குடிநீர் என்பது தாகத்தை தணிக்கிற திரவம் மட்டுமல்ல, அது ஒரு உயிராதாரம். தாகத்தால் தவிக்கிறவருக்கு உதவுவது உள்பட சமூக வாழ்வின் பல்வேறு துடிப்புகளைக் காட்டுகிற பண்பாட்டுச் சாளரமும் கூட. ஒரு  குறிப்பிட்ட வட்டாரத்தில் தண்ணீர் வரவில்லை என்றால் மக்கள் காலிக் குடங்களோடு மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது இன்று இயல்பானதொரு  காட்சி. எப்போதாவது எங்காவது அப்படி மக்கள் போராடினார்கள் என்பதாகச் செய்தி வந்துகொண்டிருந்த காலத்தில், அந்தப் போராட்ட ஆயுதத்தை எல்லோரும் கைகளில் எடுக்கிற உணர்வை நீரூற்றி வளர்த்தது 1981ல் வெளியான ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம். தமிழ் சினிமாவின் திருப்புமுனைப் படங்களில் ஒன்றாக அடையாளம் பெற்ற அந்தப் படைப்பில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் சினிமா மெருகேற்றல்கள் இருந்தன என்ற போதிலும், அது கோமல் சுவாமிநாதன் படைத்தளித்த வெற்றிகரமான நாடகம் என்பதும் பதிவானது. விடுதலைப் போராட்டத்தின்போது புராணக்கதைகள் சார்ந்த காட்சிகளின் வழியாகக்கூட அரசியல் பேசிய பெருமை தமிழ் நாடகத்திற்கு உண்டு. கூர்மையான சமூக விமர்சனங்களை மக்கள் சிந்தனைக்குக் கொண்டுசென்ற நாடகங்கள் அந்தப் பெருமையின் மீது ஒளி பாய்ச்சின. காலப்போக்கில் மேலோட்டமான கதைகளும் நகைக்சுவைத் துணுக்குக் கோர்ப்புகளுமே மேடை நாடகங்களாக ஒளிமங்கிக்கொண்டிருந்தன.  சமூக அக்கறை என்ற முற்போக்கு நாடக மரபை மறுபடியும் முன்னெடுத்த ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு திருப்புமுனை நாடகமாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கோடையிடி கோமல்:

நாடகக் கதாசிரியர், இயக்குநர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பத்திரிகையாளர், மேடைப் பேச்சாளர், அமைப்பாளர், களப்பணியாளர் என்ற பன்முக அடையாளங்களைக் கொண்டிருந்த சுவாமிநாதன் 1935 ஜனவரி 27ல் அன்றைய செட்டிநாடு பகுதியின் கோமல் கிராமத்தில் சீனிவாசன்-அன்னபூரணி இணையருக்குப் பிறந்தார். மகனின் கல்வி, கலை ஈடுபாடுகளுக்கு அவர்கள் துணையாக இருந்தனர். தமது 17வது வயதிலேயே அரசியல் ஈடுபாடு ஏற்பட்டவராக, காங்கிரஸ் கட்சி மேடைகளில் ஏறிப்பேசினார். இடி முழங்குவது போல் பேசக்கூடியவராக இருந்த அவருக்கு அன்று ‘கோடையிடி கோமல்’ என்றே பட்டப்பெயர் வழங்கியதாம்! காமராஜரின் அன்புக்குரியவராகவும் அந்த இளைஞர் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, சுவாமிநாதன் என்ற பெயரில் வேறு சிலரும் இருந்த நிலையில் அவரை அடையாளப்படுத்த அவரது பெயருடன், அவர் பிறந்த ஊரான ‘கோமல்’ என சேர்க்கப்பட்டது. 1969ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது ‘இதயத்துடிப்பு’ என்ற நாடகத்தை மேடையேற்றினார். பின்னர் படிப்படியாக முழு நேர அரசியல் பணியிலிருந்து கலைத்துறையில் கால் பதித்தார். நடிகர்கள் எஸ்.வி. சகஸ்ரநாமம், பி.எஸ்.ராமையா, முத்துராமன் ஆகியோரது நட்பைப் பெற்ற கோமல் சுவாமிநாதனின் படைப்பாற்றல் இயல்பாக நாடக மேடைக்கு அவரை இட்டுச் சென்றது. எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவிற்காக ‘புதியபாதை,’ ‘மின்னல்காலம்,’ ‘தில்லைநாயகம்’ ஆகிய நாடகங்களை எழுதினார். குடும்பம் சார்ந்த கதையோட்டத்தில் நுட்பமான சமூக விமர்சனங்களை வெளிப்படுத்திய நாடகங்கள் அவை. மேஜர் சுந்தரராஜனுக்காக ‘டில்லி மாமியார்,’ ‘அவன் பார்த்துப்பான்,’ ‘அப்பாவி,’ ஆகிய நாடகங்களை எழுதினார். ‘ஆச்சி’ மனோரமாவுக்காக எழுதிய ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’ பின்னர் தொலைக்காட்சித் தொடராகவும் புகழ் பெற்றது. ‘அசோக வனம்,’ ‘நாற்காலி,’ ‘இருட்டிலே தேடாதீங்க’ ஆகிய நாடகங்களும் பின்னர் தொலைக்காட்சிப் படங்களாக உருவெடுத்தன. எல்லா நாடகங்களும் அரசியல், சமூக எள்ளல்களோடு வாய்விட்டுச் சிரிக்க வைத்தன, மாற்றங்கள் பற்றிச் சிந்திக்க வைத்தன. திரைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து அன்றைய வெற்றித் தயாரிப்புகளான ‘கற்பகம்,’ ‘கைகொடுத்த தெய்வம்,’ உள்ளிட்ட படங்களிலும், ‘சாரதா’ படத்தின் இந்தி மறுதயாரிப்பிலும் பணியாற்றினார். தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்தி திரைப்படங்களிலும் பணியாற்றினார். அவரது மனதில் சுடர்விட்டுகொண்டிருந்தது என்னவோ நாடகத்தின் மீதான காதல்தான்.

முத்திரை நாடகங்கள்:

தனது நண்பர்களோடு இணைந்து ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ குழுவை உருவாக்கினார். ‘சன்னதிதெரு,’ ‘நவாப் நாற்காலி,’ ‘மந்திரிகுமாரி,’ ‘பட்டணம்  பறிபோகிறது,’ ‘வாழ்வின் வாசல்,’ ‘ஜீசஸ் வருவார்,’ ‘யுத்த காண்டம்,’ ‘ராஜ பரம்பரை,’ ‘அஞ்சு புலி ஒரு பெண்,’ ‘கூடு இல்லா கோலங்கள்,’ ‘ஆட்சி மாற்றம்,’ ‘சுல்தான் ஏகாதசி,’ ‘சொர்க்க பூமி,’ ‘செக்கு மாடுகள்,’ ‘ஒரு இந்தியக் கனவு,’ ‘அசோக வனம்,’ ‘நள்ளிரவில் பெற்றோம்,’ ‘மனிதன் என்னும் தீவு,’ ‘கறுப்பு வியாழக்கிழமை,’  ‘கிராம ராஜ்யம்,’ ‘அன்புக்குப் பஞ்சமில்லை,’ ‘டாக்டருக்கு மருந்து,’ ‘கல்யாண சூப்பர் மார்க்கெட்,’ ‘கிள்ளியூர் கனகம்’ ஆகியவை அவரது எழுத்திலும் இயக்கத்திலும் மேடைகளில் தனி முத்திரை பதித்த இதர நாடகங்களாகும். இந்த நாடகங்களின் தலைப்புகளே, மாறுபட்ட கதைகளையும் அரசியல்-சமூகப் பிரச்சனைகளையும் அவர் கையாண்டார் என்பதை உணர்த்துவதைக் காணலாம். அதே முனைப்போடு 1980ல் எழுதிய நாடகம்தான் ‘தண்ணீர் தண்ணீர்.’ பழகிய வடிவத்திலேயே நடைபோட்டுக்கொண்டிருந்த தமிழ் நாடக மேடையில் ‘நள்ளிரவில் பெற்றோம்’ புதிய கலைச் சித்தரிப்புகளை முன்வைத்தது. அதன் வெற்றி தந்த நம்பிக்கையோடு மறுபடி திரையுலக்கு வந்த கோமல், ‘ஒரு இந்தியக் கனவு,’ ‘அனல் காற்று’ ஆகிய படங்களை இயக்கினார். முப்பது ஆண்டுகளுக்குப் பிந்தைய எதிர்காலத்தில் கூர்மையான அரசியல் அக்கறையோடும் சமூக விமர்சனத்தோடும் ஒரு இளைய படைப்பாளிப் படை தமிழ்த் திரையுலகில் வெற்றிப் பயணம் மேற்கொள்ளப்போவதற்குக் கட்டியம் கூறிய படங்கள் அவை.

பத்திரிகையாளராக:

வாசிப்பு வேட்கை கொண்டவரான கோமல் அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதி வந்தார்.  பிற்காலத்தில் ஸ்ரீராம் குரூப்ஸ் நிறுவனம் நடத்திய ‘சுபமங்களா’ பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அப்படியொரு பெயர் தாங்கிய பத்திரிகை அவரது திட்டமிட்ட செயல்பாடுகளால் முற்போக்குச் சிந்தனைகளுக்கும், அடர்த்தியான நேர்காணல்களுக்கும், ஆழமான விவாதங்களுக்குமான ஒரு இலக்கியக் கூடமாக அடையாளம் பெற்றது.ஒரு காந்தியவாதியாகத் தொடங்கியவர் படிப்படியாக சிவப்புச் சிந்தனைகளை மனதில் பதியமிட்டுக்கொண்டதன் வெளிப்பாட்டை அவரது நாடகங்களில் ஏற்பட்ட மாற்றங்களிலும் திரைப்படங்களிலும் பத்திரிகைப் பணியிலும் காண முடியும்.

தமுஎகசவின் தோழனாக…

அதன் விளைச்சலாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தற்போது தமுஎகச நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கிய அவர், பின்னர் அதன் ஒரு உறுப்பினராகவே தன்னை இணைத்துக்கொண்டார். அதன் சென்னை மாவட்டத் தலைவராக(செயலாளர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், பொருளாளர் இரா.தெ. முத்து) அரும்பணியாற்றிய கோமல், 1993ல் சென்னையில் நடைபெற்ற தமுஎச 6வது மாநில மாநாட்டின்போது வரவேற்புக் குழு துணைத்தலைவராகச் செயல்பட்டு (தலைவர் பாலு மகேந்திரா) மாநாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். அதே மாநாட்டில் சங்கத்தின் மாநில துணைத்தலைவராகவும் (தலைவர் கே. முத்தையா, பொதுச்செயலாளர் அருணன்) தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையில் தமுஎச நடத்திய நாடக விழா, மதுரையில் நடத்திய நாடக முகாம் ஆகியவற்றின் வெற்றியில் கோமலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தமிழ்த் திரையுலகம் – தமுஎச இரண்டுக்கும் அவர் ஒரு பாலமாக இருந்தார் எனலாம். பாலு மகேந்திரா உள்ளிட்ட பலரையும் தமுஎச மேடைகளுக்கு வரவழைத்ததில் தலையாய பங்காற்றியவர் அவர். திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது திரைப்படங்களில் அரசை விமர்சித்தால் சிறைத்தண்டனை என்ற ‘சூப்பர் சினிமா தணிக்கைச்சட்ட முன்வரைவு’ கொண்டுவரப்பட்டது. கலைவழி கருத்துச் சுதந்திரத்தின் மீதான அந்தத் தாக்குதலைக் கண்டு திரையுலகினர் திகைத்துப்போய் நின்றபோது, தமுஎச சார்பில் சென்னையில் கண்டனப் பேரணியும், திரைப்பட பாதுகாப்பு மாநாடும் நடத்தப்பட்டன. பேரணியின் தொடக்கத்தில் சங்கத்தினர் மட்டுமே பெருமளவில் கலந்துகொண்ட நிலையில் கோமல் முக்கிய கலைஞர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நமக்காகக் குரல் கொடுக்க ஒரு பேரணியை நடத்துகிறார்கள், நாம் பங்கேற்க வேண்டாமா” என்று அவர்களது மனசாட்சியைத் தட்டினார். பேரணி மாநாட்டு அரங்கை அடைந்தபோது திரையுலகினரும் சேர்ந்துகொண்ட வெள்ளமாய் அது திரண்டிருந்தது. அந்தச் சட்ட முன்வரைவு குப்பைக்கூடைக்குப் போனதில் அவரது முன்முயற்சியோடு நடந்த அந்த மாநாட்டிற்கும் முக்கியப் பங்கு உண்டு.

தொடரும் கலை முனைப்பு:

தமிழகம் அவரிடமிருந்து மேலும் பல கலை, இலக்கிய முனைப்புகளை எதிர்பார்த்திருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் 1995 அக்டோபர் 28 அன்று, அவரது 60வது வயதில் அவருடைய முனைப்புகள் நின்றுவிட்டன. அந்தப் பேரிழப்பை ஈடு செய்வது அத்தனை எளிதா என்ன? ஆனால், தன் முனைப்புகள் தன்னோடு நின்றுபோவதை கோமல் ஒருபோதும் விரும்ப மாட்டார். அந்தப் புரிதலோடு, அவருடைய அன்பு மகள் லலிதா தாரிணி நாடக மேடையில் கோமல் அடையாளங்களை மீட்டமைக்கிற சீர்மிகு பணியைத் தொடங்கியிருக்கிறார். தாயார் விஜயலட்சுமி மனம் மகிழ, தம்பிகள் சத்யா, ரவி, கணவர் கணேஷ் ஆகியோரது ஒத்துழைப்போடும், கோமலோடு பணியாற்றிய கலைஞர்களின் துணையோடும் அவர் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளார்.  ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ குழுவை மறுபடி இயக்கி  தந்தையின் முத்திரை நாடகங்களை மறுபடி மேடையேற்றத் தொடங்கியிருக்கிறார். கோமலின் மற்றொரு கலை வாரிசாக தாரிணியின் புதல்வர் ஆனந்த் சங்கர் திரைப்பட இயக்குநராக உருவெடுத்திருக்கிறார்.கோமல் எழுதிய நாடகங்கள் மட்டுமல்லாமல் காலத்தின் தேவைக்கேற்ப புதிய நாடகங்களையும் மக்களிடையே கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார். முற்போக்கான ஆக்கங்களுக்கு என்றும் உறுதுணையாக வருவோர் இந்த முயற்சிகளுக்கும் தோள்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இன்று மீண்டும் அரங்கேற்றம்:

கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’, அவர் அப்போது எழுதிய  அதே உரையாடல்களையும் காட்சியமைப்புகளையும் மாற்றாமல், அவரது 80வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் (இன்று மாலை, சென்னை நாரதகான சபா அரங்கம்) அரங்கேற்றப்படுகிறது. குடிநீர் உரிமைக்காக இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் எளிய மக்கள். அவ்வாறு போராட வேண்டியதில்லை என்ற வெற்றி நிலைநாட்டப்படுகிற வரையில் மக்களைச் சென்றடைந்துக்கொண்டே இருக்க வேண்டிய நாடகமல்லவா அது? நாட்டுக்கு சேதி சொன்ன இன்னொரு நாகரிகக் கோமாளியான கோமல் மனதில் ஏந்திய சமூக மாற்றங்களுக்கான லட்சியங்கள் நிறைவேறுகிற வரையில் முற்போக்குக் கலையாக்கங்கள் மக்களோடு உறவாடிக்கொண்டே இருக்க இந்த விழா ஒரு உந்துதலாக அமையும்.

Leave a Reply

You must be logged in to post a comment.