பெங்களூரு: ராணுவ மந்திரியின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த, நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ரம்யா கூறுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தனக்கு எதிராக கருத்துக்கூறுபவர்களின் பேச்சு சுதந்திரத்தை பறிப்பதற்கான ஆயுதமாக தேசத்துரோக வழக்கை பயன்படுத்துகிறது, என்றார்.
கடந்த 16ம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கார், ஹரியாணாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, “பாகிஸ்தானுக்கு செல்வது, நரகத்துக்கு செல்வதற்கு சமம்” எனக்கூறினார். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்லாமாபாத் சென்று வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா, “பாகிஸ்தான் நரகம் அல்ல, அங்கு வாழ்பவர்களும் நம்மை போன்ற மக்களே,”  எனக்கூறினார்.
இவரின் கருத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது தேசத்துக்கு விரோதமாக பேசுவது, பிரிவினை வாதத்தை ஏற்படுத்தக்கூடியது என ரம்யாவைத்தாக்கி பேசத்துவங்கினர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம், கொடகோ மாவட்ட தலைவர் காட்னமானே விடாலா கவுடாவின் புகாரின் பேரில், ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டபோது, “இதற்காக வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை. அதேபோல், நான் கூறிய கருத்துகளையும் திரும்பப்பெறப்போவதில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, கருத்துகளைக்கூட சுதந்திரமாக பேச முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. தங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது,” என்றார்.
இதற்கு முன்னதாக, காஷ்மீரில் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில், தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறி, அம்னெஷ்டி இண்டர்நேஷனல் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.