இடாநகர், டிச. 30 –
அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியிலிருந்து, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா கண்டு, துணைமுதல்வர் சவுனா மீன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர 5 எம்எல்ஏ-க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.60 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 47 உறுப்பினர்களின் பலத்துடன், நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.

இந்த ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்க்க முயன்ற பாஜக, காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்கள் 30 பேரை வளைத்துப் போட்டு, தனது கைப்பாவையான கலிகோ என்பவரை முதல்வர் ஆக்கியது. இதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், திடீரென அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியையும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது.காங்கிரஸ் கட்சி, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ததுடன், நபம் துகி வசமே மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இதனிடையே அதிருப்தி எம்எல்ஏ-க்களும் காங்கிர சுக்கு திரும்பினர். பேமா கண்டு, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுனா மீன் துணை முதல்வரானார்.
நிலைமை சுமுகமானது என்றிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென முதல்வர் பேமா கண்டுவும், ஆதரவு எம்எல்ஏ-க்கள் 42 பேருமாக மொத்தம் 43 பேர், காங்கிரஸிலிருந்து கூண்டோடு விலகி ‘அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி’க்குத் தாவினர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில்தான், எந்த கட்சிக்கு முதல்வர் பேமா கண்டுவும், துணை முதல்வர் சவுனா மீனும் தாவினார்களோ, அந்த கட்சியிலிருந்து அவர்கள் வெள்ளி யன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுடன் 5 எம்எல்ஏ-க்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சித் தலைவர் கபியா பென்ஜியா வெளியிட்டுள்ளார்.

புதிய முதல்வர்:
அடுத்தக் கட்டமாக முதல்வர் பதவியிலிருந்தும் பேமா கண்டு நீக்கப்படலாம்; டக்கம்பாரியோ புதிய முதல்வர் ஆவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டக்கம்பாரியோ அருணாச்சலப் பிரதேசத்தின் பணக்கார எம்.எல்.ஏ. ஆவார். அவரின் சொத்து மதிப்பு ரூ.187 கோடி ஆகும். கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் இருந்தே அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் அரசியல் நிலையின்மை நீடித்து வருகிறது. இந்த குழப்படியில், 45 உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.