மயிலாடுதுறை , நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஆலாலசுந்தரம் ஊராட்சிக்கு உட்பட்டது அழகியநத்தம் கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்  ரத்தினசபாபாதி.  இவரது மகன் நடராஜன் (60). காவிரி தண்ணீரை நம்பி கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். காவிரி தண்ணீர் கிடைக்காத நிலையில் நிலத்தடி நீரை நம்பிவிவசாயம் செய்து வருகிறார்.

மூன்று ஏக்கர் நெல் நாற்றுநட்டுள்ளார். நான்கு ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு செய்துள்ளார். இவர் தமதுநிலத்தில் 10  விவசாயத் தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்து வந்துள்ளார். பயிரை காப்பாற்றுவதற்காக நிலத்தில் சனிக்கிழமை  புதிதாக போர் போட்டுள்ளார்.  ஞாயிறன்று காலை ஏழு மணிக்கு தனது வயலுக்குச் சென்று புதிதாக போட்டபோர் மூலம்   தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியுள்ளார்.ஆனால், தண்ணீர்வரவில்லை.  அதே நேரத்தில் பயிர்கள் காய்ந்து கருகியிருப்பதைக் கண்டு  மனஉளைச்சல் அடைந்த அவர் வயலில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக நடராஜனை சிதம்பரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நடராஜன் விவசாயத்திற்காக சுமார் ஒரு லட்சம் ருபாய் வரை செலவு செய்துள்ளார். உயிரிழந்த நடராஜனுக்கு ஒரு மனனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

காவிரியில் இருந்து உரிய தண்ணீர் கிடைக்காததாலும், பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும் நாகப்பட்டினம் மாவட்டம் மட்டுமல்லாது டெல்டா மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பருவமழை பொய்ப்பால் அதிர்ச்சி மரணம், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தொடர்ந்து பலியாகும் துயரம்
நவம்பர் 4-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரை 11க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
(நமது நிருபர்கள்)

Leave a Reply

You must be logged in to post a comment.