சென்னை,அக்.9-
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பழங்களும், பூக்களும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக பழக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை கோயம்பேடு அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை ஜெயராமன் கூறியதாவது:-ஆயுத பூஜைக்கு ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யா பழங்கள் அதிகம் விற்பனை ஆகும். இந்த ஆண்டு பழங்களின் வரத்து கொஞ்சம் குறைந்து தான் காணப்படுகிறது. பழங்களின் விலை பொறுத்தவரையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ஆப்பிள் விலை மட்டும் குறைந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே ஆயுத பூஜை சமயத்தில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிளை தவிர மற்ற அனைத்துப் பழங்களின் விலையும் உயர்ந்து தான் இருக்கிறது.கொய்யாப்பழத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ கொய்யாப்பழம் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்கிறார்கள்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பழங்களின் விலை நிலவரம் வருமாறு:-ஆப்பிள் – ரூ.100 முதல் ரூ.120 வரை, சாத்துக்குடி – ரூ.50 முதல் ரூ.60 வரை, கமலா ஆரஞ்சு – ரூ.40 முதல் ரூ.55 வரை, சீதாப்பழம் – ரூ.40, கொய்யாப்பழம் – ரூ.60 முதல் ரூ.80 வரை, திராட்சைப்பழம் – ரூ.80, மாதுளை – ரூ.100 முதல் ரூ.140 வரை, பேரிக்காய் – ரூ.60.இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply