ப்பாவின் வேட்டி எனும் கவிதைத் தொகுப்பு மூலம் அப்பாவின் ஒட்டுமொத்த வாழ்வு
குறித்தொரு பதிவையும், தன் சிறுவயது நிகழ்வுகளையும். கிராமத்து அனுபவங்களையும், கவிதைகளாய் அழகு செய்கிறார் பொம்பூர் குமரேசன். இக்கவிதைகள் கிராமத்து ஏழை விவசாயிகளின் வாழ்வை அவர்களின் அவல நிலைமைகளை உணர்த்துகின்றன.
அப்பா நெல்லு நட்டார் அம்மா நெக்லஸ் போனது,அப்பா கரும்பு வைத்தார் அம்மா கம்மல் போனது, அப்பா உளுந்து விதைத்தார் அம்மா உருண்டு புரண்டு அழுததுதான் மிச்சம் என்ற வரிகளில் எண்ணற்ற விவசாயிகளின் கண்ணீரையும் பல விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும் புரிந்து கொள்ளமுடிகிறது
அப்பாவின் வேட்டி என்ற கவிதையில் அப்பாவின் வேட்டியில் தெரியும் வானம் அதையும்
மறைத்து மறைத்து கட்டிக்காப்பார் மானம் என்பது ஏழை அப்பாக்களின் ஏழ்மையை உணர்த்துகிறது.
கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைகளைக் காளிகோவில் கவிதையிலும், தீட்டு கவிதையில் பேருந்து பயணக்கூட்ட நெரிசலில் பார்க்கபடாத தீட்டு ஊர்வந்தவுடன் பார்க்கபடுகிறது என விளக்கும் கவிதை சாதியத்தின் குரூரத்தையும் பிரதிபலிக்கிறது
சைக்கிள் என்ற கவிதையின் கடைசி வரிகளில் சைக்கிளின் பின் பக்க மட்கார்டில் சாயம் போன ஹெர்குலஸ் உலகத்தை தூக்கி தோளில் வைத்து நிற்பார் வெற்றி பெருமிதத்தோடு அப்பாவும் தூக்கி தூக்கி பார்க்கிறார் குடும்பத்தை நிமிர்த்தவே முடியவில்லை என சைக்கிள் லோகோவுடன் அப்பாவின் வாழ்க்கையை சேர்த்து ஏங்குகிறார்.
வெறும் வறுமையை மட்டுமல்ல அம்மாவிடம் அப்பாவின் காதலையும், நாடகங்களில் கூத்துகட்டி நடிப்பதையும், தன் வீட்டு குழந்தைகள் பற்றியும் எழுதியுள்ளது கவிஞரின் குழந்தைகளின் மீதான அன்பையும் பெற்றோர் மீதான நேசத்தையும் வெளிபடுத்துகின்றன.
இக்கவிதை தொகுப்பில் எந்த வரியை சொல்ல எந்த வரியை விட என தவிக்கும் அளவுக்கு பொம்பூர் குமரேசனின் கவிதைகள் அமைந்துள்ளன.
நிச்சயம் அவர் பிறந்த ஊருக்கு இத்தொகுப்பு பெருமை சேர்க்கும்.
-பொன். ராமகிருஷ்ணன்
அப்பாவின் வேட்டி
ஆசிரியர் பொம்பூர் குமரேசன்
வெளியீடு-நறுமுகை
29-35 தேசூர்பாட்டை, செஞ்சி-604 202
பக்கம்-96, விலை 75
செல்பேசி-9486150013

Leave a Reply

You must be logged in to post a comment.