தூத்துக்குடி, செப்.11-
இந்தியா முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் சுமார் 35 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் சுமார் ஐந்துலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். வேகமான வளர்ச்சியைக் கண்டுவரும் இந்தத் துறை இன்னும் ஐந்தாண்டுகளில் கடும்  நெருக்கடிக்குள்ளாகும். 30 சதவீதம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் 1,600-க்கும் அதிகமான தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ளன. இதில் 70-க்கும் மேற்பட்டவை டிசிஎஸ், இன்போசிஸ், சிடிஎஸ் போன்ற பெரும் நிறுவனங்கள்.

இவை தவிர, மோடி அறிவித்துள்ள ஸ்டார்ட் அப்  இந்தியா திட்டத்தைத் தொடர்ந்து  ஏராளமான நிறுவனங்கள் இந்தத் துறையில் புகுந்துள்ளன. இதனால், ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் வரவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இத்துறையில் ஆட்டோமேஷன் (தானியங்கி முறை)  புகுத்தப்பட்டு வருகிறது.

ஆட்டோமேஷன் என்றால் என்ன?

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் தங்களுக்கான தகவல் தொழில் நுட்ப வேலையை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் குறைவான கூலி.

டேட்டா எண்ட்ரி, கால் சென்டர், டெஸ்டிங், சப்போர்ட் ( உதாரணத்திற்கு மைக்ரோ சாப்ட் எக்ஸ்செலில் ஒரு பிரச்சனை என்றால், அது குறித்த விபரத்தை இந்தியாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்குத் தெரிவித்தால் இவர்கள் இங்கிருந்தபடியே பிரச்சனை என்ன என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான வழிமுறையை வழங்குவார்கள்) போன்ற பிரிவுகளில் பல லட்சம் ஐடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தப் பணிகளில் ஊழியர்களைப் பயன் படுத்துவதைத் தவிர்ப்பதற்காக லாபம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தானியங்கி முறையைக் கொண்டுவரும் (ஆட்டோமேஷன்) முயற்சிகளில் ஈடுபட் டுள்ளன.

ஆட்டோமேஷன் நடவடிக்கைகளை சில பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கிவிட்ட நிலையில் புதிதாக பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளன.

வளாகத் தேர்வு ஒரு ஏமாற்று?

இத்தகைய பின்னணியில் தான் தமிழகத்தில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், ஏமாற்று வித்தையாக வளாகத் தேர்வுகளை நடத்துகின்றன. இதில் பல தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. கல்லூரி முதலாளிகள், கல்லூரியில் செயல்படும் வளாகத் தேர்வுக்குழு பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள அதிகாரிகளுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதாவது, எங்கள் கல்லூரியில் படித்த அனைத்து மாணவர்களையும் வளாகத் தேர்வு மூலம் எடுத்துக் கொள்ளுங்கள்; அதற்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை கல்லூரி சார்பில் வழங்குகிறோம் என்பதே அது.

பன்னாட்டு நிறுவனங்கள் தேர்வு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை. எல்.அன்.டி. நிறுவனம் 1,500 மாணவர்களை தேர்வு செய்துள் ளது. 18 மாதங்களுக்கு பின்பு ஆன்-லைன் மூலம் தேர்வு ஒன்றை நடத்தி அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி வேலை வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பட்டியல் நாஸ்காம் மூலம் தொகுக்கப்பட்டு வருகிறது. நாஸ்காம் என்பது முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பு. இத்துறையில் பணியாற்றும்
ஊழியர்கள் சங்கம் அமைத்தல், பிரச்சனைகள் குறித்து கேள்வியெழுப்பினால் நாஸ்காம், அத்தொழிலாளர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவரை வெளியேற்றுவதும், வேறு நிறுவனங்கள் பணிவழங்கக்கூடாது என்று உத்தரவிடு வதும் போன்ற வேலையை செய்து வருகிறது. ஐ.டி. துறையில் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். திருமணமான பெண்கள் குழந்தை பெற்ற பின் வேலைப் பளுவால் பணியை விட்டு விடும்  நிலை உள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களிலும் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். பணியிடங்களில் பெண்
கள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான புகார்களும் அதிகம்.இதைக்கண்காணிக்க விசாகாகுழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

மோடியின் ஸ்டார்ப் அப் இந்தியா

திட்டம் ஒருபுறம்; மற்றொருபுறத்தில் ‘அமர்த்து- துரத்து’ என்ற வார்த்தையை தகவல் தொழில்நுட்பத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் வேகமாக அமல்படுத்தி வருகின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடை பெறும் கட்டணக்கொள்ளையை கண்டுகொள்ளாத அரசு, தகவல் தொழில்நுட்பதுறை ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கண்டு கொள்ள மறுக்கிறது.

தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக முதல்வருக்கு உள்ளது. இந்த விபரங்களை தூத்துக்குடி யில் நடைபெற்று வரும் சிஐடியு மாநில மாநாட்டில் பங்கேற்ற தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

– சௌமி

Leave a Reply

You must be logged in to post a comment.