திருவள்ளூர், அக். 9-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை பருவ மழைக்கு முன் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் 787 ஏரிகளும், 14 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் உள்ளன. மேலும், 2,000-க்கும் மேற்பட்ட சிறு குளங்கள், குட்டைகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.சிலர் ஏரிகளை ஆக்கிரமித்து அங்கு விவசாயம் செய்தும், செங்கல் சூளைகளை நடத்தியும் வருகின்றனர்.மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் தேங்கும்போது, தங்களது வீடு, பயிர்களை காக்க இவர்கள் ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, பள்ளிப்பட்டு என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏரி நீரை வெளியேற்றும் சம்பவங்கள், ஒவ்வொரு பருவ மழைக்காலத்தின்போதும் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.
இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச் சாட்டாகும்.ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, தமிழக அரசு 2007-ஆம் ஆண்டு அக்டோபரில் சட்டம் இயற்றி, உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டது.ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவற்றை தாங்களாக அகற்றாவிடில், ஏரிகளைப் பாதுகாக் கும் பொறுப்பில் உள்ள உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் இச்சட் டத்தின் கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சட்டம் இயற்றி 9 ஆண்டுகளாகியும், ஒரு ஏரியில் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணித் துறையினர் முன்வரவில்லை.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் சமீபத்தில் பெய்த மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற் பட்டது.குறிப்பாக, புல்லரம் பாக்கம் ஏரி, செஞ்சி ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றில் இன்று வரையிலும் ஆக்கிரமிப்புகள் தொடர் கின்றன.எனவே பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசின் ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.அப்போது தான் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு, விவசாயத்துக்கு தேவையான தண் ணீரை சேமிக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.

Leave A Reply