“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே,” என்ற தொல்காப்பியச் சூத்திரத்தை எல்லோரும் அறிவோம். சொற்களை உச்சரிக்கும் முறைக்கு ஏற்பவும் பொருள் மாறுபடுவதை நம் அன்றாட வாழ்வில் காணலாம். இனிய சொற்கள் இருக்கும்போது துன்பம் தரும் சொற்களைப் பேசி கனியிருக்கும்போது காயைப் பறித்துக் கொண்டிருக்கிறோம். n ‘உடம்பு எப்படி இருக்கு’ என்று உங்களை ஒரு நண்பர் கேட்பதற்கும், சண்டை போடத் தயாராக இருக்கும் ஒருவர் கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டல்லவா? உச்சரிப்பின் தன்மையைப் பொறுத்துப் பொருள் மாறிவிடுகிறது. பெருந்தலைவர் காமராசர் எவர் வேண்டுகோள் வைத்தாலும் ‘ஆகட்டும் பார்க்கலாம்‘ என்று கூறுவாராம். ஆனால் மனிதநேயத்தோடு சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி விடுவாராம். இன்று சில அரசியல்வாதிகள் இப்படிச் சொன்னால் ஏதோ நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.நான் முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூர் என்ற ஊரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்தவட்டார மக்கள் பேச்சைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் சிரமப் பட்டேன். ஒரு நண்பர் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார். ‘எங்கேங்க கௌம்பீட்டீங்க’ என்று கேட்டேன். ‘ஒக்கிடறதுக்காகக் கொண்டுபோறேன்’ என்றார்.‘என்னங்க நல்லா இருக்கிற வண்டியை ஏன் ஒக்கிடப்போறீங்க,’ என்றேன், பழுது ஏற்படுத்துவதைத்தான் ஒக்கிடுவது என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள் என்ற பழக்கத்தில்.அவருக்குக் கோபம் வந்து விட்டது. ‘வண்டி பழுதாக் கெடக்கு. ஒக்கிட்டாத்தான ஓட்டமுடியும்’ என்றார். அப்புறம்தான் புரிந்தது எனக்கு, சரிசெய்வது என்பதை இவர்கள் ஒக்கிடுவது எனக் குறிப்பிடுவார்கள் என்பது.. “வடிவத்துக்கும் பொருளுக்கும் உள்ள உறவு மரபைச் ( பழக்கத்தைச்) சார்ந்தது” என்பது மொழியியலாளர் சோஸ்யரின் கோட்பாடு. நாட்டுப்புற ஆய்வாளர்கள் இத்தகைய சொல் சித்துகளை இனவரைவியல் ஆய்வில் கண்டிருப்பார்கள். சங்க காலத்தில் ‘உடன்போக்கு’ என்ற சொல் மனமொத்த காதலனும் காதலியும் பெற்றோர் உற்றோரைத் துறந்து சென்று திருமணம் புரிவதற்காக வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதைக் குறித்தது. இன்று அது ‘ஓடிப் போயிட்டாங்க’ எனக் கொச்சைப்படுத்தப் பட்டுவிட்டது. நல்ல வாசனை என்று பொருள்தரும் ‘நாற்றம்’ இன்று கெட்ட வாசனையைக் குறிப்பதாகத் திரிந்து விட்டது.நல்ல தமிழால் புகழாமல் ஒரு காதலி கொச்சைத் தமிழால் புகழ்ந்துவிட்டாள் என்பதால் காதலன் சோர்ந்து வீழ்ந்தான் என்று, பாரதிதாசன் பாடுகிறார்.

“(காதல் ததும்பும் கண்ணாளன் தனைக், கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால், புகழ்ந்தாள் என்று பொறாமல் சோர்ந்து, வீழ்ந்தான்)” எனஅவரது ‘தமிழ்க் கனவு’ என்ற பாட்டில் கூறுவதை கொச்சைத் தமிழே இச்சைத் தமிழாக மாறிவிட்ட இந்தக் காலத்தில் நம்பமுடியுமா? சிலம்பில் கோவலன் கண்ணகியைப் பார்த்து,‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே,காசறு விரையே கரும்பே தேனே’-எனக் கூறுவதைக் குறியாக் கட்டுரை என்பார் இளங்கோவடிகள். (திருமணம் ஆன புதிதில் நம்மவருள் எத்தனைபேர் என்னென்ன கதைவிட்டிருப்பார்கள் என்பது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.)கவிஞர் பிரமிளின்“காதலன் பேச்சில்கருத்தைச் சிதைத்தனசொற்கள்:அவள் சொல்லோமணலில் விரல் விட்ட வடுகண்களின் நோக்கில்சிதையாத கரு.”-என்ற ‘ சொல் ‘ கவிதையிலும் அந்தக் குறியாக் கட்டுரையின் தாக்கம் தெரிகிறது.ஒரு கருவிக்குப் பல சொற்களைக் கண்டுபிடிக்கலாம் ; கையாளலாம்.

அதில் குறையொன்றும் இல்லை. உழவர்கள் உழுவதற்குப் பயன்படுத்துவது ஏர். அதைக் கலப்பை என்றும் கூறுகிறோம். பெரும்பாணாற்றுப் படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கலப்பை (பா. 188) என்ற சொல்லைக் கையாளுகிறார். ஆனால் புறநானூற்றில் (பா.35), வெள்ளைக்குடி நாகனார் ஏரைக் குறிக்க, ‘உழுபடை’ என்ற அழகான சொல்லை ஆள்கிறார்.அய்யர் என்பது ஒரு சமூகப் பிரிவைக் குறிப்பிடுவதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், “நந்தனாராகிய திருநாளைப் போவாரை அய்யர் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். மீனவப் பெண்ணின் தந்தையைக் குறிப்பிட அய்யர் என்ற சொல்லை இளங்கோவடிகள் கையாண்டுள்ளார்.அய்யர் என்பது தலைமை தாங்குகிறவர் அல்லது தலைவரைக் குறிக்கும்” என்று ச.கிருஷ்ணமூர்த்தி தன் ‘திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள்’ என்ற நூலில் விளக்குகிறார்.தாழி என்பது தானியங்களைப் பாதுகாத்து வைப்பதற்காக மண்ணால் செய்யப்பட்டதாகும்.அதை மொடா என்றும் குறிப்பிடுவார்கள். (அளவுக்கு மீறி மதுக் குடிப்பவர்களை மொடாக்குடியன் என்று எங்கள் பழனி வட்டக் கிராமங்களில் குறிப்பிடுவார்கள். இன்று அப்படிச் சொல்லமுடியாது. தமிழக அரசின் செல்லப் பிள்ளைகள் அல்லது அரசுத் திட்டச் செயல் வீரர்கள் அல்லது அரசுக்காகப் பொன்முட்டையிடும் வாத்துக்கள் என்று அவரவர் விரும்பியவண்ணம் அழைத்துக் கொள்ளலாம்.) அதை ஈமத்தாழி எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. கணவனை இழந்த பெண்களை, கழிகல மகளிர், கழிகல மகடூஉ என்று அழைத்திருக்கிறார்கள்.n “இன்சொல் சொல்வதே ஓர் அறம்: இனிமையாகப் பேசுவதே ஓர் அணிகலம் அணிந்ததுபோல : கடுஞ்சொல் இல்லாதவராக ஆள்பவர் இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவம் ஓர் சட்டகத்தை வரைந்து கொடுத்திருக்கிறது. இன்றோ மக்கள் நலம் பேசவேண்டிய மன்றத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசும் காட்சிகளைக் கண்டு கூனிக்குறுகி நிற்கிறோம்.n கம்பன் அனுமன் பாத்திரத்தை உயர்த்திக் காட்ட ஓர் அழகான காட்சியைப் படைத்திருப்பான். சீதையைத் தேடிச் சென்று ,பின்பு கண்டு திரும்பிய அனுமன், “கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்” என்று இராமனிடம் கூறுகிறான். துயரத்தோடு காத்திருக்கும் இராமனுக்கு உடனே தான் சீதையைக் கண்ட செய்தியைச் சொல்வதற்காக, முதலில் “கண்டனென்” எனத் தொடங்குகிறான். ( கண்டேன் சீதையை என அனுமன் சொன்னதாகப் பலபேர் பட்டிமன்றங்களில் பேசக் கேட்டிருக்கிறேன்=. ஆனால் கம்பனில் அந்தச் சொற்றொடர் இல்லை. மேலும் அனுமன் முன்நின்று கட்டிய இராமர் பாலம் யுகங்கள்பல கடந்து கரையாமல் நின்று வில்லங்கங்களை உண்டாக்கும் என்பதற்கான எவ்விதக் குறிப்பையும் கம்பன் விட்டுச் செல்லவில்லை.)n சொல்லைப் பிறழச் சொன்னதால் பாண்டியன் நெடுஞ்செழியன் மாண்ட கதையும் மதுரை எரிந்த கதையும் நமக்குத் தெரியும்.“ ஈங்கென் தாழ்பூங் கோதை தன்காற் சிலம்புகன்றிய கள்வன் கைய தாகில்கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு “என இளங்கோவடிகள் கூறுவார்.கோவலன் கையில் இருந்த சிலம்பை இங்கு கொண்டு வருக எனும்பொருளில் “கொல்லச் சிலம்பு” என்று கூறவந்த மன்னன் நாப்பிறழ்ச்சியாக கொன்றச் சிலம்பு எனக் கூறியிருக்கலாம்.n பொய்யை உண்மைபோல் சொல்வது ஒரு தந்திரமாகப் பார்க்கப் படுகிறது என்று நம் தொன்மமான மகாபாரதம் சொல்லிக்கொடுக்கிறது. பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. துரோணரை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று திட்டம் போட்ட கண்ணன் தருமரை அழைத்து, அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்று கூறும்படி ஆணையிடுகிறான். பொய்சொல்ல மாட்டேன் எனத் தருமர் மறுக்கிறார். உடனே பீமனைக் கூப்பிட்ட கண்ணன் கௌவரவர் படையில் உள்ள அசுவத்தாமன் என்ற யானையைக் கொல்லச் சொல்கிறார். பிறகு தருமரும் அசுவத்தாமன் இறந்துவிட்டான் எனப் போர்க்களத்தில் கூற,அதைக் கேட்டு துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்றெண்ணிப் படைக்கலனைக் கீழே போட்டுவிடுகிறார்.அர்ச்சுனன் அவரைக் கொன்று விடுகிறான். இது ஆள்மாறாட்டம் செய்யக் கண்ணன் கற்றுத் தந்த பாடம்.நம்முடைய நற்றிணையில் ஒரு தாய் தன் மகளிடம் தன் வீட்டின் முன் வளர்ந்த புன்னை மரத்தை , ‘உன்னைவிடச் சிறந்தவள் இந்தப் புன்னை. இவள் உன் உடன்பிறப்பு’ எனக் கூறி வளர்த்திருக்கிறார். காதலன் வந்து கனிந்து பேச நிற்கும்போது புன்னைமுன் நிற்க நாணுகிறாள் தலைவி. தன் அன்னை சொன்னது கற்பனையே என்றறிந்தாலும் அதை மதிக்கிறாள்.“ நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்றுஅன்னை கூறினள் புன்னையது சிறப்பே.”n இப்படிச் சொல்லொன்று வேறுபொருளைத் தருவது அழகியலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் இன்றைய உலகில் சொல் ஒன்று செயல் வேறாக நடப்பவர்களைப் பார்த்து வாளாவிருக்கிறோம்.உலகிலேயே மிகுதியாக கரியமில வாயுவை வெளியிடும் அமெரிக்கா ஊருக்கெல்லாம் அறிவு சொல்லுமே ஒழிய தான் திருந்தாது.உலகமெல்லாம் சுற்றி இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் புகழ்ந்துபேசும் பிரதமர் மோடி, நாட்டை மதவெறியால் துண்டாட நினைத்து வெறியூட்டும் பேச்சுப் பேசும் தன் அமைச்சர்களை அடக்கவிரும்பவில்லை. தலித்துகளை அடிக்காதீர்கள்; என்னைத் தாக்குங்கள் என்று கூறும் மோடி தலித்துகளை மதவெறியர்கள் தாக்குவதைப் பார்த்து மௌனம் சாதிக்கிறார். எல்லா மாநிலங்களையும் சமமாகப் பாவிக்க வேண்டிய பிரதமர் மோடி அரசு காவிரிப் பிரச்சனையில், உச்சநீதிமன்றத்தையே மதிக்காத நிலை எடுக்கிறது.n பன்முகத்தன்மையோடு விளங்கும் பண்பாட்டை அழித்து, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை எனக் குறுகிய நோக்கோடு செயல்பட்டுக் கொண்டு மக்கள்நலம் அழிவதற்காகவே கலவரங்களைத் தூண்டுவோரைப் புரந்துகொண்டு வாழ்வதும் தான் சொன்ன சொல்லின் நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதும்,பசுவைப் பாதுகாப்போம் என்று கூறிக் கொண்டு மனிதர்களை வேட்டையாடுவதும் சரிதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.n “ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்பது சொலவடை. கொல்லும் சொல்லுக்குத் துணைசென்று இந்த நாட்டு இறையாண்மையைக் காவுகொடுக்க எவரும் நினைக்க வேண்டாம். வளரும் தலைமுறை பொய்யர்களை வாழ வைக்காது என்று நம்புவோம்.

பழனி சோ. முத்துமாணிக்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.