மோடியால் வாசனை இழந்த ஏலக்காய்

ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பினால் ஏலக்காய் விவசாயி மற்றும் வியாபாரிகள் துயரம் அதிகரித்துவிட்டது.நவம்பர் மாதம் 8 ஆம் தேதி உலகத்தில் உள்ள இந்தியர்கள் மறக்கமுடியாத நாள் . ஆம் இந்திய மக்களை காக்க அவதாரம் எடுத்த பிரதமர் மோடி எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து செல்வந்தர்கள் எளிதாக பதுக்க ரூ 2000 நோட்டுகளை புழக்கத்தில்விட்ட நாள்.தேனி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் பேர் கேரளாவில் உள்ள ஏலத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள். சில ஆயிரம் பேர் இடுக்கி மாவட்டத்தில் ஏலம் விவசாயம் செய்து வருபவர்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏலக்காய் வியாபாரிகளாக விளங்கிவருகிறார்கள்.

இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல்லாயிரம் பேர் கேரளாவில் தங்கி தோட்டத் தொழிலாளர்களாக வாழ்க்கை நடத்துபவர்கள் .சில ஆயிரம் பேர்கள் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து உயிரை பணயம் வைத்து மலைச் சாலைகளில் சுமார் 60 கிலோ மீட்டர் வரை பயணித்து தோட்ட வேலை செய்பவர்கள். மேலும் சில ஆயிரம் பேர் போடி, தேவாரம், கம்பம், பண்ணைப்புரம் உள்ளிட்ட இடங்களில் ஏலக்காயை தரம் பிரித்து பழுது பார்க்கும் பெண் கூலி தொழிலாளர்கள் விளங்கும் மாவட்டமாக விளங்குகிறது தேனி. இத்தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்களும் உள்ளனர் .ரூ.1000,500 செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் ஏலக்காய் தற்போது வாசம் இழந்து காணப்படுகிறது .

ஏல விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடிவருகிறார்கள் .ஏலக்காய் ஓரளவு நல்ல விலைகிடைத்தாலும் உடனடியாக பணம் கிடைப்பதில்லை. கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்கித் தான் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருந்து, உரம் போன்றவை கடையில் இருந்தும், பணம் வங்கியில் இருந்தும் விவசாயிகள் வாங்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள் .ஏடிஎம் மையங்களில் இரண்டு, மூன்று மணி நேரம் நின்று ரூ.2500 மட்டுமே எடுக்க முடிகிறது.

வங்கியில் போய் கேட்டால் பணம் இல்லை. எங்களால் வேறு நபர் கணக்கிற்கு மாற்ற முடியும் என்கிறார்கள் என்றார் மூலத்துறை விவசாயி வேல்சாமி.சிறு விவசாயி ராமசாமி என்பவர் கூறுகையில், தோட்ட வேலைக்கு பணம் இல்லை. கையில் உள்ள 30 கிலோ ஏலக்காயை விற்றால் தான் வேலை செய்யமுடியும். சாப்பிட முடியும். முன்னர் சிறு வியாபாரியிடம் காயை கொடுத்து விட்டு பணம் பெறுவோம். இப்பொது பணத்தட்டுப்பாட்டால் சிறு வியாபாரி வாங்க வில்லை என்றார்.வியாபாரி சிவக்குமார் என்பவர் கூறுகையில், மோடியின் அறிவிப்பால் ஏலக்காய் தொழில் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

வியாபாரிகளிடம் ரொக்கம் கொடுத்து வாங்க பணம் இல்லை .காசோலை கொடுத்தால் விவசாயிகள் வாங்க மறுக்கிறார்கள். அவர்களுக்கும் பணம் தேவைப்படுகிறது .காசோலையை வங்கியில் போட்டால் கணக்கில் வரவு தான் வைக்க முடியும்.பணம் வராது .சர்க்கரை என்று தாளில் எழுதி நக்கினால் இனிக்குமா என்று சொல்வார்களே அது போல செக்கில் எழுதினால் பணம் கிடைக்க வேண்டுமே என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார். பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் கிடக்கிறது. சில ஏடிஎம்களில் மட்டும் ரூ 2ஆயிரம் மட்டுமே வருகிறது. பணம் இல்லாமல் அவதிப்படுகிறோம் என்றார் ஏலக்காய் வியாபாரி ரமேஷ்.

எஸ்.முத்து, தேனி

Leave a Reply

You must be logged in to post a comment.