‘ஏழை மக்கள் வென்றுவிட்டார்கள்!’
‘மணி மகுடங்களும் மத பீடங்களும்
நொறுங்கிவிட்டன!’ ‘நூறு தேசிய இனங்கள்
ஒரே குடும்பமாய் ஒரே கொடியின் கீழ்
உலகம் இதுவரை கண்டதுண்டா?’
தூர தூர தேசங்களும் அதிசயித்தன
தூய இதயங்களெல்லாம்
பரவசத்தால் களிகூர்ந்தன
‘ஆஹா என்றெழுந்தது பார்
யுகப் புரட்சி!’
நேற்றுவரை
இன்னும் எத்தனை காலம்தான்
அழுத்திக் கொல்லும் வாழ்க்கையைச்
சுமந்து தீர்ப்பது?
சோகம் முடியாதா?
சாவு வந்து சேராதா?
கண்ணீரால் நனைந்த விழிகள்
கருணைக்கு ஏங்கின
ஒரு கோப்பை தேநீருக்காக
யாரைத் தீர்த்துக்கட்டலாம் என்று
வெறி கொண்ட மிருகங்களானார்கள்
‘என் பருவமும் அழகும் மொத்த உடம்பும்
பத்தே கோபெக்குகள்தான்;
வாங்கிக் கொள்’ என்று
மாதரார் தம்மை விலைபேசி நின்றார்கள்.
தாய்முகம் தேடும்
பச்சிளம் குழந்தைகள்…
தரையில் கால்பாவவில்லை
அதற்குள் எத்தனை களைப்பு!
பாவிகளை ரட்சிக்க
யாரேனும் வருவார்களா?
இருளின் பாழ்வெளியில்
எல்லாம் கரைந்தன.
எங்கெங்கு காணினும்
கொடுங்கோன்மையின்
இடி முழக்கம். ரஸ்புடீனைத் தொழுதார்கள்
காபன் பாதிரிக்குப் பின்னால்
பலி ஆடுகளாய் நடந்தார்கள்.
எங்கெங்கோ போனார்கள்
எதுவும் நடக்கவில்லை.
என்ன வேண்டும் என்பதையே மறந்து
எதை எதையோ சபித்தார்கள்
விடுதலைக் கனவுகள் ரகசியம் பேசின
ஏடறிந்த வரலாறனைத்தும்
வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகும்.
பூமியின் முகத்தை அழகுபடுத்தியவை
உழைக்கும் கரங்களே.
பூமியின் வளங்கள் அனைத்தும்
உழைப்பின் கொடைகளே!
காலங்காலமாய் உழைப்பவன்
ஏமாற்றப்பட்டு வருகிறான்.
‘அடிமைகளின் விடுதலையை
எஜமானர்கள் நிச்சயித்ததாக
அச்சுப் பிழை கூட
வரலாற்றில் இல்லை…’
மறைக்கப்பட்ட உண்மைகள்
மெல்ல மெல்லப் புரிந்தன.
ஒரு காலத்திலே மனிதராய் இருந்த ஜந்துக்கள்
விம்மி எழுந்தன.
ஊமைகளாய் அடிமைகளாய்
ஊர்ந்து திரிந்தவர்கள்
ராணுவ வீரர்களாய் நடைபோட்டார்கள்
மாடமாளிகைகளில் மயங்கிக் கிடந்த
சுதந்திரத்தை விடுதலை செய்தார்கள்.
புதிய சூரியன் புதிய உலகம் புதிய வாழ்க்கை
மண்ணிலே சொர்க்கமொன்று மலர்ந்து மணம் பரப்பியது
தவாரிஷ்… தோழர்களே… எங்கெங்கும் வசந்தத்தின் ஆரவாரம்!மார்க்சியம்… கம்யூனிசம்… லெனின்… வானமெங்கும் ஜோதி மின்னல் வீசியடித்தது.
M M M வியர்வைக் குலத்தின் வியத்தகு சாதனைகளை
தின்று கொழுத்த கூட்டத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
‘மேடும் பள்ளமும் இயற்கை; வறுமையும் செழிப்பும் இயற்கையின் விதி!
அடிமைகள் ஆசைப்படலாமா?’
மகராசர்கள் அடிமைப்படலாமா?
அவர்களின் தர்மம் ஆத்திரம் கொண்டது.
செஸ்டர் பவுல் வந்தார் சமாதானத்தின் புதிய பரிமாணங்களை
எழுதினார்:
‘மார்க்ஸ், எங்கெல்ஸ்,
லெனின், ஸ்டாலின்,
மாவோ, ஹோசிமின்…
இவையெல்லாம் வெறும்
பெயர்கள் அல்ல.
ஒடுக்கப்பட்ட மக்களின்
உயிரில் கலந்த ஜீவ சக்திகள்
எந்த நாட்டின் இதிகாசங்களிலும்
புராணப் புனைவுகளிலும் கூட
கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போல்
நேர்மைத் திறமும் நெஞ்சுறுதியும்
தன்னல மறுப்பும், தூய வாழ்வும் கொண்ட
ரிஷிகள் இருந்ததில்லை.
ஆதலால் எஜமானர்களே
பழைய பாணியில் கம்யூனிச எதிர்ப்பு
இனியும் எடுபடாது.
புதிய பரிமாணங்களை
உருவாக்க வேண்டும்.
1955 அமெரிக்க உளவுத்துறையின்
ஆசியுடன் மிலனில்
மாநாடொன்று நடக்கிறது
அது `கலாச்சார சுதந்திரத்துக்கான
மாநாடு’ என்று சித்தரிக்கப்பட்டது.
தத்துவம் இலட்சியம் என்பனவெல்லாம்
மனிதரை அயர்ச்சியில் ஆழ்த்தும்
மயக்க மருந்துகளே! நம்மிடம் பணம் இருக்கிறது!
பணம்தான் வாழ்க்கை; பணம்தான் சுதந்திரம்; பணம்தான் அதிகாரன்
தத்துவம் என்பதும் இலட்சியம் என்பதும்
ரசமான வாழ்க்கைக்கு எதிரான நோய்கள்…
கொள்ளைக் கூட்டத்தின் கொள்கை விளக்கம்
மேலும் மேலும் விரிந்தது.
லீப்செட் என்பவன்
புதிய விளக்கம் சொன்னான்:
‘தொழில் வளர்ச்சி பெருகப் பெருக
தத்துவத்துக்கான தேவை
மறைந்தே போகும்.’
‘வர்த்தகச் சூதாட்டம் வளர வளர
ஆடம்பர மோகம் அத்துமீறும்
இலட்சிய வாதம் முடிவுக்கு வரும்.’
‘நாம், செங்கொடிகள் இல்லாத
மே தின அணிவகுப்புகள் இல்லாத
புதிய சகாப்தத்துக்குள் நுழைவோம்!’
`வால் ஸ்ட்ரீட்’ புன்னகைத்தது
அறிவியலையும் அபினியையும்
கலந்து விதைத்தது.
M M M
மார்க்சியத்துக்குப் புதிய புதிய
பேராசிரியர்கள் வந்தார்கள்.
‘பெரிஸ்த்ரோய்க்கா… பெரிஸ்த்ரோய்க்கா…’
(மறுசீரமைப்பு… மறுசீரமைப்பு…)
கோர்பச்சேவ் குதூகலித்தார்.
‘அறிமுகப்படுத்தப்பட்ட நொடியிலேயே
உலகின் அனைத்து மொழிகளிலும்
உச்சரிக்கப்பட்ட சொல் ஒன்றுதான்
அதுதான் பெரிஸ்த்ரோய்க்கா என்று
புதிய பேராசிரியர்கள்
விரிவுரை செய்தார்கள்.
அப்போதே, ‘அறிமுகப்படுத்தப்பட்ட நொடியிலேயே
உலகின் அனைத்து மொழிகளிலும்
உச்சரிக்கப்பட்ட சொற்கள் இரண்டு
ஒன்று `எய்ட்ஸ்’ மற்றொன்று `பெரிஸ்த்ரோய்க்கா’ என்று
‘சிந்தை’யுள்ளவர்கள் எச்சரித்தார்கள்.
ஆயினும் என்ன, அந்தோ…
அந்தத் துன்பியல் நாடகம்
அரங்கேறிவிட்டது.
`அக்டோபர் புரட்சி’யின்
அருங்கொடை உலக அரங்கில் மறைந்துவிட்டது.
M M M
லெனின் மறைந்த போது
சோவியத் யூனியன் கலங்கி நின்றது
சான்றோர் உலகம்
‘செய்ய வேண்டியது என்ன?’ என்று
லெனினுக்குள் ஆய்ந்தது?
கவிஞர் மாயகோவ்ஸ்கி
உரத்த குரலில் முழங்கினார்.
லெனின் மறைந்துவிட்டார் என்றா
கலங்குகிறீர்கள்?
இதோ நான் இல்லையா?
நீங்கள் இல்லையா?
நம் ஒவ்வொருவரையும் லெனின்
அப்படித்தான் வார்த்திருக்கிறார்.
M M M
அக்டோபர் புரட்சியின் வெற்றி
உலகத் தொழிலாளர்களின் வெற்றி!
அது தேச எல்லைகளைக் கடந்த
மானுட வெற்றி!
நம் நெஞ்சுக்குள் கிடந்து
துடித்துக் கொண்டிருந்த
உணர்ச்சிகளும் ஏக்கங்களும்
சிறகு முளைத்துச் சிலிர்த்தெழுந்த வெற்றி!
இதயம் உள்ளவனால் மாத்திரமே
அதில் ஏக்கம் உள்ளவனால் மாத்திரமே
பசித்துத் துடித்தவனால் மாத்திரமே
பேதமற்ற சமுதாயத்தை நேசிப்பவனால் மாத்திரமே
அக்டோபர் புரட்சியின் வெற்றியில்
ஆனந்தப் பரவசம் கொள்ள முடியும்!
என்ன நேர்ந்தால் என்ன,
இதோ நாம் இல்லையா?
நம்மிடம் கனவுகள் இருக்கின்றன;
போர்க்குணம் இருக்கிறது.
எழுவோம்;
ஒவ்வொரு நாட்டிலும்
புதிது புதிதாய்
சோவியத் யூனியனை எழுப்புவோம்!
நவம்பர் புரட்சியும்
லெனினும் நம்மை
இப்படியல்லாது வேறு
எப்படி உருவாக்கியிருக்க முடியும்!
வியர்வைக் குலத்தின் வெற்றியை
வீழ்த்தப் பிறந்தவன் யாரடா!

Leave a Reply

You must be logged in to post a comment.