புதுதில்லி, செப். 8-

நாடு முழுவதும ஓரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ( ஜிஎஸ்டி ) முறை அமலுக்கு வரவிருக்கிறது. இதற்கான ஒப்புதலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று அளித்து கையெப்பமிட்டுள்ளார். இதன் மூலம் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஒரே மாதரியான வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா நீண்ட நாட்களாக விவாதத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாநிலங்களவை கூட்டத்தின் போது  7 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 203 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிர்ப்புத் தெரிவித்து யாரும் வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்னதாக, ஜிஎஸ்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

கூடுதலாக 1 சதவீத வரி விதிப்பது தொடர்பான ஷரத்தை நீக்குவது உள்பட மத்திய அரசு கொண்டு வந்த 6 திருத்தங்களுக்கும் மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. இந்திய வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்படும் ஜிஎஸ்டி மசோதா, அறிவிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. எனினும், இந்த மசோதா சட்டமாக வேண்டுமெனில், மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவையின் ஒப்புதலை மீண்டும் பெற வேண்டும். இதற்காக மக்களவையில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அங்கும் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல், நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களும் அதை ஆதரிக்க வேண்டும்.

நாடு முழுவதும் அமலில் இருக்கும் பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, ஒரே வரியை விதிக்கும் வகையில், ஜிஎஸ்டி மசோதாவை தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிறது. முன்னதாக மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலமிருந்ததால், அந்த அவையில் மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அந்த அவையில் ஜிஎஸ்டி மசோதாவை மத்திய அரசு இதுவரை தாக்கல் செய்யாமல் இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் கருத்தொற்றுமை ஏற்பட்டது. மேலும், மக்களவையில் முன்பு நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதாவை (அரசமைப்பு சட்டத்தின் 122}ஆவது திருத்த மசோதா) விவாதத்துக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியபோது, ஜிஎஸ்டி மசோதாவை தங்கள் கட்சி ஆதரிப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு யோசனையை காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளுடனும், என்னுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தியபிறகு, மசோதா மேம்பட்டுள்ளது.

உச்சபட்ச வரி விதிப்பு விகிதம் 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்; கூடுதலாக விதிக்கப்பட்ட 1 சதவீத வரி விதிப்பு நீக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே வரி விதிப்பு தொடர்பாக எழும் பிரச்னைகளுக்கு குறைதீர் நடைமுறை ஏற்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பமாகும். இதில், மத்திய அரசு முதலில் பிடிவாதமாக இருந்தது. எனவே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய நிதியமைச்சரிடம் இருந்து ஒரு உறுதிமொழியை எதிர்பார்க்கிறேன். ஜிஎஸ்டி மசோதாவை எப்போது அறிமுகம் செய்தாலும், அதை நிதி மசோதாவாக அறிமுகப்படுத்த வேண்டும். பண மசோதாவாக கொண்டு வரக்கூடாது என்றார் ப.சிதம்பரம்.

சமாஜவாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசுகையில், “ஜிஎஸ்டியை எங்கள் கட்சி விரும்பவில்லை என்றபோதிலும், மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்; ஏனெனில் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதாக எங்கள் கட்சி மீது குற்றம்சாட்டப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜிஎஸ்டி மசோதாவை, பண மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்யக் கூடாது’ என்றார்.

மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், “இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா செல்லாதது; இது மாநில அரசுகளின் நிதி சுயாட்சிக்கு எதிரானது. இது தமிழகத்துக்கு நிரந்தர இழப்பை ஏற்படுத்தும். ஆகையால், இதை எதிர்க்கிறோம்’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியபோது, ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், நாட்டின் கூட்டாட்சி முறை பாதிக்கப்படும் என்று அச்சம் நிலவுவதாகவும், அதைப் போக்கும் வகையில், மாநில அரசுகளை நிதிக்காக கையேந்த விடமாட்டோம் என்று மத்திய நிதியமைச்சர் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரக் ஒ பிரையன், பிஜு ஜனதா தளம் உறுப்பினர் ஏ.யு. சிங் தியோ, பகுஜன் சமாஜ் உறுப்பினர் சதீஸ் சந்திர மிஸ்ரா, தெலுங்கு தேசம் உறுப்பினர் சி.எம். ரமேஷ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பிரஃபுல் பட்டேல் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.

இதையடுத்து உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜேட்லி பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மசோதாவின் அம்சங்கள் குறித்து தெரியாமல், அது நிதி மசோதாவாக கொண்டு வரப்படும் என்று உறுதியளிக்க முடியாது.

ஜிஎஸ்டி வரியை முடிந்த வரையில், குறைவாக விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசுகளின் வருவாய் இழப்புகளுக்கு இழப்பீடு அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், வரி மீது மற்றொரு வரி விதிக்கும் நடைமுறை முடிவுக்கு வரும்’ என்றார். இதனை தொடர்ந்து மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுதது நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்களில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது. அதன் அடுத்த கட்டமாக இந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் தந்தால் அமலுக்கு வரும் என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ( வியாழனன்று ) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சரக்கு மற்றும் சேவை  வரிக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   .

Leave a Reply

You must be logged in to post a comment.