விருதுநகர், செப்.1 –
தமிழகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதி வேகமாகச் செல்லும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களால் பெரும் விபத்து ஏற்படுகிறது. எனவே, அந்த வாகனங்களில் அவசியம் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மேலும், தனியார் நர்சரி பள்ளி முதல் மேல்நிலை மெட்ரிக் பள்ளிகள் என
நாள்தோறும் பெருகி வருகின்றன. இந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் டிரஸ்ட் பெயரில் தொடங்கப்படுகின் றன. இவையனைத்தும் நகர் பகுதியிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதியில் கட்டப் பட்டுள்ளன. இதனால் இங்கு சென்று வர பேருந்து வசதிகள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும், போக்குவரத்து வசதிகள் தங்களது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ளதாக விளம்ப
ரங்கள் செய்கின்றன. இதை நம்பி பெற்றோர்கள் பல லட்ச ரூபாய் பணம் செலவு செய்து தங்களது குழந்தைகளை அங்கு சேர்க்கின்றனர். போக்குவரத்து செலவுக்கென பெற்றோர் களிடம் கணிசமான தொகையையும் வசூல் செய்து விடுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, நகருக்குள் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் யாவும் விதிமுறைகளை கடைப் பிடிப்பதில்லை. பேருந்து நிறுத்தம் இல்லாத பல இடங்களில் தங்களது மனம் போன போக்கில் பள்ளி,  கல்லூரி மாணவர்களை ஏற்றி, இறக்கி விடுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.  போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் நகர்ப்புறங்களில் தனியார் பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்கள் அதிவேகமாகச் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகின்றனர். வேகமாகச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்துக் காவலர்களும் கண்டுகொள்வ
தில்லை. போக்குவரத்து அலுவலர்களால் வருடம் ஒருமுறை மட்டுமே தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களோ, அனைத்து வாகனங்களையும் சோதனையிடக் கொண்டு வருவதில்லை. நல்ல நிலையில் உள்ள
வாகனங்களை மட்டுமே ஆய்வு செய்ய அனுமதிக்கின்றனர். பிற வாகனங்கள் கணக்கில் லாமல் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை அனுபவமுள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், இந்த விதிமுறைகள் பெரும்பாலும் பின் பற்றப்படுவதில்லை. இதனாலும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த புதனன்று சிவகாசியில் கல்லூரி வாகனமும், ஆட்டோவும் மோதியதில் நான்கு பேர் பலியாயினர். பல இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் வந்த வாகனத்திலேயே பலியாகியுள்ளனர். அளவுக்கு அதிக
மாக மாணவ, மாணவிகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிச்செல்வதையும் போக்குவரத்து அலுவலர்கள் தடுப்பதில்லை. பல இடங்களில் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வர வேண்டும் என வாகன ஓட்டுநர்களை பள்ளி நிர்வாகம் நிர்ப் பந்தப்படுத்துகின்றது.இதனால் ஓட்டுநர்கள் வேறுவழியின்றி அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தமிழக அரசு, தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக்கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே உயிரி
ழப்புகளைத் தடுப்பதோடு, போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.