அரியலூர், ஆக.2-
அரியலூர்- பெரம்பலூரில் உள்ள வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம் திங்களன்று நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் பிச்சைபிள்ளை தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ரவி வரவேற்று பேசினார். மாவட்ட விவசாயிகள் சங்கதுணைத்தலைவர் கே.நாகரத்தினம் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் என்.சுப்பிரமணியன் அகில இந்திய விவசாயிகள் சங்க முடிவுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
ஆக.18ல் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து மோட்டர் பம்பு செட்டு வாங்கி வைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காத தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 18 அன்று அரியலூர், பெரம்பலூர் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் தமிழக அரசு அறிவித்த 2013லிருந்து 2015 வரை கரும்பு நிலுவைத் தொகை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். திருமானூர் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பை அரைக்க முடியாத நிலை உள்ளது. ஆலை விரிவாக்கத்தையும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினையும் நிறைவேற்றினால்தான் ஆலை செயல்பட முடியும். இதனை வலியுறுத்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. செப்டம்பர் 2ல்அகிலஇந்திய வேலை நிறுத்தம் நடை
பெறுவதை ஆதரித்தும் விவசாயிகள் விரோதப் போக்கை கைவிட வலியுறுத்தியும் ஆகஸ்ட் 21முதல் 27 வரை பல்வேறு கிராமங்களில் கூட்டம் நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டது.
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள வாய்க்காலை தூர்வாரக்கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் இக்கூட்டம் வலியுறுத்தியது.
தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை –
எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை மாநிலக் குழு முடிவுகள் குறித்து பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.