மத்திய,மாநில அரசுகள் மக்களுக்கான நலத்திட்டங்களை, அதிகாரத்தை கையில்
வைத்திருப்போரின் நலத்துக்கான திட்டங்களாக அமுலாக்கி, பொதுப் பணத்தை
சூறையாடுவதால் பெருவாரியான ஏழை,எளிய மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உளுந்தூர் காலனி பகுதியில் 1050 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. 15 மற்றும் 14 வது வார்டின் பல பகுதிக்கும் சேர்த்து மகளிர் சுகாதார வளாகம் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

இந்த வார்டில்தான் தலித் மாணவர்கள் விடுதி உள்ளது. 180 மாணவர்கள் இங்கு தங்கியிருந்தனர். இதற்கு செல்லும் சாலையின் ஆரம்பத்தில்தான் மேற்கண்ட மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. “6 மாதம் இயங்கிய சுகாதார வளாகம், பின்னர் தண்ணீர் வசதி பழுதடைந்ததால் யாருக்கும் பயனில்லாமல் ஆனது. தினசரி இப்பகுதிப் பெண்கள் வேறு வழி இல்லாததால் வீடுகளுக்கு அருகில் உள்ள மாணவர் விடுதி, வீடுகளுக்கு செல்லும் சாலையை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய சூழலானது.

படிப்பு பாழ்! 

அதிகாலையில் செல்லும் பெண்கள் பலர் பல்வேறு பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி
னர். இச்சாலையை பயன்படுத்த இயலாத நிலையில் பலமாணவர்கள் விடுதியிலிருந்து நின்று விட்டனர்.இதனால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய சூழல் நிலவியது. நாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தினோம். பேச்சுவார்த்தை நடத்திய பேரூராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை பழுது பார்த்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதாகவும், தலித் மாணவர் விடுதி மற்றும் வீடுகளுக்கு செல்லும் சாலையை தார் சாலையாக போட்டுத்தருவதாகவும் எழுத்துபூர்வமாக உறுதியளித்தனர்.

ஆண்டி மடம் கட்டிய கதை…

ஆனால், வழக்கம் போல ஆண்டி மடம் கட்டிய கதையாக அதிகாரிகளின் வாக்குறுதி காற்றில் பறந்தது. இன்றுவரை இப்பணி நடக்கவில்லை” என வேதனை தெரிவித்தனர் சிபிஎம் கிளை செயலாளர் ஏ.கே.முருகன், ஆறுமுகம், கண்ணன், வீரப்பன், தினேஷ், ஐயப்பன், விஜயமணி, பாண்டியன் ஆகிய வாலிபர்கள். ஆனால் இங்கு சாலை போடாத நிர்வாகம் நகரில் வேறு சமூகத்தினர் வசிக்கும் பல பகுதிகளில் தற்போது அவசர அவசரமாக சாலை அமைத்து வருகிறது.

ஒதுக்கப்படும் தலித் பகுதிகள்…

இது குறித்து சிபிஎம் நகர செயலாளர் தங்கராசுவிடம் கேட்டபோது “நீண்ட நாட்க
ளாக நிலவும் தலித் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பிரச்சனையை தீர்க்காத
அரசும், பேரூராட்சி நிர்வாகமும் சாதிய ஒடுக்கு முறையை கையாள்கின்றதோ எனப் பலரையும்பேசவைத்துள்ளது. இந்த அவப்பெயரை நீக்கிட 14, 15 வது வார்டு பிரச்சனையை உடனடியாக தீர்த்திட வேண்டும்” என்றார்.

தானடித்த மூப்பு!

தானாக செய்வதுமில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு ஒப்புக் கொள்வதையும் செய்வதில்லை. தானடித்த மூப்பாக அதிகாரம் கையிலிருக்கிறதென்று பாரபட்சமாக பணிகளை செய்வது தொடர்ந்து நடக்காது. உழைக்கும் மக்களை, தொடர்ந்து அறியாமையிலேயே வைத்திருக்க முடியாது. மக்கள் நலத்திட்டங்களுக்கான பணி ஒப்பந்தங்கள் உரியமுறையில் நேர்மையாக செய்யப்பட வேண்டும். மக்களின் சொத்துக்கள் எங்கெங்கு காணினும் சேதமாகிடாமல் பராமரிக்கப்பட வேண்டும்.

-வி.சாமிநாதன்

Leave a Reply

You must be logged in to post a comment.