கன்னியாகுமரி,அக் 5 –

கன்னியாகுமரியில் பெண்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தால் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகள் பள்ளி மற்றும் வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ளதால் அக்கடைகளை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்தது புகார் மனு கொடுத்த நிலையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இரண்டு டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 107 பெண்கள் உட்பட 116 பேரை காவலர்கள் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் வைத்தனர். அவர்களை விடுவித்த போதும் அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே வராமல் நேற்று இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் , ஒரு கடையை மூடவும் மற்றொரு கடை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.

Leave A Reply