(முன்னாள் டிஜிபி சக்ரவர்த்தியிடம் ஏற்கெனவே பல அதிகாரிகளுடன் பேசியது பற்றிக் கூறுகிறார் நூலாசிரியர்).மற்ற அதிகாரிகளுடன் பேசியதிலிருந்து கிடைத்த பல்வேறு விவரங்களை நான் சொல்லச் சொல்ல இறுதியாக சக்ரவர்த்தி பேச முன்வந்தார். கொஞ்சம் அதிகமாகவே அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்களை நான் நடத்தியிருப்பதை அவர் உணர்ந்திருக்கக்கூடும் என்பதால் கூட அவர் பேச முன்வந்திருக்கலாம். குஜராத்தில் நடந்த கலவரங்கள் பற்றி ஒரு வழியாக அவரை நான் பேச வைத்தேன்.

கலவரத்துக்கு அறிவார்ந்த அடிப்படை ஏது?

இப்படியொரு மோசமான கலவரத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் கலவரங்களுக்கு அறிவுப்பூர்வமான அடிப்படைகள் எதுவும் இருக்காது. இங்கே கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அந்த கம்பார்ட்மென்ட் விஎச்பி ஆட்களுடையது என்பதில் சந்தேகமில்லை. அயோத்திக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தவர்கள் அவர்கள். அந்த ரயில் முழுக்க விஎச்பி ஆட்கள்தான். ஆகவே என்ன நடந்தது என்றால், அதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. என்ன சொல்கிறேன் என்றால், சாதாரணமாகக் கலவரங்கள் ஏற்படுகிறபோது ஏதாவது காரணம் இருக்கும், பெரும்பாலும் உள்ளூர்ப் பிரச்சனையாக இருக்கும். இதிலே, மொத்தத்தில் இந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய ஒரு காரணம் இருந்தது.பொதுவாகக் கலவரங்களை எடுத்துக்கொள்வோம், அவற்றில் ஈடுபடுகிறவர்கள் யார்? ஏழை மக்கள்… இங்கேயோ பணக்காரர்கள் எல்லோரும் தெருவுக்கு வந்தார்கள். சிலர் எங்களுக்கு போன் செய்து, ‘‘சார், ஷாப்பர்ஸ் ஷாப் கடைக்கு, காரில் வந்து கொள்ளையடித்துவிட்டுப் போகிறார்கள்’’ என்று சொன்னார்கள்.‘‘காலம் காலமாக வரலாறு இந்துக்களுக்கு என்ன கற்பித்திருக்கிறது என்றால், கஜினியும் பாபரும் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்தார்கள், சோம்நாத் கோவிலைக் கொள்ளையடித்தார்கள் என்று சொல்லி வந்திருக்கிறது. ஆகவே அது இங்கே இந்துக்கள் மனங்களில் ஆழமாக ஊன்றிப் போயிருக்கிறது. அத்துடன் இந்தியாவில் 1965லிருந்தே கலவரங்கள் நடந்து வந்திருக்கின்றன. இதற்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுண்டு’’ – இவ்வாறு சக்ரவர்த்தி என்னிடம் கூறினார்.

ஆர்எஸ்எஸ் ஆணைகளுக்கு அடிபணிந்த முதல்வர்

கேள்வி: அவருக்கு (மோடிக்கு) எதிராகப் போன விஷயம் என்று எதை நான் நினைக்கிறேன் என்றால், அவர் ஆர்எஸ்எஸ்-சிலிருந்து வந்தவர் என்பதும், கலவரத்தின்போது அவர் ஆர்எஸ்எஸ்சையும், விஎச்பியையும் ஆதரித்தார் என்பதும்தான்…

பதில்: அது தவிர்க்க முடியாத ஒரு கட்டாயம். ஆர்எஸ்எஸ் ஊழியராக வளர்ந்த ஒருவர் அவர்களுடைய வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்துதான் போக வேண்டும்.

கேள்வி: அதனால்தான் அவர் கலவரத்தின்போது ஆர்எஸ்எஸ்சுக்கு அடிபணிந்தார் என்று எனக்குச் சொன்னார்கள்.

பதில்: அவருடைய நிலையில் அவரால் வேறு எதுவும் செய்திருக்க முடியாது. குறிப்பாக, இதில் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பால் வளர்க்கப்பட்டவர்தான் நீங்கள் என்றால் வேறொன்றும் செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக நீங்கள் அதிகாரப் பசி கொண்ட அமைச்சர் என்றால்…

கேள்வி: அவர் அதிகாரப் பசி கொண்டவர்தானா?

பதில்: ஆம். ‘தெஹல்கா’ மீது உரிய மரியாதையோடுதான் (இதைச் சொல்கிறேன்)

கேள்வி: அது என்ன?

பதில்: அது தருண் தேஜ்பால் நடத்துகிற ஒரு பத்திரிகை. அதைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்க வேண்டுமே…

கலவரத்தின்போது பொறுப்பிலிருந்த அதிகாரிகள் அத்தனை பேருக்கும் பரிசு தரப்பட்டது என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது. தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை, ஆனால் எனக்கு என்ன கிடைத்துவிட்டது? அதைப் பற்றிப் பிரச்சனையில்லை, ஆனால் எல்லோரின் மேலேயும் ஒரு பிரஷ்சால் கரி பூசக்கூடாது. அது உள்நோக்கம் கொண்டது.

கேள்வி: உங்களோடு பணியாற்றிய பெரும்பாலோர் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு ஒரு பங்கு இருந்திருக்கிறது என்பது அதற்கொரு காரணமாக இருக்கலாம் அல்லவா? அதனால் நீங்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கலாம் அல்லவா?

பதில்: அப்படியானால் நம்மால் பெரிதாக எதுவும் செய்ய முடியாதுதான்.

கேள்வி: ஆனால், உங்களைப் போன்ற ஒருவர் குஜராத் டிஜிபியாகத் தாக்குப் பிடிப்பது கடினமாகத்தான் இருந்திருக்கும்.

பதில்: என்னுடைய அதிகாரங்களுக்கு உட்பட்டு என்னால் முடிந்ததைச் செய்வேன் என்பதுதான் என்னுடைய அணுகுமுறை. என்னால் எத்தனை முஸ்லிம்களுக்கு உதவ முடியுமோ அத்தனை பேருக்கு உதவ முயன்றேன். ஈசான் ஜாஃப்ரியைக் காப்பாற்ற முடியாமல் போனதன் காரணமாகவே ஏராளமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

கேள்வி: யார் அந்த ஈசான் ஜாஃப்ரி?

பதில்: அவர் ஒரு முஸ்லிம், முன்னாள் எம்.பி. அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. கும்பலால் அவர் கொல்லப்பட்டார். அவருடைய வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வட்டாரமே தாக்குதலுக்கு உள்ளானது. போலீஸ் அங்கே உரிய நேரத்தில் போய்ச்சேர முடியவில்லை.

கேள்வி: அப்போது நீங்கள் டிஜிபியாக இருந்தீர்கள் என்பதால்தான் உங்களை விமர்சிக்கிறார்களா?

பதில்: பாரம்மா, எனக்குக் கீழே பலர் பணியாற்றுகிறார்கள். அகமதாபாத் கமிஷனர், அவருடைய ஐஜி, அவருடைய இளநிலை அதிகாரி என்று ஒரு பதவிப் படிநிலை இருக்கிறது. நான் கமிஷனருக்கு ஆணையிடுகிறேன், அவரிடம் சொல்கிறேன், ஆனால், அவர், தன்னுடைய அதிகாரிகளிடம் சொன்னதாகச் சொல்கிறார். ஆனால், அவர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் ஈசான் ஜாஃப்ரி கொல்லப்பட்டுவிடுகிறார். சேதாரம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதனால்தான் நானாவதி நீதி விசாரணைக் குழு (இதை) எடுத்துக்கொண்டிருக்கிறது, உச்சநீதிமன்றமும் எடுத்துக்கொண்டிருக்கிறது.

(தொடரும்)

Leave A Reply

%d bloggers like this: