கொடுமுடி தாலுகா, தாமரைப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.முத்துச்சாமி (70). விவசாயி. இவர், மூன்றரை ஏக்கர் குத்தகை நிலத்தில் மஞ்சள் பயிரிட்டிருந்தார். இதற்காக கொடுமுடி கத்தோலிக் சிரியன் வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஒரு ஏக்கருக்கு ரூ.1.10 லட்சம் வீதம் சாகுபடிக்காக செலவு செய்திருந்தார். போதிய மழை இல்லாததால் மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சியாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் மஞ்சள் பயிர்கள் கருகின. இதனால் மனமுடைந்த விவசாயி முத்துச்சாமி வெள்ளியன்று வயலிலேயே செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை குடித்து இறந்தார்.
இந்நிலையில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பிரபாகரனைச் சந்தித்து மனு அளித்துப் பேசினர்.
மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர்தான் விவசாயியின் உடலை
எடுப்போம் என்று கூறினர். இதன்பின்னர் ஆர்டிஓ, தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் விவசாயிஇறந்துகிடந்த வயலுக்கு வந்தனர். அதிகாரிகளிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் காளிங்கராயன் பாசன வாய்க்கால் சங்க நிர்வாகிகள் பேசினர். தற்கொலை செய்துகொண்ட முத்துச்சாமி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Leave A Reply