ஒரு மக்கள் ஊழியர் எப்படி இருக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கேரள நிதியமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக், கடந்த 8-ம் தேதியன்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த தாமஸ் ஐசக், “இது மிகப்பெரும் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும். சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் கடுமையாக பாதிக்கும். ஓரளவு கள்ள நோட்டுகளை ஒழிக்க இந்த நடவடிக்கை உதவக்கூடும். ஆனால் கறுப்புப்பணத்தை ஒன்றுமே செய்ய இயலாது, பெரும்பகுதி கறுப்புப்பணமும் ரூபாய் நோட்டுகளாக அல்லாமல் அயல்நாடுகளில் வேறு முதலீடுகளாக பதுக்கப்பட்டிருக்கின்றன “ என்றும் தெளிவாக விளக்கினார்.

“நாட்டின் புழக்கத்திலுள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 86% பங்களிப்பை 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான் செலுத்தி வருகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாக செல்லாததாக்கியது ரூபாய் நோட்டுகளைப் பற்றிய பாலபாடத்தை மோடி அறியாததன் விளைவே ஆகும்” என்று பிரதமரை கடுமையாக விமர்சித்தார். இத்தகைய நடவடிக்கைகள் சாதாரண மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதோடு சில்லறை வர்த்தகத்தின் ஆணிவேரையே அசைத்து பிய்த்தெறியும், கிராமப்புறப் பொருளாதாரம் அடியோடு நலிவடையும், அவசர அவசரமாக, எந்த முன்னேற்பாடுமின்றி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது, நாட்டை கடும் பொருளாதார சிக்கலுக்குள்ளாக்கும், உற்பத்தி பெருமளவு பாதிக்கும், ரூபாய் நோட்டுகள் மூலமான வர்த்தகம் ஸ்தம்பிக்கும் என்று அடுக்கடுக்கான பின்விளைவுகளைப் பற்றிக் கூறியிருந்தார். விமர்சனத்தோடு நிற்கவில்லை…

ஆனால் இன்னொருபக்கம் ஒரு நிதியமைச்சர் என்ற முறையில் இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க தனது துறையினாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். எல்லா கூட்டுறவு வங்கிகளையும் அரசு கருவூலங்களையும், மக்களுக்கு உதவும் பொருட்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக, பழைய செல்லுபடியாகாத நோட்டுகளைப் பெற்று சட்டப்படி புதிய 2000 ரூபாய் மற்றும் செல்லுபடியாகும் மற்ற நோட்டுகளை வழங்கும் பணியை மேற்கொள்ளச் செய்தார். கேரளாவின் நிதித்துறையில் மிகப்பெரும் பங்களிப்பைச் செலுத்தும் கூட்டுறவுத்துறையை இப்பணியில் ஈடுபடுத்த ரிசர்வ் வங்கியின் விஷேச அனுமதியை கேரள அரசு அவசரமாகப் பெற்றது. மின்சார கட்டணம், பயணக்கட்டணம், அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகள் போன்ற அனைத்தும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் கேரள ஆர்எஸ்எஸ்- பாஜகவின் கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவும் இந்தப் பணி, கறுப்புப்பணத்தை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை என்று நடைமுறைக்குப் பொருந்தாத நகைப்புக்குரிய குற்றச்சாட்டுகளைக் கூறி, அதற்காக போராட்டம் நடத்தப்போவதாகக் கூட அறிவித்து மக்கள் மத்தியில் கேலிப்பொருளாகி நின்றது. கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கின் ஆழ்ந்த பொருளாதார ஞானத்தின் மூலம் வெளிப்பட்ட, அர்த்தமுள்ள அணுகுமுறைகளை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட இப்போது அங்கீகரிக்கிறார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கையிலுள்ள பணத்தைச் செலவு செய்ய இயலாமல், அதை மாற்றுவதில் உள்ள சிக்கல்களை நேரில் கண்டறிந்து அதற்கென தனிக்கவனம் செலுத்த, மாநில நிதியமைச்சர் என்ற முறையில் வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

நிலைமைகளை நேரில் அறிய எர்ணாகுளத்திற்கு அருகிலுள்ள ஒரு வங்கிக் கிளைக்கு சென்ற போது மாரியம்மா என்ற தமிழ் பெண்மணி தான் 2 நாட்களாக செல்லுபடியாகக்கூடிய ரூபாய் நோட்டுகளை பெறமுடியாமல்,வங்கிக்கு வந்து வந்து செல்வதாக மிகுந்த கோபத்தோடு முறையிட்டதுடன் உதவும் படி வேண்டியதை பொறுமையுடன் கேட்ட அவர் உடனே வங்கி மேலாளரைச் சந்தித்து விஷயத்தைக் எடுத்துக் கூறி உதவும்படி வேண்டினார். அதோடு இது போன்று தங்கள் சொந்த அலுவல்களை விடுத்து வங்கிகளில் காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும்படி அனைத்து வங்கிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு, ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்கும் போது, அதை அவசரப்பட்டு அறிவித்தால் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தத் தேவையான முன்முயற்சியையும் எடுக்கவேண்டும். அது சாதாரண மக்களின் பிரச்சனைகளை அவர்களில் ஒருவராக இருந்து அறிந்துகொள்ள முயற்சிக்கும் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மிகச் சரியாக நிரூபித்திருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.