குழந்தைகள் உலகம் அதிஅற்புதமான ஒன்றுஎன்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க
முடியாது. கற்பனை சிறகடிக்கும். வண்ணவண்ணக் கனவுகளுடன் எல்லை கடந்த இனியபருவம் விண்ணையும் மண்ணையும் ஏன்கடலின் ஆழத்தையும் கூட ஒரு நொடியில் அளந்துவிடும் மனவளம் கொண்டவர்கள். காடுகளினூடே விலங்குகளோடும் பறவைகளோடும் எண்ணத்திலே பயணிப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்பவர்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைப்பருவம் தொடர வேண்டும் என நம்மில் பலர் விரும்புவது இயற்கைக்கு மீறிய எண்ண ஓட்டமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் கற்பனை வளத்திற்கும். துடிப்பான இயக்கத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் போதுமான அளவு படைப்பிலக்கியங்கள் இல்லை என்பது குறைபாடுதான்.
மன்னன் சாலமனின் நீதிமொழிகளில் சொல்லப்பட்டது போல் “நான் குழந்தையாய் இருக்கும்போது குழந்தையைப்போல் பேசினேன். குழந்தையை போல் சிந்தித்தேன். ஆனால் பெரியவனான போது குழந்தைக்குரிய எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்” என்பதற்கு மாறாக முனைவர் மாதவன் குழந்தைகளுக்குரிய எதையும் விடாமல் தொடர்ந்து குழந்தை இலக்கியங்கள் படைத்து வருகிறார். இதற்கு முன்பு வந்த இவரின் “கரடிக்கு கல்யாணம்” சிறுகதை தொகுப்பு போல மின்மினியும், பள்ளி செல்லும் சிறுவர்களாலும், ஆசிரியர்களாலும் நல்ல வரவேற்பைப் பெறும்.
வகுப்பறையின் முன்தயாரிப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களின் மன இறுக்கத்தைப் போக்குவதற்கு இது போன்ற குட்டிக்கதைகள் எவ்வளவு அவசியம் என்ற நோக்கில் இக்கதைகள் புனையப்பட்டிருப்பது சிறப்பு.
கதைகள் இந்தி மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், மொழிபெயர்ப்பு கதைபோல் இல்லாமல் வெகு இயல்பாய் மாணவர்களின் பேச்சுமொழியில் விலங்குகளும் பறவைகளும் பேசிக் கொள்வது போன்று நகைச்சுவை உணர்வுடன் அமைந்திரு
ப்பது குழந்தை இலக்கியத்தின் இலக்கணமாக அமைந்துள்ளது.
புலம்பல் யாத்திரை என்ற கதையில் யானை முதல் எலி வரையிலான பல்வேறு விலங்குகளின் வால் குறித்தும் அவற்றின் இயக்கத்திற்கு எவ்வழிகளில் அது பயன்படுகின்றன என்பதை அறிவியல் பார்வையில் விளக்கியிருப்பதும், யானைக்கு வால் அழகாய் இல்லை என்ற மனக்குறையைப் போக்கும் விதமாக அதன் வலிமையான துதிக்கையும், விலையுயர்ந்த தந்தமும் ஆறுதல் சொல்லும் செய்தி மாணவர்கள் தங்களின் சிறுகுறைகளைக் குறித்து கவலைப்படாமல் நிறைகளைக் குறித்து பெருமை கொள்ள தூண்டுவதாய் உள்ளது.
பாத்திரக் குட்டிக்கதையில் சோமு, ராமு என்ற கதைமாந்தர்கள் மூலம் பேராசைக் கொண்டு ஏமாற்றும் சோமுவிற்கு ராமு மூலம், பாடம் கற்பிப்பதாய் அமைந்திருப்பது மாணவர்களும், யாரையும் ஏமாற்றாமல் பரிவுடன் நடந்து கொள்ள அறிவுறுத்துவதாய் பாத்திரங்கள் குட்டி போடுவது போன்று கற்பனை ஆகவும், சிரிப்பூட்டும் விதமாகவும் அமைகிறது.
‘ஆட்டுக்கடா அண்ணாச்சி’ கதையில் சாதி, மத மோதலில் மாய்த்துக் கொள்ளும் மனிதர்க
ளுக்கு பாடம் நடத்தும் வகையில் ஆட்டுக்கிடா, கன்றுக்குட்டி, நாய் , ஆட்டுக்குட்டி ஒற்றுமையு
ணர்வுடன் சமயோசிதமாக செயல்பட்டு தன் எதிரிகளான ஓநாய், நரிகளிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும், தனிவழிப் பயணம் எப்படி ஆபத்தானது என்பதனையும் பிள்ளைகள் இரசிக்கும் வகையில் சலிப்பூட்டாமல் சொல்லுதல் தனிச்சிறப்பு.
சின்னஞ்சிறிய மின்மினிப்பூச்சிகள் வனக்காவலருடன் சேர்ந்து, காட்டுக் கொள்யைர்களிடமிருந்து காட்டை காப்பாற்றுவதற்கு செய்கின்ற சாகசங்கள், பள்ளிக்குழந்தைகளை சாகச வீரர்களாக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவர்கள் “மூடத்தனத்தின முடைநாற்றம் வீசும்காடு மணக்க வீசும் கற்பூரப் பெட்டகமே!”
என்ற பாரதிதாசனின் தாலாட்டுக் கவிதையை மெய்ப்பிப்பார்கள் “பட்டிக்காடா? பட்டணமா?” கதையில் கிராமத்து எலி நகரத்து எலிகளின் அனுபவங்கள், இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் சிலருக்கு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுக்கும்.
இதுபோன்று இத்தொகுப்பில் சொல்லப்பட்ட ஒன்பது கதைகளும், எளிய மனிதர்களுடன் காடு, விலங்கு, பறவைகளை கதைக் களங்களாகக் கொண்டு சிரிக்கவும், சிந்திக்கவும் என்ற முறையில் சிறுவர்களின் கவனத்தை மடைமாற்றம் செய்வதில் நன்மதிப்பைப் பெறுகின்றன எனலாம்.
-முத்திருளப்பன்
மின்மினி (சிறார் கதைகள்)
ஆசிரியர் : முனைவர் என்.மாதவன்
வெளியீடு: நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் (பி)லிட்.
41பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600098 தொ.பே.எண்.26241288
பக்கங்கள்: 68 விலை: ரூ.55/-

Leave a Reply

You must be logged in to post a comment.