சென்னை,டிச 9-

உயர்நீதிமன்றங்களில் ஒரு மாதிரியாகவும், மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் வெவ்வேறு மாதிரியாகவும் நீதிமன்றக் கட்டணங்கள் வசூலிக்கப் பட்டு வருகின்றன.

30 விழுக்காடு வரையிலான நீதிமன்றக் கட்டணங்களால் வழக்கு போடுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீதிமன்றக் கட்டணங்களை 2 முதல் 3 விழுக்காடாக  மாற்றி அமைக்க வேண்டும் என  மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத் குழு பரிந்துரை செய்திருந்தது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா நேரில் ஆஜராகியிருந்தார்.விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, “நீதிமன்றக் கட்டணங்களை ஒரே மாதிரியாக மாற்றியமைப்பது தொடர்பான கோப்புக்கு உள்துறை, சட்டத் துறைகள் ஒப்புதல் வழங்கி விட்டன. தற்போது நிதித்துறை வசம் அந்த கோப்புகள் உள்ளன.

நிதித்துறையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அதுகுறித்து சுற்றறிக்கை வெளியிடப்படும்’ என்றார்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 22-க்கு ஒத்திவைத்தனர்.

அதற்குள் இதுதொடர் பாக நீதிபதி கே. சம்பத் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்று நீதிமன்ற முத்திரைக் கட்டணம் குறித்து தகுந்த அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும், அதற்குள் அறிவிப்பாணை வெளியிடா விட்டால் அன்றைய தினம் மீண்டும் உள்துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.