சிவகங்கை, செப்.18
மனநலம் பாதித்த பெண்ணிடம் கிட்னி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவைச்செல்வி(30). இதே பகுதியை சேர்ந்த தவசுக்கும், இவருக்கும் திருமணமாகி மணிகண்டன்(12) என்ற மகன் உள்ளார். கோவைச்செல்வி கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் மகன் மணிகண்டன் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார்.

கடந்த 25 நாட்களுக்கு முன் சிவகங்கை வீட்டில் இருந்த கோவைச்செல்வி திடீரென காணாமல் போனார். இந்நிலையில் நேற்று இதே ஊரை சேர்ந்த ஒருவர், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கோவைச்செல்வியை பார்த்துள்ளார். அவரை அங்கிருந்து அழைத்து வந்து சிவகங்கையில் உள்ள அவரது வீட்டில் விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் வலியால் கோவைச்செல்வி துடித்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை தமறாக்கியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது கோவைச்செல்வியின் இடுப்பு பகுதியில் கிழித்து தையல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. அத்துடன் மார்பு பகுதியிலும் துளையிடப்பட்டிருந்தது. அவரது கிட்னி திருடப்பட்டதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து கோவைச்செல்வியின் சித்தி பானுமதி, சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply