அவரது அறிவிப்பு கர்நாடக இசை ரசிகர்களைத் திகைப்புக்குள்ளாக் கிற்று.
“இனிமேல் சென்னையில் டிசம்பரில் நடைபெறும் இசைக்கச்சேரிகளில் பங்கேற்பதில்லை. இதுவரை எனக்கு ஆதரவளித்த இசை பாக்களுக்கு நன்றி’’ என்று இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்தார் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா!
கர்நாடக இசையானது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்தமில்லை என்கிற அவரது
வாதம் பிடிவாதமாக இருக்கிறது. மேலும் ‘ கலை விற்பனைக்கல்ல. கச்சேரி கேட்க எதற்கு கட்டண வசூல்’ என்று அடுத்த கேள்விக் கணையைத் தொடுத்தார். இசைமேதை டி.கே.பட்டம்மாள் இதே கருத்தைக் கொண்டிருந்தார். அனைவருக்குமான இசையாக கர்நாடக இசையை ஜனநாயகப் படுத்த வேண்டும் என்ற கிருஷ்ணாவின் பேராவல் உண்மையான ரசிகர்களை குளிர்வித்தது.
இசைக்கு மொழி, இனம், மதம், சாதி கிடையாது. மாணவப் பிஞ்சுகளிடமிருந்தே இசையறி
வையும், கலை பயிற்றுவித்தலையும் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் ‘ஸ்வானுபவ’ என்ற ஆண்டுக்கொருமுறை இசை நிகழ்வை சென்னையில் கொண்டாட்டமாக நடத்தத் துவங்கினார் கிருஷ்ணா.
சென்னை பெசன்ட் நகர் ஊரூர் – ஆல்காட் குப்பத்தில் ஜனவரி 2016ல் மார்கழி இசை விழாவைத் தொடங்கி வைத்தார்.
மீனவர்கள், தலித்துகள், உயர் நடுத்தர மக்கள் என அனைவரும் அவரை நோக்கித் திரண்டனர். அவரது இசையை ரசித்தனர். செவ்வியல் இசையை ஜனநாயகப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அதே நேரம் விளிம்பு நிலை மக்கள் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தெருக்கூத்துகளிலும் அழகியல் கூறுகள் பலவுண்டு.
கர்நாடக இசைக்கலைஞர்கள் பரதக்கலைஞர்கள் இதை அறிந்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தி 9வது ஆண்டாக ‘ஸ்வானுபவ’ இயக்கம் வேரூன்றி மதுரை, கோவை போன்ற மாநகரங்களிலும் கிளை பரப்பியுள்ளது.
இதற்காக சமீபத்தில் ரமோன் மக்ஸேஸே விருது, அவரைத் தேடி வந்து அவரது இயக்கத்தை அங்கீகரித்து உலகறியச் செய்தது! 2016 ஆகஸ்ட் 22 முதல் 24 வரை சென்னை
கலாஷேத்ரா நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வானுபவ’ கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
ஆக.22 அன்று மியூசிக் அகாதெமி தலைவர் என்.முரளி, கர்நாடக இசைப்பாடகர் சுகுணா வரதாச்சாரி, கலாஷேத்ரா இயக்குநரும், பரதக்கலைஞருமான பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
முதல்நாளில் டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம், சுகுணா வரதாச்சாரி இசை நிகழ்ச்சி, கலாஷேத்ரா மாணவர் நிகழ்ச்சிகள், பிரண்ட்ஸ் கலைக்குழுவினரின் பறையாட்டம் இடம் பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கலாஷேத்ரா தலைவர் என்.கோபால் சாமி சிறப்புரையாற்றி
னார். கவுரி ராம் நாராயண் இயக்கத்தில் உருவான இசைநாடகம், மீனாட்சி சிறீநிவாசன் பரத நாட்டியம், உடையாளூர் கல்யாணராமனின் நாமசங்கீர்த்தனம், மாம்பலம் டாக்டர் எம்கேஎஸ் சிவா குழுவினரின் நாதசுர இசை இடம் பெற்றது.
இறுதிநாளான ஆக.24 அன்று குவாலியர் ஜெய்ப்பூர், ஆக்ரா – கராணா புகழ் பண்டிட் அருண்
கஷால்கரின் இந்துஸ்தானி இசை பரவசப்ப டுத்தியது. நிகழ்வின் இறுதியில் கேள்விக்கான பதிலை இசையாகவே வாசித்துக் காட்டி வேறொரு தளத்துக்கு எடுத்துச்சென்றார் கஷால்கர்.
தொடர்ந்து சென்னை கலைக்குழுவின் வீதிநாடகமான “பயணம்’’அரங்கேறியது. பிரம்மாண்டமான கட்டிடங்களையும், பாலங்களையும் கட்டி சென்னை மாநகரை நிமிர்த்திய கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்நிலையோ வீழ்ந்து கிடக்கிறது! விவசாயம், தொழில் நொடித்து பஞ்சம் பிழைக்க அத்துக்கூலிகளாக கிராமங்களிலிருந்து சென்னை வந்த தொழி
லாளர்களை அலைக்கழிக்கிறது கார்ப்பரேட் கும்பலும், அடிவருடிகளும் இணைந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் கூட்டணி. அவலத்துக்கு நடுவிலும் அவர்களிடம் காதல், விழாக்கள் என சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறுகின்றன.
ஹபீப் தன்வீரின் நாடகக்குழுவைப்போல் இசையையும், நாட்டுப்புற கலை வடிவத்தையும காவியமாக்கி இருக்கிறார் நெறியாளர் பிரளயன்.
அரங்கில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் உற்சாகமாகத் திரண்டிருந்தனர். அரசு மாற்று
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் முழுமையாக ஈடுபாட்டுடன் நாடகத்தை ரசித்த வேளை
யில், ஆங்கில வழி கற்ற மாணவர்கள் பல வசனங்களுக்கு பொருள் கேட்டுக் கொண்டிருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது.
ஆனாலும் அனைவர் கரவொலியும் அடங்க நெடுநேரமானது. பக்கத்தில் அமர்ந்தி
ருந்த கலாஷேத்ராவின் பரதமாணவிகள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். திரைப்படத்தில் அழுது பார்த்ததுண்டு. வீதிநாடகத்துக்கு இத்தனை மகிமையா? கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கனவின் தொடக்கமாக இதை எண்ணிக் கொண்டேன்.
“தன்னன்னானே தன்னான்னானே
தன்னன்னா….’’
என்ற துயரக்குரல் அவர்களிடம் ஒலித்துக்கொண்டே இருக்கும் தான்.
கலை மக்களுக்கானது என்பதை மெய்ப்பித்தது இந்நிகழ்வு. தொடர்ந்து கோம்பை அன்வரின் “யாதும்’ ஆவணப்படம் , நாகை இஸ்லாமிய சூஃபி இசை உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.
கலைகளின் கலவையாய் அமைந்த ‘ஸ்வானுபவ’ நிகழ்வுகள் நெகிழ வைத்தன. மாற்றுப் பண்பாட்டுப் பாதையாய் அது மணத்திரையில் விரிந்தது.

இரா.குமரகுருபரன்

Leave A Reply

%d bloggers like this: