திருவள்ளூர், அக். 20-

மீஞ்சூரை அடுத்த மேலூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆரம்பப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளனர்.

d-anganwadi-157ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பள்ளியை முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.பக்தவத்சலம் திறந்து வைத்தார். அவ்வளவு பழமைவாய்ந்த பள்ளியின் கட்டிடங்கள் தற்போது இடிந்துவிழுயும் நிலையில் உள்ளன. மேற்கூரையும் உடைந்து, பக்கவாட்டு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்திலேயே சில காலம் மாணவர்கள் படித்துவந்தனர். புதிய கட்டிடம் கட்ட அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தில் அமர்ந்து படிப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதாலும், போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வேறு பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது.

இதனால் இங்குள்ள மாணவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி இந்தப்பள்ளியை மூடிவிடுவார்களோ என்று பொதுமக்களும் ஆசிரியர்களும் அஞ்சினர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்முயற்சியால் தற்போது 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பள்ளி திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பள்ளியின் அவல நிலையை நமது நாளிதழில் வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.புதிய கட்டிடம் கட்ட நிதியும் ஒதுக்குவதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளியின் கல்வி மேலாண்மைக் குழுத் தலைவர் செல்வி கூறும் போது, பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் தரமான பள்ளி கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும், கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பள்ளிக்கு விளையாட்டு திடல் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளதால் அனைத்து மாணவர்களும் அங்கன்வாடி மையத்தில் தற்போது படித்து வருகிறார்கள். விரைவில் பாதுகாப்பான கட்டிடத்தில் இவர்கள் படிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். பருவ மழை துவங்கும் முன் பள்ளி கட்டிடப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையின் திருவள்ளூர் மாவட்ட அலுவலர் சிவகாமி கூறுகையில், புதிய கட்டிடம் கட்ட ரூ.56லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்திலேயே 5வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த பணி தாட்கோ மூலம் செய்து முடிக்கப்படும்.கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது ஆதிதிராவிடர் நலத்துறை மாநில இயக்குனரகம் முடிவு செய்யும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.