காதல், காமம், இச்சை, இம்சை, கூடல், பிரிதல், ஊடல், மகிழ்ச்சி, இரங்கல், சோகம், உளவியல் இந்த உணர்வுகளின் மையப்பொருள் தான் கவிஞர் அன்பாதவனின் “உயிர் மழை பொழிய வா” கவிதைத் தொகுப்பு. நறுமுகை வெளியீட்டில் இளநெஞ்சங்களை இறுகப் பற்றுகிறது இந்நூல்.
பெண், ஆண் என்ற ஒருசாரார் பார்வையில் இல்லாமல் பொதுப்பார்வையில் பாலியல் உணர்வு கவிதையாய் வடிக்கப்பட்டிருக்கிறது. கவிதை நூலை “தாயாகி யென்னைத் தாங்கும் உனக்கு” என தன் வாழ்க்கைத்துணைக்கு அர்ப்பணிக்கும் பெண்சமத்துவவாதியாய் மிளிரும் கவிஞர் காமத்தை சற்றுத்தூக்கலாகவே கொடுத்துள்ளார். காமத்துப்பாலின் களவியலையும் கற்பியலையும் 80 பக்கத்தில் அடைத்திருக்கும்விதம் அருமை.
முத்தங்கள் ஈந்து மகிழும் மறுதாயை சித்தம் முழுதும் கலந்தாளை/நித்தமும்
பாடாத நாவென்றும் நாவில்லை/அன்னவளின் ஈடாக யாருமிலைக்காண்.வெண்பாவில் பெண்பா பாடிய கவிஞர் தன் துணையை மறுதாய்க்கு ஒப்பாக வர்ணிக்கும் வரி இது.
ஊடலில் காதலன் கதறல் இது என்னை கிழிப்பது சுகமெனில் கிழித்து விட்டு போ,
சந்தோஷமாய் காவு கொடுக்கிறேன் இரண்டாம் தாய்க்கு என்னை.
மனைவியிடம் தாயினை தேடும் ஒரு குழந்தையின் பரிதவிப்பை பதிவு செய்திருக்கிறார்.
ஆபாசமும் அருவருப்பும் இன்றி ஒரு பாலியல் கவிதை எழுதமுடியும் என கவிஞர் நிரூபித்திருக்கிறார் கண்ணதாசனைப்போல.
ஒவ்வொரு முறையும் அறுந்து வீழ்ந்து துடிக்கிறது உன்னுடனான உரையாடல் வெட்டுண்ட பல்லிவாலாய். உவமையின் உச்சம் தொடுகிறது ஊடல் தெறிக்கும் வரிகள்.
கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் தொகுப்பு நூல்கள் என தனது 22 படைப்பு அனுபவத்தின் பிரசவம் இந்தக் கவிதை தொகுப்பு எனலாம்.
காமத்துப்பால் சொல், பொருள், உவமை நயம் கொண்டு மகிழ்ச்சியை உள்ளடக்கி இலக்கியச்சுவை ததும்புகிறது அன்பாதவனின் கவிதைகளில்:
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படுவார். (குறள்: 1289)
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். (குறள் 1257)
என வள்ளுவனின் காமத்துப்பாலுக்கு ஈடாக
கவிஞர் எழுதுகிறார்,
சமூக அக்கறையில்லாத காதலால் உடற்பசி தீருமே ஒழிய காலத்தால் நிலைத்து நிற்கமுடியாது. ஆண் பெண் உறவு கலவிக்கு மட்டுமானதல்ல சமூகமாற்றத்திற்கான கலகப்பொருளாகவும் இருக்கவேண்டும் என்பதை கவிஞர் உணர்ந்திருப்பார் என எண்ணுகிறேன்.
கவிஞனாயிருப்பதில் கர்வமடைகிற நீ புருஷனாயிருப்பதின் பொருளறிவாயா
கொந்தளிக்கிறாள் செல்லம்மா
கவலை..கசப்பு..காயங்கலந்த..
கோபமுறுக்கோடு… என்ற வரியில் பாரதியை வம்பிழுக்கும் கவிஞர்
நம்பிக்கைகள் பொய்த்த வாழ்வை தும்பிக்கையொன்று முடித்தது
வாரணத்துக்கு வந்தனம் என்கிறார்.
அதை விட ஒருபடி மேலே போய்
சொகுசாக இருக்கிறான் சுப்பையா/சில்மிஷத்துக்கு செல்லம்மா
கவிதைக்கு கண்ணம்மாவென
கள் சுவையோடு கழியும் பொழுது, என்கிறது இன்னொரு கவிதை. பாரதியையும் கண்ணாம்மாவையும் இது குறைத்து மதிப்பிடுவதாய் தெரிகிறது.
இல்வாழ்க்கையில் வறுமையின் காரணமாக செல்லம்மாள் சில நேரங்களில் வருத்தப்பட்டாலும் மகாகவியின் ஆளுமையை அவர் குறைத்து மதிப்பிட்டதில்லை. மாறாக பாரதி மறைந்த அடுத்த ஆண்டே அவரது பதிவு செய்யப்படாத கவிதைகளை தொகுப்பாக கொண்டுவந்த பெருமைக்குரியவர் செல்லம்மா என்பதை மறுப்பதற்கு இல்லை காண்.

உயிர் மழை பொழிய வா…
கவிதை தொகுப்பு
ஆசிரியர்: அன்பாதவன்
பக்கம்: 80, விலை ரூ.70/-
வெளியீடு : நறுமுகை
29/35/ தேசூர்பாட்டை,
செஞ்சி-604202
விழுப்புரம் மாவட்டம் . அலைபேசி-9486150013

Leave a Reply

You must be logged in to post a comment.