தமிழகத்தின் ஒரு கிராமத்தில் பிறந்து, தனது ஒரு வயது நிரம்பும் முன்பே தந்தையைப் பறிகொடுத்து பின்னர் தாயின் அரவனைப்பில் வளர்ந்த அச்சிறுவன் தனது 14 வயது வரை பார்த்த திரைப்படங்களும் 14 தான்!… ஆனால் திரைத்துறையில் நுழைந்த முதல் 14 ஆண்டுகளில் 100 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த இளைஞன் ஆனான்!.
கே.ஆர். பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் திரைப்படத் துறையில் சிவகுமார் ஆனதும், புதிய தலைமுறைக்கு நடிகர்கள் சூரியா – கார்த்தி இருவரின் தந்தை என்று ஆனதும் வரலாறு ஆகிவிட்டது. ஓவியராகும் கனவு நிறைவேறியபின் திரைத்துறையில் தடம்பதித்த பதிவுகளை ஆல்பமாகப்பதிவு செய்வது தான் GOLDEN MOMENT OF SIVAKUMAR IN TAMIL CINEMA (தமிழ் சினிமாவில் சிவகுமாரின் பொன்னான தருணங்கள்’ என்று மொழி
யாக்கம் செய்து கொள்ளலாம்) என்ற ஆங்கிலம் – தமிழ் கலந்த இந்த ‘கனமான’ நூலின் நோக்கம்.
அநேகமாக 87 கதாநாயகிகளுடன் இணைந்து நடித்த நடிகர் சிவகுமார் ஒருவராகத்தான் இருப்பார் ‘ சீரியஸ்’ சிவகுமாரின் மெல்லிய நகைச்சுவை இந்நூலில் இழையோடுகிறது. “இம்பாலா காரில் வரும் சிவாஜி ராபின்ஹூட் சைக்கிள் வைத்திருந்த சிவகுமார் முன் நாரதர் வேடத்தில் குனிந்து வணங்கி நடித்தது வேடிக்கையாகத் தெரிந்தது (பக்.32) “தலையில் 3 கிலோ எடையில் கீரீடம் உடம்பெல்லாம் கூர்மையான நகைகள், இடுப்பில் பஞ்சகச்சம் கட்டி, ஒட்டியாணம் மாட்டி விட்டால்… இயற்கை உபாதை ஏற்பட்டால் உதவ எவருமில்லை” (பக்.34)
“ஏன் அண்ணே… ஆடு டிரான்சிஸ்டர் பிளேபண்ணுது… ரயில்வே கேட்டை சாத்துது. ஹீரோயினுக்காக சண்டை போடுது… ஏன் மக்களை இப்படி முட்டாள் ஆக்கறீங்க? என்று தேவர் அண்ணனிடம் ஆட்டுக்கார அலமேலு படம் பற்றிக்கேட்டேன் “சும்மா இருப்பா! இதை அடிச்சுப்பிடிச்சு விட்டுட்டு அப்புறமா நல்ல படம் எடுக்கலாம்’ என்றார்” (பக்.140)
சில குறிப்புகள் நாம் படிக்க புதிய செய்தியாக இருக்கின்றன “ கந்தன் கருணை”யில் முருகனாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டாலும், மஹாவிஷ்ணுவாக நடித்த முதல் புராணப்படம் 1966ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்தது “சரஸ்வதி சபதம்” தானாம்!
திருமாலின் தசாவதாரத்தைச் சொல்லும் ‘திருமால் பெருமை’ படத்தில் ஒரே இரவில் 10 முறை ஒப்பனை கலைத்து அடுத்தடுத்து போட்டு நடித்ததில் டைபாய்டு ஜூரம் வந்து விட்டதாம்!
1959ல் வெளியான ‘பாலே ஆஃப் எ சோல்ஜர்’ ரஷ்யப் படத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட படம் “தாயே உனக்காக” (1966) இயக்குநர் பி. புல்லையா. வங்கப்படமான ‘உத்தர் புருஷ்’ ஐத் தழுவி எடுத்த படம் “உயர்ந்த மனிதன்” (1968) ஜெயகாந்தனது “கைவிலங்கு” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு நடிகர் எஸ்.வி.சுப்பையா தயாரித்த முதல் படம் “காவல் தெய்வம்”.
“அகத்தியர்” (1972) படத்தில் சிவகுமார் தொல்காப்பியர் ஆகவும், குமாரி பானுமதி காக்கைப் பாடினியாராகவும் நடித்தனர்.
‘ இலவு காத்த கிளி’ என்று மணியன் எழுதிய தொடர்கதை நாடகமாகி பின்னர் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ (1973) திரைப்படமாகியது. எழுத்தாளர் சேலம் மகரிஷி கதை “புவனா ஒரு கேள்விக்குறி” ஆகிய தகவல்கள் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான உறவை கோடிட்டுக் காட்டுகின்றன.
.‘இனி பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த கடைசிப்படம் “ கிரகப்பிரவேசம்” (1976) என்ற வரிகள் வலி மிகுந்தவை.
இளம் வயது முதல் சிவகுமார் பாதுகாத்து பத்திரப்படுத்திய குடும்பப்புகைப்படங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், எழுத்தாளர்கள் பாலகுமாரன், ஸ்டாலின்குணசேகரன், கவிஞர் சிற்பி, பிரபஞ்சன், கி.ரா. ஜெயகாந்தன், சுஜாதா, ஓவியர்கள் கோபுலு,சுந்தரமூர்த்தி, ஆர்.நடராஜன், இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ, பரத
நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், நீதிபதி கே. சந்துரு, பல தளங்களில் பிரபலங்களாக பரிணமிக்கும் 75 வயது நிறைந்த நடிகர் சிவகுமாரின் பொன்னான தருணங்களை 100 ஆண்டு நிறைந்த அல்லயன்ஸ் பதிப்பகம் அழகாகப் பதிவு செய்துள்ளது. கருப்பு – வெள்ளை புகைப்படங்களின் பொலிவும், வடிவமைப்பும் “பேசும் படம்” இதழ் நினைவுறுத்தி பின் காலத்தை நோக்கிப் பயணிக்க வைக்கிறது.
கலை, தொழில்நுட்பத்துடன் இணையும் போது பரவசப்படுத்தும் என்பதற்கு உதாரணம் இந்த ஆவணப்புத்தகம்.

-இரா. குமரகுருபரன்

GOLDEN MOMENTS OF
SIVAKUMAR IN TAMIL CINEMA
தொகுத்தவர்:ஜி.தனஞ்ஜெயன்
வெளியீடு: தி அல்லயன்ஸ் கம்பெனி
64 , ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை 600 004
மின்னஞ்சல்: www.alliancebook.com பக்கங்கள்: 314 விலை ரூ.2000/-

Leave A Reply

%d bloggers like this: