இம்பால், ஆக. 9-
மணிப்பூரில் அமல் படுத்தப்பட்டுள்ள சிறப்பு ராணுவ சட்டத்தை விலக்கக்கோரி கடந்த 2000 ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்த இரோம் சர்மிளா தனதுபோராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
மணிப்பூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 1958ம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தையும் பாதுகாப்புப் படையினர் பெற்றனர்.
இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், இம்பால் அருகே உள்ள கிராமத்தில் சந்தேகத்தின்பேரில் குழந்தைகள் உட்பட 10 பேரை சுட்டுக் கொன்றனர். இதையெதிர்த்து இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது கோரிக்கை 16 ஆண்டுகளாகியும் ஏற்றுக்கொள்ள வில்லை இந்நிலையில் இரோம் சர்மிளா இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை 10 ஆயிரம் ரூபாய் தனிநபர் பிணையுடன் விடுதலை செய்துள்ளார். விடுதலையடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மணிப்பூரில் ஜனநாயகம் இல்லை. மணிப்பூரின் முதல்வராகுவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். முதல்வரான பின் தான் சிறப்பு ராணுவ சட்டத்தை விலக்க வேண்டிய முயற்சிகளை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.