கடலூர் , செப் 11 –

விழுப்புரம் , கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்றிரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கிராமங்களில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டதால் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள மைதானம் மற்றும் தெருக்களுக்கு திரண்டனர். விடிய விடிய மைதானத்திலேயே தூங்காமல் காத்திருந்தனர்.

இதேபோல் திட்டக்குடி பகுதியிலும் நேற்று இரவு 1 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. பொதுமக்களிடம் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவு 1 மணி அளவில் நில அதிர்வினால் வீடுகள் குலுங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. 10 விநாடிகள் நில அதிர்வு நீடித்தது. வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள் அச்சத்தில் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 1.8 என பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நில நடுக்கம் எதுவும் ஏற்பட்டதாக ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என புவியியல்  ஆய்வு மைய இயக்குநர் மீனாட்சிநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.