இந்தியா சுதந்திரம் அடைந்த புதிது. வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய வளங்களை எல்லையற்றுக் கொள்ளையடித்து நாட்டைப் போண்டியாக்கிச் சென்ற சூழல்.  இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து உள்நாட்டு முதலாளிகள், மொத்த வியாபாரிகள், வெளிநாட்டினருடன் கூட்டுச் சேர்ந்து சுரண்டிய காலம். விளைவு? 1950களில் நாடெங்கும் வறட்சி; பஞ்சம்; பசி; பட்டினி; மரணம்.ஆந்திர மாநிலம் ராயலசீமாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் பட்டினி மரணம்; தற்கொலை மரணம்.தமிழ்நாட்டிலும் அதே நிலைமை. பதுக்கல், ஒதுக்கலால் படி அரிசி ஒரு ரூபாய் என்பதை மூன்று நான்கு ரூபாயாக உயர்த்தி பகல் கொள்ளையடித்த காலம். படி அரிசி பன்னிரண்டு அணா என்ற கோரிக்கையை முன்வைத்து கோஷமிட்டு கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்திய காலம். ஒரு நபருக்கு ஆறு அவுன்ஸ் மட்டுமே ரேசன் அரிசி என்ற காலம். கோவில்கள் பள்ளிகளில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டு ஏழைகளுக்கு இலவசக் கஞ்சி வார்த்த காலம். சமாளிக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தத்தளித்த காலம். உலக நாடுகள் பலவற்றிடம் உதவி கேட்டுக் கெஞ்சிய சோகம்! சோவியத் யூனியனிடமும் இந்திய அரசு உதவி கேட்டது.  அப்போது அங்கு இந்தியத் தூதுவராக இருந்தவர், பின்னாளில் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவர் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் சோவியத் ஜனாதிபதி ஸ்டாலினைச் சந்தித்து இந்திய நிலைமையை எடுத்துச் சொன்னார். இந்திய மக்களின் துன்ப துயரங்களை உணர்த்த ஸ்டாலின், சர்வபள்ளியார் முன்னிலையிலேயே ஓரிரண்டு இடங்களுக்கு போன் செய்தார். ‘கவலை வேண்டாம்.  நீங்கள் கேட்ட அளவைவிடக்  கூடுதலாகவே, கருங்கடல் துறைமுகங்கள் பாட்டம், பாகுவிலிருந்து நாளையே உணவுப் பொருட்கள், தானியங்கள் ஏற்றிக்கொண்டு இந்தியாவை நோக்கிக் கப்பல்கள் புறப்படுகின்றன’ என்றார் ஸ்டாலின். வியாபாரப் பேச்சுவார்த்தை, பேரம், ஒப்பந்தம் எதுவும் இல்லை. உடனடி உதவி உறுதிப்படுத்தப்பட்டது. சர்வபள்ளியாருக்குச் சந்தோஷம்! ஆச்சரியம்!!

– கே.ஏ.தேவராஜன்

Leave A Reply

%d bloggers like this: