சென்னை, உண்மையான கறுப்புப் பண பேர் வழிகளைத் தப்பிக்க விட்டுவிட்டு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்து எளிய மக்களைத் துயரத்தின் பிடியில் தள்ளிய பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை எதிர்த்து நவ.28 அன்று  தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகளின் போராட்டம் நடைபெறுகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ள மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30 வரை அகில இந்திய அளவில்  கிளர்ச்சி இயக்கம் நடத்துவது என்று தில்லியில் கூடிய 6 இடதுசாரி கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.தமிழகத்தில் இந்த மாபெரும் கிளர்ச்சி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம் எல்)-லிபரேசன், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று (நவ.25) ஆலோசனை நடத்தினர்.சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்-எல்) மாநிலச் செயலாளர் எஸ். குமாரசாமி, எஸ்யுசிஐ (சி) மாநிலச் செயலாளர் ஏ. ரங்கசாமி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.பிறகு, நான்கு கட்சிகளின் தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “இம்மாதம் 8ம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினத்தில் இருந்து 16 நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் நிலைமை சீரடையவில்லை. மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டே செல்கிறது” என்றார்.கொடும் பாதிப்புகள்மேலும் அவர் கூறியதாவது:

விளிம்பு நிலையில் உள்ள மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக ரொக்கப்பரிவர்த்தனையையே முழுமையாக நம்பி வாழ்கிறார்கள்.  உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினர்,விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்,  நடுத்தர மக்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள், வியாபாரிகள், தினக்கூலிபெறுவோர், ஊரக வேலை உறுதிச்சட்டத் தொழிலாளர்கள் என சகல தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் பாதிப்பால்  ஏற்கனவே 75 பேர் உயிரிழந்துவிட்டனர்.தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல் படமுடியாமல் முடங்கி விட்டன. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே, இந்த இரண்டு வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுமைக்கும் சிறு-குறுந் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள  நிலைமைகளைப் பார்க் கும்போது டிசம்பர் 30க்குள் பிரச்சனை தீரும் என்று தோன்றவில்லை.  எனவே,புதிய ரூபாய் நோட்டுகள்  கிடைத்து நிலைமை சீரடையும் வரைக்கும் பழைய500, 1000 ரூபாய் நோட்டு களை மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், பெரும் பணக்காரர்களுக்கு சலுகையாக வழங்கப் பட்டுள்ள 11 லட்சம் கோடி ரூபாயையும் திரும்பப் பெற  வேண்டும், வங்கிக் கடன்திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்.

சஹாரா-பிர்லா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும், வரி ஏய்ப்புக்கு வகைசெய்திடும் இரட்டை வரி ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும், வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போரின்  பெயர்களை வெளியிட வேண்டும், அவர் களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் பாதிக்கப்படும் மக்களின் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துபகுதி மக்களும், வணிகர்க ளும்,விவசாயிகளும், சிறு – குறு தொழில்முனைவோர்களும், ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறோம். இவ் வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.இந்த சந்திப்பின்போது சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ,சிபிஐ மாநில நிர்வாகிகள் பழனிச்சாமி, மு.வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.