ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஒரு நகைச்சுவை எழுத்தாளரைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார் -வெளவால் தலைகீழாகத் தொங்கியபடி சகலமானதையும் பார்ப்பது போல், அவர் நம் அன்றாட வாழ்க்கையைப் பார்க்கிறார். அந்த வித்தியாசமான கோணம் அவருடைய எழுத்தை மற்ற எழுத்திலிருந்து வேறுபடுத்துகிறது.

ஞானக்கூத்தன் கவிதைக்கும் இது பொருந்தும். வடிவில் எளிமையானது ஞானக்கூத்தன் கவிதை. இரண்டே வாசிப்பில் பெரும்பாலும் மனப்பாடமாகி விடும். நாலு பேருக்கு நடுவிலே எதையாவது நிலை நிறுத்தவோ, மாற்றுக் கருத்தாகக் கோடி காட்டவோ, அல்லது  கவன ஈர்ப்புக்காகவோ  அந்தக் கவிதையைப் பெருமிதமும் குறும்புச் சிரிப்புமாகச் சொல்லலாம். சொல்லிச் சொல்லி, கவிதையை நாம் எழுதியதாகவே நம்பத் தொடங்கவும் கூடும்.

வாழ்க்கையில் மனிதன்
கண்டு பிடித்ததில் சிறந்ததாகும்
தலையணை.
அதற்குள் ஒன்றும்
பொறி இயற் சிக்கல் இல்லை.
பாயில்லை என்றால் வேண்டாம்
தலையணை ஒன்றைப் போடும்.

போன வாரம் ஞானக்கூத்தன் காலமானபோது குறுகலான திருவல்லிக்கேணித் தெரு ஒன்றில் அவருடைய வீட்டுக்குக் கீழே ரிக்சாவுக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் வழி விட்டு நின்றபடி அவருடைய நண்பர்களும் கவிதை ரசிகர்களும் அவரைப் பற்றிக் கொஞ்சமும் அவருடைய கவிதைகள் பற்றி நிறையவும் பேசினோம்.  ஒருவரி இரண்டு வரி இல்லை, முழுக் கவிதையாக  அவர் கவிதைகளைச் சொல்லிப் பகிர்ந்து கொண்டு ரசித்தோம்.

பாரதிக்கு அப்புறமான தமிழ் இலக்கியச் சூழலில் இந்த மாதிரி அஞ்சலி செலுத்த வந்து, துக்கம்கேட்டு, அதை சகஜமாக ஏற்றுக்கொண்டு, கலையாமல் அங்கேயே நின்று,  அந்தக் கவிஞனின் படைப்புகளைக் கொண்டாடுவது எத்தனை பேருக்கு நடந்திருக்கும். இடுகாட்டில் அவர் எரியூட்டப்பட அங்கே நின்றும் அவருடைய கவிதை சொன்னார்கள்.

மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்குப் பிடிக்கும் ஏனெனில்
வேறெந்தத் தெய்வம்        வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம்        உடைக்க?

ஒரு விதத்தில் ஞானக்கூத்தன் காட்டிய இந்தப் பிள்ளையார் தான் அவர் கவிதைகள். அவற்றைத் திண்ணைத் தூங்கும் அந்தணர்களின் அரட்டை  என்றார் ஈழத்தில் இருந்து வந்த ஒரு கவிஞர். ‘ஞானக்கூத்தனுக்கும் அவருடைய சக கூத்தர்களுக்குமான தலைமைப் பீடம் இங்கே இல்லை. அது மேலை நாட்டில். அங்கே அவர்களுக்குக் காலம் முடிந்துவிட்டது’ என்று எழுபதுகளில் அவரை விமர்சித்துக் கட்டுரை எழுதியவர்களும் கூட ரசித்து முழுமையாகக் கவிதையைச் சொல்லித் தான் திட்டினார்கள்.

எளிமையாக இருந்தாலும் இலக்கு உணர்ந்து பாயும் அம்பு போன்றவை அவர் கவிதைகள். பலர் இன்னும் சொல்லிப் பாராட்டவும், வையவும் வழிவகுக்கும் அவருடைய மூன்று வரிக் கவிதை ஒன்று

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட       மாட்டேன்

திட்டுகிறவர்களுக்கு ஞானக்கூத்தனின் இந்த நாலு வரிக் கவிதை தெரிந்திருக்காது.

சங்கத் தமிழும், நாயன்மார்
ஆழ்வார் தமிழும் பின்வந்த
எங்கள் தமிழும் முத்தமிழாய்
ஏற்கும் தமிழே நீவாழ்க.

ஞானக்கூத்தன் எழுத வந்த 1950-களில் தமிழ்ப் புதுக்கவிதை புது வேகப் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருந்தது. பல நூற்றாண்டு நீண்ட மரபின் பாதுகாப்பான தளையில் இருந்து தமிழ்க் கவிஞர்கள் வெளிவந்த போது ந.பிச்சமூர்த்தியும், தொடர்ந்து கு.ப.ராவும், சி.மணியும், சண்முகசுப்பையாவும்  புதுக் கவிதையை முன்னெடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். மரபு முழுக்கத் தெரிந்த, மரபில் பாடிய ஞானக்கூத்தன் மரபைத் துறந்து வந்தபோது அந்தக் கட்டமைப்பையும் சந்தத்தையும் பத்திரமாக எடுத்து வந்திருந்தார்.

மரபு, புதுக் கவிதை இரண்டிலும் பதராக நிறைந்திருந்ததைச் சாட அவர் தயங்கியதே இல்லை.

பாடச் சொன்னால்        வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால்        கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால்        கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால்        தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால்        வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால்
உடனே
எண்பது பக்க நோட்டுப்
புத்தகம்
இரண்டை எடுத்து
நீட்டுகிறார்கள்.
அவருடைய உவமைகள்        அசாதாரணமானவை –
என்னைப் பார்த்தவன் எருக்கம்
மொட்டுபோல்
முகத்தை உம்மென்று வைத்துக்
கொண்டான்.
எழுதக் குவிந்த கைபோல
இருக்கும் குன்றில் ஒருபாதை.
அவர் கவிதையில் எளிமையான
மென்மை உண்டு
பூக்களெல்லாம் மலர்ந்து
தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே
பவழ மல்லி
கதை முடிந்து தாய் திரும்பும்
வேளைமட்டும்
தெருப்படியில் முழு நிலவில்
அந்த நேரத்
தனிமையிலே என் நினைப்புத்
தோன்றுமோடி?

எளிமையான, ஆனாலும் கூர்மையான சமூக விமர்சனமும் உண்டு. மறக்க முடியாத கீழ்வெண்மணி சம்பவம் பற்றிய ஞானக்கூத்தன் கவிதை வரிகள் இவை

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்
இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க.

ஞானக்கூத்தனின் ஒரு கவிதை நவீனத் தமிழ்க் கவிதைக்கும் புத்தலை ஓவியத்துக்கும் உறவு சொல்ல வைக்கிறது.  மேஜை நடராஜர் என்ற கவிதை, நடுத்தர வர்க்கக் குடும்பத்து வீட்டு முன்னறை மேஜை மேல் வைத்த நடராஜர் பொம்மையைப் பற்றியது. வீட்டுப் பொருட்கள் நிறைந்து வழியும் மேசை மேல் ஆடிக் கொண்டிருக்கிறார் நடராஜர் –

எனக்குத் தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப்
புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.

பூபேன் கக்கரின் ‘அலமாரியும் சிவனும்’  மாடர்ன் ஆர்ட் ஓவியம். இதே போல் ஒரு நடுத்தர வர்க்க இல்லத்தில் முன்னறை அலமாரியில் எதெல்லாமோ இறைந்திருக்க அமைதியாக வீற்றிருக்கும் சிவபெருமானின் சிறு சிலை பற்றியது.  ஓவியக் கவிதையும் கவிதை ஓவியமும் அடிப்படையில் ஒன்று தானே.

  • இரா.முருகன்

Leave a Reply

You must be logged in to post a comment.