ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் அதாவது, சர்சங் சாலக் மோகன் பகவத் நாக்பூரில் நடைபெற்ற அந்த அமைப்பின் விஜயதசமி விழாவில் பேசியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் அவர்களது ஆண்டுவிழாவை நடத்துவது வழக்கம்.
இந்தாண்டு, புதுமை என்னவென்றால் இதுவரை அரைக்கால் சட்டை போட்டுவந்த ஆர்எஸ்எஸ் ஆசாமிகள் தற்போது புல்பேண்ட்டுக்கு மாறிவிட்டார்கள். ஆனால், கையில் வைத்துள்ள மூங்கில் லத்திக்கம்பு மட்டும் மாறவில்லை. ஆப் டவுசரில் இருந்து புல் பேண்ட்டுக்கு மாறுவது குறித்து 2009-ஆம் ஆண்டிலிருந்து விவாதித்து இந்தாண்டுதான் முடிவுக்கு வந்தார்களாம்.
ஆப் டவுசர் போடுவதும் புல்பேண்ட்டுக்கு மாறுவதும் அவர்களது விருப்பம். ஆனால், ஆண்டு விழாவில் மோகன்பகவத் வழக்கம்போல விஷமமாகப் பேசியுள்ளதையும் அதற்கு ஊடகங்கள் அதீத முக்கியத்துவம் அளித்துள்ளதையும் நாம் கவனிக்காமல் இருக்கமுடியாது.
பசுப் பாதுகாவலர்கள் நல்லவர்களே. ஜெயின் சமூகம் உட்பட பல்வேறு சமூகங்களில் பசுப் பாதுகாப்புக் கடைப்பிடிக்கப்படுகிறது. பசுப் பாதுகாப்பில் ஈடுபடும்போது சட்டத்திற்குட்பட்டுச் செயல்படவேண்டும் என்றெல்லாம் பசுவின் வாலைப் பாசமாக உருவி விட்டுள்ள அவர், உனாவில் நடைபெற்ற வன்செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வேதகாலத்தில் யாகம், வேள்வி என்ற பெயரில் கால்நடைகள் கொன்று குவிக்கப்பட்டு விவசாயத்திற்கு இடையூறு ஏற்பட்ட பின்னணியில்தான் கொல்லாமை என்கிற தத்துவத்தைச் சமண, பௌத்த மதங்கள் முன்வைத்தன. ஒருபோதும் அந்த மதத்தவர்கள் பசுவின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டதில்லை.
ஆனால் , பசுக் கறியில் நல்ல இளங்கன்றின் கறியை எங்களுக்கு அருள வேண்டும் என்று வேதங்களில் எழுதி வைத்தவர்கள் தான் பசுவின் பெயரால் தற்போது மனிதர்களைக் கசாப்புச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
வேதகாலம், வேத அறிவு என்றெல்லாம் இன்றைக்குப் பாஜக-வினர் பசப்பிக் கொண்டிருக்கிறார்களே அந்த வேதத்தில், பல இடங்களில் பசுவை எப்படி அறுக்க வேண்டுமென்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஜதரேயப்ராஹ்மனம் பஞ்சிகா-2, கண்டம் 6-ல் பசுவின் மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுக்கவேண்டும். பின்பு கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் காலிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து 26 துண்டுகளை அறுத்தெடுத்த பின், மற்ற எல்லா இடங்களிலும் கறியை அறுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பசுவை முறையாக அறுக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் சொர்க்கம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவர்களின் வழி வந்த சிகாமணிகள் தான் இன்றைக்குப் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் படுகொலைத் தாண்டவங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கம்போலச் செயல்படும் என்றும் பகவத் கூறியுள்ளார். அதாவது, மகாத்மாகாந்தி படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கொடூரம் என அவர்களது நல்லிணக்கம் தொடருமாம். கேழ்வரகில் நெய் வடிகிறதாம். ஆளுக்கொரு செம்போடு வாருங்கள் என்று அழைப்புவிடுக்கிறார்கள்.
எல்லையோரத்தில் ராணுவத்தினரின் நடவடிக்கைகளையும் பகவத் வெகுவாகச் சிலாகித்துள்ளார். இந்தத் தாக்குதலால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என்கிறார் அவர். பன்னாட்டு, தனியார் ஆயுத வியாபாரிகளிடம் ஆயுதங்கள் வாங்க முயற்சி நடப்பதைத்தான் இவ்வாறு கூறியிருக்கிறார் போலிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளாகித் தவிக்கும் காஷ்மீரில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோகன் பகவத், பண்டிட்டுகளை மட்டும் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டுமென்று கூறியிருக்கிறார்.
பாஜக-வினர் பல சமயங்களில் எங்கள் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று கூறிக்கொள்வார்கள். ஆனால், மோகன் பகவத் தனது உரையில், மத்திய பாஜக அரசை ‘நமது அரசு’ என்றே கூறியுள்ளார். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் மத்தியில் இருப்பது யாருடைய அரசு என்பதை. உடையை மாற்றினாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, கையில் உள்ள தடியை கைவிடாததற்குக் காரணம் அந்தத் தடியின் அசைவிற்கேற்ப பாஜக குட்டிக்கரணம் போடவேண்டும் என்பதற்காகத்தான்.
கடந்த இரண்டாண்டுகளாக இந்தியா வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மோடி அரசு தான் மத்தியில் உள்ளது. ஆனால், அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான விளைவுகளைத் தேசம் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கடந்த இரண்டாண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. விளை நிலப் பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். புதிதாக 1.3 கோடிப் பேர் வேலையில்லாதோர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
டெண்டுல்கர் குழு 2.7 கோடிப் பேர் வறுமையில் வாடுகிறார்கள் என்றது. ரங்கராஜன் குழு 3.63 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளார்கள் என்றது. ஆனால், இவர்கள் வறுமையே ஒழிக்கப்பட்டுவிட்டது. கோட்டிற்குக் கீழே யாருமே இல்லை. எல்லோரும் தாவிக்குதித்துத் தப்பித்துவிட்டார்கள் என்கிறார்கள். அதாவது, வறுமைக்கோட்டைத் தரையோடு தரையாகச் சேர்த்து வரைந்து விட்டார்கள். எனவே கோட்டிற்குக் கீழே யாருமே இல்லை.
மறுபுறத்தில் அம்பானிகள், அதானிகளின் சொத்து மதிப்பு உயருகிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் பார்வையில் இந்தியாவின் முன்னேற்றம். இதே வேகத்தில் போனால் அடுத்த விஜயதசமிக்குள் என்ன நடக்குமோ தெரியவில்லை.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆலோசனைப்படி புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் குலக்கல்விக் கொள்கையைப் பாராட்டியுள்ள மோகன்பகவத், நீண்டகாலமாகக் காத்திருந்தோம். இப்போது கனிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இது தானாகக் கனிந்த கனியல்ல. ஆர்எஸ்எஸ் கையில் வைத்துள்ள தடியால் அடித்துப் பழுக்கவைக்கப்பட்ட கனி.
கல்விமுறையை மாற்றுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று மோகன் பகவத் கூறியுள்ளார். நமது கலாச்சார அடையாளத்தைப் பேணிப் பாதுகாப்பதாகக் கல்வி முறை அமைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்தக் கூட்டம் கல்வித்துறையைத் தான் குறி வைத்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் வாசலிலேயே படுத்திருந்து அவ்வப்போது கட்டளைகளைப் பெற்றுச்செல்கிறார். இவர்கள் சொல்கிற கலாச்சார அடையாளம் என்பது சமஸ்கிருதம் தான்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேருபவர்கள் எடுக்கும் உறுதிமொழியிலேயே இந்து தர்மத்தை அடிப்படையாக வைத்து சமஸ்கிருதத்தின் மூலம் பாரதத் தேசத்தை வளப்படுத்துவோம் என்கிறார்கள். இதைத்தான் புதிய கல்விக்கொள்கை சமஸ்கிருத மொழிக்கு முன்னுரிமை என்கிறது. பண்பாடு சொல்லித் தரப்படும் என்கிறது. எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரமிது. இல்லையென்றால் இந்தியாவில் கல்விக்கூடங்கள் அனைத்தையும் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களாக மாற்றிவிடுவார்கள்.
-மதுக்கூர் இராமலிங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.