அன்றாடம் விவசாயிகள் தற் கொலையாலும் மாரடைப்பாலும் செத்து மடிகிறார்கள். ஊடகங்களுக்கு விவசாயிகளின் சாவுச்செய்தியைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற விவசாயிகளின் சாவுச் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இது வரலாறு காணாத கொடுமையாகும். ஆனால், ஆட்சியாளர்கள் இதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை, தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா? என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், திங்கட்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது:
கடந்த டிசம்பர் 28ம்தேதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் இணைந்து தமிழகமெங்கும் காத்திருப்புப் போராட்டம்நடத்தின.

உணவு அமைச்சர் காமராஜ், திருவாரூரில் எங்களைச் சந்தித்து, டிசம்பர் 30 அன்று சென்னைக் கோட்டையில் உங் களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறோம், ஒரு நல்ல முடிவு எடுப்போம், போராட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தோம். அதேபோல், டிசம்பர்-30 அன்றுகோட்டையில் நடந்த பேச்சுவார்த்தையில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம், விவசாயப் பாதிப்பால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், வேலையின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் என நிவாரணம் அளித்திட வேண்டும். தாமதமாகும் பட்சத்தில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஏதேனும் ஒரு தொகையை முதலில் அளியுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவியுங்கள். பதற்றம் வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதலாவது தெரிவித்து, அறிக்கைவிடுங்கள் என்று அமைச்சர்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

முதலமைச்சரிடம் கலந்து பேசி ஆவன செய்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தார்கள். ஆனால், இதுவரை அரசு எதுவுமே செய்யவில்லை. இந்த ஆட்சிஇயங்குகிறதா என்பதே தெரியவில்லை. தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் அவர்களின் கவனமும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இன்னும் இரண்டொரு நாளில் இதுபற்றி இந்த அரசு ஏதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து பேசி, மிக விரைவில் கடையடைப்பு, பந்த் போன்ற போராட் டத்தை அறிவிப்போம்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, நாகைமாலி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடரும் துயரம் செல்லம்குப்பம் மண்ணு:

இதனிடையே, தமிழகத்தில் திங்களன்றும் ஒரே நாளில் 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்த செய்தி வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செல்லம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு (45). விவசாயியான இவர் தனது நிலத்தில் 2 ஏக்கருக்கு கரும்பு மற்றும் பயிர் விளைவித்திருந்தார். இந்நிலையில், சாகுபடி நேரத்தில் தண்ணீர் இல்லாததால் கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் காய்ந்து கருகின. மனம்உடைந்த அவர் திங்களன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆழங்காத்தான் செந்தமிழன்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆழங் காத் தான் பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தமிழன்( 62). இவர், தனது விளை நிலத்திற்கு சென்று கருகிய பயிரை பார்வையிட்ட தும், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற விவசாயிகள் செந்தமிழனை உடனடியாக மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை
பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

திருக்குவளை- கீழநாட்டிருப்பு பன்னீர்செல்வம்:

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருக்குவளைக்கு அருகிலுள்ள கீழ நாட்டிருப்பு என்னும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம்(50). இவர், கோயில் நிலத்தில் மூன்று ஏக்கரில் குத்தகைக்கு நேரடி நெல் விதைப்புச் செய்திருந்தார். உழவும் தனது வாழ்வும் பொய்த்துவிட்டன என்று சோகத்தால், அழுதழுது, மனம் தாங்க முடியாமல், ஞாயிற்றுக்கிழமை, மாலை சுமார் 5.30 மணியளவில், விவசாயி பன்னீர்செல்வம், தனது வீட்டிலேயே தூக்குப் போட்டு மரணத்தைத் தழுவினார்.

கீழ்வேளூர்-மேலக்காவாலக்குடி- தம்புசாமி:

கீழ்வேளூர் ஒன்றியம், வெண்மணிக்கு அருகிலுள்ள மேலக்
காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தம்புசாமி(57). இவர் 2 ஏக்கர் நிலத்தில் சம்பா நேரடி நெல் விதைப்புச் செய்திருந்தார். கருகிய பயிர்களைக் கண்டு ஆறாத் துயரில் புலம்பிக் கொண்டிருந்த தம்புசாமி, திங்கட்கிழமை காலை, மாரடைப்பு ஏற்பட்டுத் தனது வயலிலேயே சுருண்டு விழுந்து மாண்டு போனார்.

வாகைக்குளம் அழகர்சாமி:

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள வாகைக்குளம் விவசாயி அழகர்சாமி(60) தனக்கு சொந்தமான 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். ஏக்கருக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் செலவு செய்திருந்த நிலையில் தொடர்ந்து மழை இல்லாததால் பயிர்கள் வாடின. இதைக் கண்ட விவசாயி அழகர்சாமி மன வேதனையுடன் வீட்டிற்கு சென்றுள்ளர். வீட்டு வாசலுக்கு சென்றவுடன் மயங்கிய நிலையில் கீழே விழுந்து மரணமடைந்தார்.

Leave A Reply