திருநெல்வேலி,அக்.9-
சாதி ஒழிய வேண்டுமெனில் பள்ளிகளில் சமூகக் கல்வி அவசியம் என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கூறினார்.திருநெல்வேலியில் நடைபெற்ற அம்பேத்கர் 125ஆவது பிறந்த தின தேசியக் கருத்தரங்கில் அவர் பேசியது:சாதி ஒழிப்பு அவசியம் என நூற்றாண்டுகளைக் கடந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம். சாதி ஒழிப்பு குறித்து பேசிச் செல்லும் நபர்கள் அவரவர் தெருக்களில் நுழையும்போதும், குடும்பத்திலும், வீட்டிலும், உறவுகளிலும் சாதியை தூக்கிப் பிடிக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நமது சடங்கு நிகழ்வுகளிலும், கோயில் விழாக்களிலும் சாதியை முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒற்றுமைக்காக ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டாலும் சாதியை மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் தமிழகத்தில் திராவிட ஆட்சி தொடர்ந்தாலும் சாதிய பாகுபாடும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் நீடித்திருக்கின்ற அழுக்கை வெளியேற்ற வேண்டும். அதற்கு தனி மனித மாற்றம் நிகழ வேண்டும். தனி மனித மாற்றம் ஏற்பட்டால் குடும்ப மாற்றம் ஏற்படும். குடும்ப மாற்றம் ஏற்பட்டால் குழு மாற்றம் நிகழும். குழு மாற்றம் நிகழ்ந்தால் ஊர் மாற்றம் நிகழும். ஊர் மாறினால் நாடு மாறும். அதற்கு பெண்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
பள்ளிகளில் சமூகக் கல்வி அவசியமாக்கப்பட வேண்டும். குடும்ப விழாக்களிலும், கோயில் விழாக்களிலும், சடங்குகளிலும் சாதி ஒழிப்பு பேசப்பட வேண்டும். இதன் மூலம் உளவியல் ரீதியான மாற்றம் நிகழும்.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே சாதி ஒழிப்பு குறித்து பேசாமல் உயர் சமூகத்தினரும் சாதி ஒழிப்பு குறித்துப் பேச வேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

%d bloggers like this: