ஏய்ப்பவர்கள் நிற்கவேண்டிய

எல்லா வரிசையிலும்

ஏழைகளை நிறுத்துகிற ஏக இந்தியா

சோத்துக்கில்லாதவனிடம்

சொல்லாமல் வசூலிக்கிறது

கருப்புப்பணத்தை!

 

பித்தலாட்ட பெரும்புள்ளிகள்

கட்டாத பணத்தையெல்லாம்

வட்டியோடு வாங்கப்பார்க்கிறது

பஞ்சப் பராரிகளிடம்!

அதிக அதிகமாய்ச்

சொத்து சேர்த்தவர்களை

அதிகாரத்தில் அமர்த்திவிடும்

அன்னாடங் காய்ச்சிகளிடம்

ஆரம்பிக்கிறது விசாரணையை!

 
கோடியிலே கொழுத்தவர்கள்
கொண்டுபோன மானத்தை
தேடிக்கொண்டிருக்கிறது
தேய்ந்தவனின் கோவணத்தில்!
 
ஓட்டுக்கு மை வைத்தே
ஒன்றும் நடக்கவில்லை… அதற்குள்
நோட்டுக்கு மை வைக்க
நுழைகிறது நடவடிக்கை!
பத்துக்கு நூறாக
பணமுதலைப் பெருத்திருக்க
ஒப்புக்குக் கணக்கெழுதி
உருப்படுமா இந்நாடு!
 
ஒண்ணுக்கு வந்தாலும்
ஒதுங்கவும் வழியில்லா
வங்கிகளை வைத்துக்கொண்டு
எண்ணம் பலி க்குமென்று
எத்தனைநாள் பேசுவது?
ரூபாயில் சிரிக்கிறார் காந்தி
சிரிப்பாய் சிரிக்கிறார்கள் மக்கள்!

  • கவிஞர் யுகபாரதி
  • நன்றி : ஜூனியர் விகடன்

 

Leave a Reply

You must be logged in to post a comment.