( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக் கேடு.)
குப்புசாமி வாத்தியார் ஐபோன் 7 வாங்கி அதை 12ம் வகுப்பு வகுப்பறைக்குக் கொண்டு சென்றார். மேசை மீது வைத்துப் பாடம் நடத்தும்போது அது காணாமல் போய்விட்டது.
வாத்தியார் நேராக ஹெட்மாஸ்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டார். மைக்கில் அறிவித்தார். திருட்டுப் போன என் போனைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்போக்கிறேன். எல் கே ஜி முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் வரிசையாக 12ம் வகுப்பிற்குச் சென்று தாம் வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் காண்பித்து விவரம் சொல்லவேண்டும். இதுதான் அவரின் கட்டளை.
அனைத்து மாணவர்களும் கால் கடுக்க வரிசையில் நின்றார்கள். எல் கே ஜி குழந்தைகள் அழும்போது அவர்கள் தலையில் குட்டு விழுந்தது. 12ம் வகுப்பு மாணவர்களே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன தடிமாடுகளா என்று வசைச்சொல்லர்ச்சனை கிடைத்தது. அவர்களிடமிருந்த சாக்லெடுகள், லாலிபாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எல்லாம் முடிந்தும் போன் கிடைக்கவில்லை. லாலிபாப்பைப் பார்த்து தலையில் கை வைத்துக்கொண்டவர் போன் தொலைந்துபோன 12ம் வகுப்பை குப்புசாமி வாத்தியார் கண்டுகொள்ளவே இல்லை.
தனது போன் திரும்பக் கிடைக்கும் வரை எல் கே ஜி முதல் 11ம் வகுப்பு வரை தினம் ரெய்டு தொடரும் என்று அறிவித்தார்.
ஐபோனை லவுட்டியவர்களுக்கு தெளிவான செய்தியை குப்புசாமி வாத்தியாரின் அசாத்திய செயல்திட்டங்கள் தெரிவித்தன. ஸ்கெட்ச் நமக்கில்லை என்பதும் அந்த ஐபோனை விற்று அதில் குப்புசாமி வாத்தியாருக்கு அவர் பெயர் பொறித்த ஒரு பட்டுச் சட்டை பரிசளிக்கவும். தங்கள் செலவிலேயே அக்கம் பக்கத்து ஊர்களுக்குக் கூட்டிச் சென்று டெண்ட் கொட்டாயில் ஈஸ்ட் மென் கலர் படத்தைக் காட்டி அவருடன் கொட்டாய் வாசலில் செல்பி எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தனர்.
இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் எல் கே ஜி மாணாக்கர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கப் போவதாக குப்புசாமி வாத்தியார் உச்ச ஸ்தாயியில் மேசையைத் தட்டி உணர்ச்சிகரமாக கர்ஜித்துக்கொணிருந்ததைப் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் அவர் மூலம் வேறு எதை உருவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
12ப்பு மாணவனைப் பார்த்து உன்னைய ஏன் இன்னும் குப்புசாமி வாத்தியார் செக் பண்ணல என்று கேட்ட எல் கே ஜி மாணவனுக்கு நம் பள்ளிக்கூடத்தின் நன் மதிப்புக்காக இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளமாட்டாயா என்று தலைமேல் கொட்டு கிடைத்தது. ஏண்டா நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பதில் சொல்ற என்று கேட்டதற்கு, பள்ளிக்கூட வாட்ச்மென் வெயிலில் நின்று பெல் அடிக்கிறார், ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து வாய்ப்பாடு படிக்க உனக்குக் கசக்கிறதா என்ற பதிலில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் எல் கே ஜி மாணவன்.
ஏன் தம்பி வாத்தியார் போனக் கண்டுபிடிப்பதும், திருடியவர்களுக்கு தண்டனை தருவதும் நல்லதுதானே என்று அந்த எல் கே ஜி மாணாக்கனிடம் கேட்கப்பட்டது. என்னைப் பரிசோதித்ததையோ, என் லாலிபாப்பை வாங்கிக்கொண்டதையோ நான் குற்றம் சொல்லவில்லை. அவர் போன் தொலைந்துபோன 12ப்பை ஏன் பரிசோதிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்ற பதில் கிடைத்தது.
பள்ளியில் படிக்காத ஆசிரியரின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன்கள் நாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லையே? எங்களை யாரும் வரிசையில் நிற்கச் சொல்லவில்லையே ஏன் பொய்யாக செய்தி பரப்புகிறீர்கள் என்று அந்தப் பள்ளி மாணவர்களைக் கடிந்துகொண்டார்கள்.
அனைத்து மாணவர்களையும் பரிசோதித்தார்களா? இல்லை சில மாணவர்களே மீண்டும் , மீண்டும் வருகிறார்களா என்று சந்தேகம் அடைந்த குப்புசாமி வாத்தியார், பரிசோதித்து முடிந்த மாணாக்கர்களுக்கு நெயில்பாலீஷ் தடவும் ஐடியாவைக் கொண்டுவந்திருக்கிறார். போனை லவுட்டிய ஆளுக்கே அந்த காண்டிராக்டும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
புதிய போன் வாங்க எல் கே ஜி முதல், 11ம் வகுப்பு வரை வழுக்கி விழுந்த வாத்தியார் நிதி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு அனைவரும் நிதி அளிக்கவேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த நிதியை வசூலிக்கும் பொறுப்பு 12ப்பு மாணவர்களிடம் அளிக்கப்பட்டது.
குப்புசாமி வாத்தியாரைப் பார்த்துப் பாராட்டிய 12ப்பு மாணவர்கள், எப்படி இவ்வளவு தெளிவான , தைரியமான முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,
If you don’t know anything, create a problem and don’t solve it..
என்று ஏற்ற இறக்கத்துடன் கண்கள் விரியச் சொன்னதைப் பார்த்த 12ப்பு மாணவர்கள் அடுத்து வாத்தியார் வாங்கப்போகும் ஐபோன் 7எஸ் நமக்குத்தான் என்று நிம்மதியடைந்தனர்.
குப்புசாமி வாத்தியார் போனை கண்டுபிடிப்பாரா? 7S போன் யாருக்குக் கிடைக்கும்?
சுபம்.

Leave a Reply

You must be logged in to post a comment.