இலக்கியம் ஆற்றல் மிக்க தொடர்பு முறைமை என்னும் உணர்வு, அறிவு ரீதியாக ஏற்பட்டுத் தொழிற்படுகின்றபொழுதுதான், இலக்கியத்தின் தன்மை, அதன் நோக்கம், அதுஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியன பற்றிய அறிவுநிலைநின்ற தேடுதல் ஆரம்பமாகின்றது. இத்தேடுதல் முயற்சியே இலக்கிய விமர்சனமாகும். இது ஒரு மூளையில் இலக்கியக் கோட்பாட்டு ஆய்வாகவும்  மறுமுனையில் அக்கோட்பாடுகளைப் பிரயோகித்துத் தனிப்பட்ட அன்றேல் ஒரு தொகுதியான ஆக்கங்களை ஆராயும் ஆய்வாகவும் அமையும். இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இருபுறங்கள் போன்றனவே. இலக்கியத்தின் தொடர்பு முக்கியத்துவம் விளங்கிக்கொள்ளப்படும் பொழுது, அதாவது எழுதவேண்டியன பற்றிய எண்ணத்துணிவும் உணர்ச்சித் தெளிவும் ஏற்படுகின்ற பொழுது, அதற்கு முன்னர் தோன்றிய ஆக்கங்கள் பற்றியும், சமகால சிந்தனைகள் பற்றியும், `பாரம்பரியம்’, `மரபு’ பற்றியும் ஆய்வுகள் தோன்றும்.

இலக்கிய விமர்சனம் கோட்பாட்டு நிலையிலும் பிரயோக ஆய்வு நிலையிலும் பாரம்பரியத்துக்கும் சமகால இலக்கிய நிகழ்வுகளுக்கும்  எதிர்கால இலக்கியத் தேவைகளுக்கும் இணைப்பினையும் இயைபினையும் ஏற்படுத்துகின்றது. அன்றேல் ஏற்படுத்த முனைகின்றது எனலாம். மூன்று காலங்களையும் உள்ளடக்காத இலக்கிய விமர்சனணர்வு உண்மையான இலக்கிய விமர்சன ஆக்கங்களுக்கு இடமளிக்க முடியாது. இலக்கியக் கோட்பாடுகள் விமர்சன நிலைப்பட்ட ஆய்வுகளிடையே தோன்றுபவை. பிரயோக விமர்சனங்கள் இலக்கியக் கோட்பாடுகள் வழிநின்று செய்யப்படும் நுண்ணிய தான ஆய்வுகளேயாகும்.இலக்கிய விமர்சன ஆய்வுநோக்கு வளர்வதற்கு, 1942 முதல் தனிப்பட்ட பல்கலைக்கழகமாக இயங்கிவந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, நடைமுறைப்படுத்தி வந்த பாடவிதான அமைப்பு முக்கிய பங்காற்றுகின்றது. இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறையின் இப்பணி 1950, 60களிலே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது.இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார்.

இவர் தமது முக்கிய ஆராய்ச்சி நூலான `யாழ் நூல்’ இல் பௌதிக விஞ்ஞானத்தையும் தமிழறிவையும் இணைந்த ஆய்வுமுறை பின்பற்றப்படுவதைக் காண்கிறோம்.விபுலானந்தரின் தனிப்பட்ட ஆய்வு நெறியிலும் பார்க்க முக்கிய இடம் வகிப்பது `தமிழ் இலக்கிய வரலாறு’என்னும் பாடநிர்ணயமே. இலக்கியத்தை முழுமையாகப் பார்க்கும் பண்புவிமர்சனத்துக்கு அச்சாணியாகும். தமிழ் இலக்கியத்தினை முழுமையாக எடுத்துக்காட்டி அம்முழுமையின் செல்நெறிகளையும் பாங்குகளையும் உணர்த்துவது இலக்கிய வரலாறு என்னும் பாடமேயாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முறையாக வரன்முறையான பாடமாகப் போதித்தது இலங்கைப் பல்கலைக் கழகமே ஆகும். இது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தீட்சண்ய நோக்கினால் ஏற்படுத்தப்பெற்ற புரட்சிகர மாற்றமாகும்.அடுத்து, இலக்கிய விமர்சனத்தையும் முதன் முதலில் ஒரு பாடமாக சிறப்புத் தமிழ் மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, தமிழை ஒரு பாடமாகப்பயின்ற பொதுக்கலை மாணவர்களுக்கும் பயிற்றிய பெருமையும் இலங்கைப் பல்கலைக் கழகத்துக்குண்டு.

தமிழக அறிஞர்கள் விமரிசன நூல்களென கண்ணோட்டத் தெளிவற்றஆங்கில மேற்கோட் கலவைகளை வெளியிட்டு வந்த காலத்தில் ஐ.ஏ.றிச்சர்ட்டின் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளுக்கு இயையத் தமது விரிவுரைகளை அமைத்து மாணவரின் இலக்கியக் கண்ணோட்டத்தினை செம்மைப்படுத்தியவர் பேராசிரியர் வி.செல்வநாயகம் ஆவார். இவரே முதன்முதலில் வரலாற்று நோக்கில் எழுதப்பெற்றதும், பின்னர் பலராலும் கடப்பாட்டுத் தெரிவிப்புடனும் அல்லாமலும் பின்பற்றப்பட்டதுமான தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியவர். மேலும் இலக்கிய வெளிப்பாடு என்பது உயர் இலக்கிய வகைகள் பற்றிய வரையறைப்பட்ட ஆய்வாக மாத்திரம் இருத்தல் முடியாது. அது நாட்டுப்பாடல், நாட்டுக் கூத்து முதலியவற்றையும் உள்ளடக்குமென்பதைத் தனது ஆய்வுகளின் மூலம் தெளிவாக்கியவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆவார்.  யாவற்றுக்கும் மேலாக முதன் முதலில் நவீன தமிழ் இலக்கியங்களைச் சிறப்புத் தமிழ்த் தேர்வுக்குப் பாட நூல்களாக்கிய பெருமையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தையே சாரும். இலங்கைப்பல்கலைக்கழகத்தின் இம்முன்னோடிச் சாதனை பற்றிமறைமலையடிகள் தமது `சிந்தனைக் கட்டுரைகள்’ நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 1950களிலேயே `புதுமைப் பித்தன்’ கதைகள் பாடபுத்தகமாக விதிக்கப்பெற்றிருந்தது. இதனால் தற்காலத் தமிழ் இலக்கிய ஆக்க எழுத்தாளர்கள் பரீட்சைத் தேவைகளுக்காக வரன் முறையாக ஆராயப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பாடவிதான அமைப்புக்களின் முன்னணி வழியாக வந்த மாணவர்கள் விமர்சனத்துறையில் முன்னணி இடத்தினைப் பெறத் தொடங்கினர்.

பெரும்பாலான பட்டதாரிகள் ஆசிரியர்களாகத் தொழில் மேற்கொண்டமையால் இவ்வணுகுமுறைகள் தேசப் பொதுவாக்கப்பட்டன.இவற்றுடன் நவீன இலக்கியமும் விமர்சனமும் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை நிலையிலும் பாடசாலைகளில் உயர் வகுப்புக்களிலும் மிக முக்கியமான துறைகளாக அமைக்கப்பெற்றன. இவை காரணமாக ஆசிரியர்கள்மட்டத்திலும் வாசகர்கள் மட்டத்திலும் நவீன இலக்கியக் கோட்பாடுகள், விமர்சன மரபுகள் பற்றிய அறிவு பரப்பப்பெற்றது.இலங்கையிற் கல்வியும் இலக்கியமும் ஜனநாயகப்படுத்தப்பட்ட முறைமையும் வேகமும் தமிழகத்திலிருந்து  வேறுபட்டதென்பதையும் இலங்கைத் தமிழ் மக்களின்எழுத்தறிவு விகிதமும் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதமும்  வேறுபட்டனவென்பதையும் மனத்திருத்தி நோக்கும் பொழுது மேற்கூறிய பண்புகளின் பொது நிலைப்பட்ட தாக்கத்தினை நன்கு விளங்கிக்கொள்ளலாம். இவற்றால் இலக்கிய விமர்சனம் முனைப்படைவதற்கான கல்விப் பின்னணியொன்று இலங்கையில் நிலவிற்று என்பதும் தெளிவாகின்றது.

(கா.சிவத்தம்பி எழுதிய ஈழத்தில் தமிழ்  இலக்கியம் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

You must be logged in to post a comment.