இடாநகர்,செப் 16 –

அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் உட்பட 43 எம்.எல்.ஏ.கள் காங்கிரசிலிருந்து விலகி அருணாச்சல மக்கள் கட்சியில் இணைந்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் முதலமைச்சர் பிமா காண்டு உட்பட 43 எம்.எல்.ஏ.கள் காங்கிரசிலிருந்து விலகி அருணாச்சல மக்கள் கட்சியில் இணைந்தனர்.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பிமா காண்டு , நான் சட்டசபை சபாநாயகரிடம் , நாங்கள் காங்கிரசை அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியுடன் இணைத்துவிட்டோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

தொடரும் குழப்பம் :

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாசலபிரதேச சட்டசபையில் காங்கிரசுக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அங்கு நபம் துகி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு எதிராக கட்சியின் 30 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 26–ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் ஆதரவுடன் தங்கள் கோஷ்டியைச் சேர்ந்த கலிகோ புல் என்பவரை முதல்–மந்திரியாக தேர்ந்தெடுத்தனர்.
இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து நபம்துகி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்றும் மாநிலத்தில் நபம்துகி தலைமையிலான காங்கிரஸ் அரசே தொடரவேண்டும் எனவும் கடந்த ஜூலை 13–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து அருணாசலபிரதேச அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் ஏற்பட்டன. மாநில முதல்–மந்திரியாக நபம்துகி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவர் ஜூலை 16–ந்தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என மாநிலத்தின் பொறுப்பு கவர்னர் ததகத்த ராய் அதிரடியாக உத்தரவிட்டார். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே நபம் துகி பதவி விலகினார். இதையடுத்து கலிகோபுல் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினர். காங்கிரசின் 45 எம்.எல்.ஏ.க்களும் ஒன்று கூடி கட்சி மேலிடம் எடுத்த முடிவின்படி மறைந்த முதல்–மந்திரி டோர்ஜி காண்டுவின் மகனான பிமா காண்டுவை சட்டசபை கட்சி தலைவராக(முதல்–மந்திரி) தேர்ந்தெடுத்தனர். அவருக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து பிமா காண்டு பதவியேற்றார். இப்போது காங்கிரஸ் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழந்து உள்ளது. அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளருமான கலிக்கோ புல் கடந்த ஆகஸ்ட் மாதம்  தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Leave a Reply

You must be logged in to post a comment.