நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் மூலம் இன்று பெரும் பகுதியான தகவல்கள் மற்றும் கோப்புகளை பரிமாறி வருகிறோம். அதில் அனைவரும் எளிதாக பார்க்க முடியும் வகையில் அதன் உருவ அமைப்பு மாறாமல் இருப்பதற்கு பிடிஎப் வடிவிலான கோப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அனைத்து கோப்புகளையும் பிடிஎப் வடிவில் மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தான் தற்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து கோப்புகளையும் பிடிஎப் வடிவில் மாற்ற வசதியாக ஆண்ட்ராய்டு பிடிஎப் கன்வெர்டர் வந்திருக்கிறது. அதனை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலி மூலம் நாம் மொபைலில் பயன்படுத்தும் அனைத்து கோப்புகளையும் பிடிஎப் கோப்பாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
நமக்கு வரும் இ மெயில்கள், நாம் எடுக்கும் புகைப்படங்கள், நமது மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், நாம் பார்க்கும் இணைய பக்கங்கள் உள்ளிட்டவற்றை பிடிஎப் கோப்பாக மாற்றி எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். சேமித்து வைக்கவும் முடியும். ஆண்ட்ராய்டு பிடிஎப் கன்வெர்டர் செயலியிலேயே புகைப்படம், கிளிப்போர்ட், பைல்ஸ், க்ளவுட் சர்வீஸ், மெஜெஸ், மெயில், காண்டெக்ட் , நோட்ஸ் உள்ளிட்டவை முகப்பிலேயே கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் தாங்கள் எந்த கோப்பினை பிடிஎப் ஆக மாற்ற விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து அதன் வலது ஓரத்தில் இருக்கும் பிடிஎப் என்கிற பகுதியை அழுத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட கோப்பை பிடிஎப் ஆக மாற்றி அதனை அந்த மொபைலிலேயே சேமித்துக் கொள்ளும். நாம் தேவைப்படும் போது அதனை மெயில் மூலமோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். மிகவும் எளிதாக நாம் அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும் பிடிஎப் கோப்பாக மாற்றும் போதே அதில் என்ன பெயரில் அதனை சேமிக்க வேண்டுமோ அந்த பெயரில் சேமித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலில் உள்ள கூடுதல் வசதி என்ன வென்றால் பிடிஎப் ஆக மாற்றும் பல்வேறு கோப்புகளை இணைந்து ஒரே கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக நமக்கு வரும் குறுஞ்செய்திகளில் நாம் தேவைப்படும் என நினைக்கும் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரே பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதே போல்தான் அனைத்து கோப்புகளையும் தேவையானவற்றை ஒரே கோப்பாக ஒருங்கிணைத்து அதனை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.

இணைய உலாவிகள் மூலம்
இணைய பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற…

நாம் கணினியை பயன்படுத்தும் போது அதில் இருக்கும் பல்வேறு வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளிலும் வந்து விட்டது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது இணைய பக்கங்களை பிடிஎப் பைலாக மாற்றும் வசதியும் ஆண்ட்ராய்டில் பயன்படுத்தும் உலாவிகளில் வந்திருக்கிறது. அதனை பயன்படுத்தி இணைய பக்கங்களை பிடிஎப் பைலாக மாற்றிக்கொள்ளலாம். குறிப்பாக கூகுள் குரோம் இணைய உலாவிகளை நாம் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தும் போது அதன் வலது புறம் மேல் பகுதியில் உள்ள மெனு பகுதியில் உள்ள save pdf என்பதை தேர்வு செய்து save செய்து கொள்ளலாம். அப்போது நாம் பார்த்த இணைய பக்கம் பிடிஎப் பைலாக மாறியிருக்கும்.
இதே போல் பயர்பாக்ஸ் இணைய உலாவியை பயன்படுத்தும் போது அதன் மெனு பகுதிக்கு சென்று அதில் print என்பதை தேர்வு செய்து அதன் பின்னர் save as PDF என்ற வசதியை பயன்படுத்தி இணைய பக்கத்தை பிடிஎப் பைலாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

Leave A Reply