இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நான் ரஷ்ய இலக்கியங்கள் மற்றும் நாவல்களை படித்ததன் மூலமாக கம்யூனிஸ்ட் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டேன்.  ஜமீலா  நாவல், கூட்டுப் பண்ணைமுறை போராட்டம், கலை இலக்கியம், காதல் என்று அனைத்தையும் எதார்த்தமாகச் சொன்னது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் ரஷ்ய புரட்சியை கண்முன்னே கொண்டு வந்தது. புரட்சிக்கு முன்பாக 1917 ஆம் ஆண்டு வெளிவந்த ‘போரும் வாழ்வும்’ என்ற டால்ஸ்டாயின்  நாவலை, புரட்சியின் கண்ணாடி என்று லெனின் கூறினார்.

அந்த அளவிற்கு ரஷ்ய  இலக்கியங்கள் புரட்சிக்கு வித்திட்டன. சோவியத் புரட்சியும் இலக்கியங்களும் பல நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு உத்வேகம் ஊட்டின. ரஷ்யாவில் இருந்து நிலப் பிரபுக்கள், பெரும் முதலாளிகள் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பிய போது ரஷ்ய மண்ணில் புரட்சிப் பூ பூத்திருந்தது. வழக்கம் போல தங்களது சுமையை தூக்குவதற்கு தொழிலாளர்களை அவர்கள் பணித்த போது,  இங்கு புரட்சி நடந்துவிட்டது;  இனிமேல் இப்படிச் செய்ய முடியாது என்றனர். 1922 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா உருவானது. உலகம் முழுவதும் உருவான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறந்த இலக்கியவாதிகளாக இருந்துள்ளனர். சீன தேசத்துப் புரட்சியாளர் மாவோ சிறந்த இலக்கியவாதி. மகத்தான படைப்பாளியாம் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய், மூன்று தலைமுறை, 26 ஆண்களும் ஒரு பெண்ணும் போன்ற நாவல்கள் இன்றும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்று போல் வசதி வாய்ப்புகள்  இல்லாத நிலையில் நாடு முழுவதும் சுற்றித்திரிந்து அவர் படைத்த இலக்கியங்கள் இவை.

இவற்றின் மொழி பெயர்ப்புகள் பிற நாடுகளில் வேகமாகப் பரவின. இவற்றை வாசித்ததன் மூலமாக பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், மாவோ போன்ற தலைவர்கள் உருவானார்கள்; உத்வேகம் பெற்றார்கள். இந்தியாவிலும் சோவியத் புரட்சியின் தாக்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாகவி ரவீந்திர நாத் தாகூரும் அவர் போன்ற பலரும் ரஷ்யா சென்று வந்த பிறகு புரட்சியின் மகத்துவம் குறித்து இந்தியாவில் பேசத் துவங்கினர். இந்தப் பின்னணியில் தான் நமது நாட்டிலும் ஏராளமான இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் உருவாகினர். மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், பெரியார் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஏராளமான கலை, இலக்கிய அமைப்புகளும் இந்தியாவில் உருவாகின. ரஷ்ய இலக்கியவாதிகளை போல நாமும் சமூகத்தின்பால் பண்பாட்டுப் பற்றுக்கொண்டு வீரத்தை விளைவிப்போம்!  இந்தியப் புரட்சிக்குத் துணை புரிவோம்!

ச.தமிழ்ச்செல்வன்

Leave A Reply

%d bloggers like this: