மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் நகரின் விளிம்பில் அந்நகருடன் இணையும் சிகல்தானா கிராமத்தில் நரேந்திரமோடியின் கனவான பணமில்லா பொருளாதாரம் அரங்கேறிவிட்டது என்று தோன்றுகிறது. எவரிடமும் பணமில்லை, வங்கிகளில் இல்லை ஏடிஎம்களில் இல்லை விரக்தியில் அந்த ஏடிஎம்களின் முன்னே க்யூவரிசையில் நிற்போரிடமும் நிச்சயம் இல்லை, வங்கிகளுக்கு வெளியே வேன்களில் அமர்ந்திருக்கும் போலீசாரிடமும் எதுவும் இல்லை. ஆனால் மகிழ்ச்சி அடையுங்கள் அவர்களின் விரல்களில் இங்க் முத்திரை விரைவில் வைக்கப்படும். அவுரங்காபாத்தின் மதில் சுவர்களுக்குள் அமைந்துள்ள ஷாகாஞ்சின்ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத்கிளையில் விரக்தி மனப்பான்மையில் உள்ள வங்கி ஊழியர்கள் வறுமைநிலையிலுள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதற்காக சிரமம் எடுத்து வருகின்றனர் என்பதைக் காணமுடியும், அங்கேயும் பிறகிளைகளிலும் அழுக்காகிப் போனதால் அழிக்கப்படுவதற்காக திருப்பி அனுப்பப்பட இருந்த ரூ.50/100 நோட்டுக்கள் மீண்டும் சுற்றுக்கு விடப்படுவதற்காக தயார்படுத்தப்பட்டு வருவதை காணமுடிந்தது.

எங்களுக்கு வேறுவழியில்லை என்று கூறுகின்றனர் அந்த வங்கிஊழியர்கள். சிறிய மதிப்புநோட்டுகள் இப்போது மக்களுக்கு தேவைப்படுகிறது. அவர்களது அனைத்து வேலைகளும் கொடுக்கல் வாங்கல்களும் முற்றிலும் நின்றுபோய்விட்டன. அலுவலகத்துக்கு உள்ளேஊழியர்களுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வங்கியின் வெளியே ஒரு கிலோமீட்டர் வரை நீண்டிருக்கும் க்யூவிலிருந்து வந்த ஜாவித் ஹையாத்கான் என்ற ஒரு சிறுகடைக்காரர் தமது மகளின் திருமண அழைப்பை கொண்டு வந்து நம்மிடம் காட்டுகிறார். என்னுடைய கணக்கில் இருந்தது ரூ.27,000 மட்டுமே, மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள எனது மகளின் திருமணத்திற்காக ரூ.10,000 கேட்கிறேன். முந்தையநாள் ரூ.10000 எடுத்து விட்டதால் இன்று பணம் தரமறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் பாம்பு போல் நீண்டுள்ள க்யூவரிசையிலுள்ள அனைவருக்கும் கொடுப்பதற்கு போதுமான சில்லறை நோட்டுகள் இல்லையாம். க்யூவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறுதொகையை கொடுக்கப்போகிறார்களாம்.

ஹையாத்கான் தனது மகளின் திருமணத்துக்காக போட்டு வைத்திருந்த நிரந்தர வைப்புநிதியை உடைத்த பிறகு எஞ்சியிருக்கும் தொகை தான் இந்த 27000ரூபாய். பல எழுத்தாளர்கள், வல்லுநர்கள் மற்றும் அரசாங்க அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது  போல கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி தங்கம், பினாமி நில பேரங்கள் மற்றும் அயல்நாடுகளில் பதுக்கப்படுதல் போன்ற வடிவங்களிலேயே இருந்து வருகின்றன. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத் தலைவர் தலைமையில் இயங்கிய குழு 2012 ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் ஏற்கெனவே இரண்டுமுறை செய்யப்பட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் பரிதாபமாக தோல்வியில் முடிந்தன என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் மோடி அரசின் நடவடிக்கையை ஒரு அற்புத சாதனை என்று பாஜக பீற்றிக் கொள்கிறது. ஊடகங்களைச் சேர்ந்த சில கோமாளிகள் இந்த மிகமோசமான முட்டாள் தன நடவடிக்கைக்கு லாலிபாடி வருகிறார்கள். 2/3 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று நிதிஅமைச்சர் முதலில் தெரிவித்தார். பின்னர் 2/3 வாரங்கள் என்று திருத்திக் கொண்டார். இப்போது சாதனைநாயகர் மோடி 50 நாட்கள் தேவைப்படும் என்கிறார். க்யூவில் நின்று மரணம் அடைந்தவர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நாசிக் மாவட்டத்தின் லாசல்கயோனிலுள்ள வெங்காயச்சந்தை பணப்புழக்கம் இல்லாததால் மூடப்பட்டுவிட்டது. விதர்ப்பாவிலும் மராத் வாடாவிலும் பஞ்சின் விலை 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. காசோலைகளை மாற்றுவது ஏற்கெனவே பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. இப்போது யார் காசோலைகளை வாங்கிக்கொள்வார்கள் ஒரு முக்கிய வங்கிக்கு 975 ஏடிஎம்கள் உள்ளன. அவற்றில் 549 முற்றிலும் செயல்படவில்லை. 100/50 ரூபாய்நோட்டு தட்டுப்பாடு நீடித்தால் கிராமப்புறங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று வங்கி ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

கட்டிட தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வேலை செய்ததற்கான கூலியை வழங்காவிட்டால் அவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று ஒரு கட்டிட மேஸ்திரி தெரிவித்தார். க்யூவிலேயே மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதே பெரும்பிரச்சனையாகி வருகிறது. 2/3 நாட்களுக்கு வேண்டிய மளிகைச் சாமான்கள் தான் மிஞ்சியிருக்கின்றன பணம் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையுடன் தாய்மார்கள் இருந்து வருகின்றனர். விவசாயிகள் நிலமற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் சிறுகடைக்காரர்கள் போன்ற அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செல்லாத நோட்டுகள் ரூ.4500வரை மட்டுமே மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதுவும் ஒருமுறைதான் என்று கூறி விரலில்இங்க் குறிவைக்கப் போகிறார்களாம். மருத்துவமனைகளில் 1000/500 ரூபாய் நோட்டுகளை வாங்கலாம் என்று அரசு அனுமதித்தாலும் எந்த மருத்துவமனையிலும் வாங்கிக் கொள்ளமறுக்கிறார்கள். அதனால் நோயாளிகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க வேண்டியுள்ளது. இதற்கிடையே அனைவரின் கண்களும் நாசிக்கை நோக்கி திரும்பியுள்ளன. அங்கே தான் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுமைக்கும் அனுப்பப்படுகின்றன. கிராமப்புற மக்களின் கண்களில் புது நோட்டுகள் இதுவரை படவில்லை. அதன் மீது நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

-தமிழில் கி.இலக்குவன்

Leave a Reply

You must be logged in to post a comment.