தமிழகத்தில் அதிக குடிசைகள் நிறைந்த மாவட்டம் கடலூர், நாகை, திருவாரூர்,விழுப்புரம். இந்த குடிசைகள் பல்வேறு நிகழ்வுகளால் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து விடுகிறது. இதில் குடியிருந்து வரும் எழைகள் குருவி போல் சேர்த்து வைத்த பொருட்களையும் இழந்து தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது.இதனைப் போக்குவதற்கு மத்திய அரசும்,மாநில அரசும் இணைந்து இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு (ஐஏஒய்)திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் கான்கிரிட் தளத்துடன் சிறிய அளவில் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார்கள்.இந்நிலையில், கடந்த 2011 ஆம்ஆண்டு டிசம்பரில் கடலூர் மாவட்டத்தை தானே புயல் கடுமையாகத் தாக்கியது. இதில், பல கிராமங்களின் குடிசைகள் இருந்த இடம் தெரியாமல் காற்றில் பறந்து விட்டது. அப்போது அரசு வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று மாநில அரசின் பங்களிப்புடன் தானே வீடு கட்டும் திட்டத்தை கொண்டுவந்தது.
இதன் மூலம் கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் 2 ஆயிரம் குடிசைகளை கான்கிரிட் வீடுகளாக கட்டி கொடுக்க முடிவு செய்து பணிகள் நடந்து வருகிறது.இந்த திட்டத்தில் வீடுகளைப் பெற எவ்வளவு சிரமம்,அதற்கு ஊராட்சி மன்றத் தலைவருக்கும், ஒன்றிய அதிகாரிகளுக்கும் தட்சணையாக எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று வீடுகள் பெற்ற பயனாளிகளைக் கேட்டால் கண்ணீர் விடுகிறார்கள். இதுஒரு புறம் இருக்க, கடலூர் மாவட்டத்திலேயே அதிக குடிசை வீடுகள் உள்ளது குமராட்சி ஒன்றியம். இங்குள்ள ஏழைகள், தானே திட்டத்தின் மூலம் வீடுகளை கட்டி வருகிறார்கள். இந்த வீடுகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் ஒன்றிய அலுவலகங்கள் மூலம் கம்பி, ஜன்னல், கதவு, சிமண்ட் என தளவாட பொருட்களுக்கு 50 விழுக்காடு பணம் பிடித்தம் செய்துகொள்ளப்படுகிறது.இத்திட்டத்திற்கு வழங்கும் பொருட்கள் ஒன்றிய அலுவலகங்களில் திறந்த வெளியில் கிடக்கிறது.
இதனால் மழை, வெய்யில் என துருப்பிடித்து வீணாகி வருகிறது. துருப்பிடித்து தரம் இழந்த இந்தப் பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்டுவதற்கு அரசு அதிகாரிகள் வழங்குகிறார்கள். வறுமையிலுள்ள அந்த மக்கள் அதிகாரிகளை கேள்வி கேட்டால் இதுவும் கிடைக்காது என்கிற பயத்தில் உள்ளனர். அப்படி கட்டிய வீடுகள் குறைந்த காலத்திலேயே விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து விழுகிறது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீடே சேதம் அடைந்து விடுகிறது. தளவாடப்பொருட்களை மழை,வெய்யில் படாமல் பாதுகாத்து வழங்கவேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை குமராட்சி ஒன்றியம் தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மைதிலி என்கிற பயனாளி கூறுகையில், “ அரசு ஒதுக்கியுள்ள இந்த வீடுகளை கட்டி முடிப்பதற்குள் நாங்கள் படாத பாடுபடுகிறோம். பாதி பணத்திற்கு பொருளாக கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் தரமில்லை. மீதமுள்ள பாதி பணமும் இங்கு வரும் அதிகாரிகளுக்கும் பில் தொகை பாஸ் செய்யவும் கொடுக்கவே போதவில்லை” என்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.