கோவை, நவ. 13 –
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட பத்துப்பேர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சின்னியம் பாளையம் அருகே இந்தியன் வங்கி கிளை செயல்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பணம் எடுக்கவும், மாற்றவும் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை சின்னியம்பாளையம் பகுதியில்  உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் முன்பாக ஏராளமானோர் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தனர்.
இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற கார் ஓன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்று கொண்டிருந்த கார் மீதும்  வரிசையில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் மீதும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அங்கிருந்த பொது மக்கள் பலர் காயம் அடைந்தனர். இதில் நின்று கொண்டு இருந்த காரில் அமர்ந்திருந்த ஸ்ரீஜா என்ற பெண்ணும் அவருடன் இருந்த யாசிகா, அஸ்விகா ஆகிய  இரு குழந்தைகளும் காயம் அடைந்தனர். மேலும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பத்துக்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர்.
வங்கி வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கார் மோதிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுதது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், அஸ்விகா என்கிற குழந்தைக்கு தலையில் அடிபட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் சஞ்சயை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வங்கி வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கார்மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.