மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நாடகம் தேசத்தையே அமளி துமளியாக்கி வருகிறது.  அனுதினமும் நாட்டு மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். புதிய ரூபாய் நோட்டில் சிப் இருக்கும். சிபிஎஸ் இருக்கும் என கூறியவர்கள், இன்று கையில் மை வைக்கும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர். இதற்கிடையேதான், இனி மோடி இந்தியாவை பணமற்ற பரிவர்த்தனை நாடாக மாற்ற இருக்கிறார்; இந்தியா பணமில்லா பொருளாதார நாடாக மாறும் என ஆட்சியாளர்கள் மார்தட்டு கின்றனர். அதுமட்டுமல்ல கடந்த இரு மாதங் களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் ஜியோ சிம் மூலம் இந்தியா முழுவதும் இலவச இணையம்; அதனை தொடர்ந்து பே டிஎம்-மின் விளம்பரத் தூதுவராக மோடியின் விஸ்வரூபம். இவையெல்லாம் தற்செயல் நிகழ்வல்ல.

அதன் பின்னணியில் இனி வரும் காலத்தில் இந்தியா வின் ஒவ்வொரு குடிமகனின் அன்றாட வாழ்வும் நிறுவனங்களை நம்பித்தான் இருந்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் உள்ளடங்கியிருக்கிறது. அதனை நேரடியாகச் சொல்லாமல், பணமற்ற பரிவர்த்தனை மூலம்  கறுப்புப் பணம், கள்ளப் பணம், ஊழல் பணம், ஹவாலப்பணம் என எல்லாத்தையும் ஒழித்து விடலாம் என பம்மாத்து  காட்டி வருகின்றனர். 80 சதவிகிதம் அமைப்பு சாரா தொழிலாளர்களை கொண்ட இந்திய  தேசத்தின் உயிரோட்டமே பணப் பொருளா தாரத்தில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது திடீரென பணமில்லா பொருளாதாரத் திற்கு எப்படி தாவிக்குதிக்க முடியும்?

இந்தியாவில் பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் (ஜன்தன் திட்டம்) கீழ் வரும் வங்கிக் கணக்குகளையும் சேர்த்து மொத்தம்46 சதவிகிதம் பேருக்குத்தான் வங்கிகளில் கணக்கு இருக்கிறது. இணைய இணைப்பே 22 சதவிகிதம் பேருக்குத்தான் சென்றடைந்திருக் கிறது. இன்னும் 19 சதவிகித மக்களுக்கு மின்சார இணைப்பே இல்லை என்றுதான் இன்றைய அரசின் புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன. இந்த லட்சணத்தில் எப்படி எல்லோரையும் கிரடிட் கார்டு, டெபிட்கார்டுகளை கொண்டு பண பரிவர்த்தனையை செய்யச் சொல்ல முடியும். இது போகாத ஊருக்கு வழிகாட்டுகிற கதையாகத்தான் போய் முடியும்.

அதுமட்டுமல்ல இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தையே குழி தோண்டி புதைக்கும் செயலாகவே இது மாறும். இந்தியாவில் 6 லட்சத்து38 ஆயிரத்து 596 கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 421 வங்கிகள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் 12 கிராமங்களுக்கு ஒரு வங்கி. அதுவும் முறையான பகிர்மானத்தில் இல்லை. இந்நிலையில் ஏன் இந்த முயற்சி? அதன் பின்னணியில் இருப்பது மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் தானே!இதன் காரணம் மோடி அரசின் கொள்கைப்படி பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 33 சதவிகிதம் இருந்தால் போதும் என்பதுதான். அப்படியென்றால் மிகப்பெரிய கார்ப்பரேட்களை பகுதாரர்களாக மாற்றி அவர்களுக்கான கொள்ளை லாபத்திற்கு பொது மக்களை பலிகடாவாக்குவது என்பதாகத்தானே இருக்க முடியும்.

கடந்த பட்ஜெட்டில் மட்டும் மோடி அரசு கார்ப்பரேட்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ. 1லட்சத்து 12 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது. இப்படி பல பெயர்களில் பல லட்சங்கோடிகள் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மக்களின் வியர்வையின் விளைச்சல் ஆகும். இது பத்தாது என்று இருக்கும் ரத்தத்தையும் உறிஞ்ச வருவதே பணமில்லா பொருளாதாரம்.

Leave a Reply

You must be logged in to post a comment.