கவிதைகள் பலரகம். பாரத் மனோகரின் தொகுதி புதுரகம்! கவிதையை நீட்டி முழக்குவது ஒருவகை! நச்சென்று சொல்வது ஒருவகை! “இரும்பைக்காய்ச்சி உருக்கிடுவீரே! எந்திரங்கள் வகுத்திடுவீரே! கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே! கடலில் மூழ்கி முத்தெடுப்பீரே!”- இது பாரதியின் பாடல்.இதையே பாரதிதாசன் எழுதுகிறார்:
“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்!” – இரண்டுமே நன்றாகத்தான் இருக்கிறது! உள்ளடக்கம் ‘நச்’ என்றால் உருவம் எப்படியிருப்பினும் சரி! இது டுவிட்டர் காலம்! இரண்டு வரிதான்! சின்னஞ்சிறு உருவத்தில் மிகப்பெரும் உள்ளடக்கம்! கவிஞர் பாரத் மனோகர் எழுதுகிறார், “ஊசலாட்டம் இல்லை
யென்றால் அது தராசே அல்ல! நடுநிலை என்பது நழுவலின் மறு பெயர்!” எப்படி?
பண்ணையாள் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டார். “மேடேறி வந்து
பாத்தா நீண்டு கெடக்கு பாதை! இப்பத்தான் புரியுது இந்த உலகம் ரொம்பப் பெரிசு!’’-விடுதலையே ஏகாந்தம்அல்லவா?.
இப்படிப் பல்வேறு கவிதைகளில் பன்முகம் காட்டுகின்றன கவிதைகள். தன் மனைவி பற்றி ‘‘துடுப்பாக நீ வந்தாய்’’ என்று துவங்கி இரண்டு பக்கம் எழுதி ‘‘விழுதுகள் தாங்க நிலை பெறுக!’’ என்று நிறைவு செய்துள்ளார். கணவர்கள் படிக்க வேண்டிய கவிதை அது.
‘‘அன்பு மகனே கற்றுக்கொள். கல்வியை மட்டுமல்ல வாழ்வையும்!’’ என்பது கவிதை வடிவத்தில் மகனுக்கு எழுதிய கடிதம். மிக அருமை!
கைத்தொழில்கள் எல்லாம் நலிந்து போனதின் சார்பாக ஒரு குயவர் கூறு
வதாக ஒரு கவிதை! அது உங்கள் மனசாட்சியை எழுப்பும்! தொழிலாளி வர்க்கம்
சார்பாக கூவுகிறார் ‘‘நாளை உனது நாள் என்று’’! கண்தானம், அம்மா, லெனின், அம்பேத்கர் என்று பலவிதமான கவிதைகளால் தொகுதியை நிறைவு செய்துள்ளார். நம்மையும்தான்!

வழிப்போக்கனின் பார்வையில்….
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: பாரத் மனோகர்
வெளியீடு : இரத்னா பதிப்பகம்,
5/31, பெல்பூர், ஆறாம் தெரு,
திருவெறும்பூர், (அ.நி),
திருச்சிராப்பள்ளி – 620013
கைபேசி: 9894124683
பக்கம்: 80, விலை : ரூ.60/-

Leave a Reply

You must be logged in to post a comment.