அந்தகார இருளில், அமுங்கிய வெளிச்சத்தில், தேக்கு மரத்தோப்பினுள்ளே எண்பது பேர் கொண்டது இளைஞர் கூட்டம். கருப்பு குர்தா கால் வரை பரவியிருக்க, மூக்குக்கண்ணாடி சகிதமாய் அந்த 72வயது இளைஞர் வருகிறார். நான் ‘எழுத வந்த காலத்தில், இப்படியொரு இலக்கிய முகாம், எனக்கு வாய்க்கவில்லை. உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது, இது மிகப்பெரிய வாய்ப்பு, வாழ்த்துக்கள்!’ என்று பேசத்துவங்கியவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.முதலில் ஒரு கதை.

ஒரு ஊர்ல ஒரு குழந்தை பிறந்தது. அது தலையில்லாமல் பிறந்தது. (ஹோ…வென சத்தம்). ‘கதைக்கு கால் இல்லை, அல்லவா?. இந்தக்கதையில், தலை இல்லை,’ என்று ஓங்காரத்தை அடக்கித் தொடர்கிறார்.அந்தக்குழந்தை ஸ்கூலுக்கு போனது, காலேஜூ க்கும் போனது.தலையில்லா குழந்தை, காலேஜ் போகுமா?’ கூட்டத்திலிருந்து குரல். கதையில போகும்.’ பிரபஞ்சனின் பதில். ‘‘போச்சா, அப்ப ஒரு பந்து, அந்தத் தலையில்லாதவ னின் காலடியில் பட்டது. அது ஒரு இளவரசி விளையாடிய பந்து. அந்தப்பந்தைக் கொண்டுபோய், அவளிடம் கொடுத்தான்.

அப்போது அந்த அழகான இளவரசி மீது, அவனுக்குக் காதல் வந்தது. (கூட்டத்தில் கூச்சலும், கெக்கலிப்பும்).ஏன், எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை இடித்ததும் காதல் வர்ரதில்லையா? ; சக்கரத்தை சுத்துனதும், சின்ன எம்.ஜி.ஆர்., பெரியவனா ஆகுறதில்லையா? அப்படித்தான் கண்டதும் காதல்.’’கதையைத் தொடர்கிறார்…. ‘‘இளவரசியைக் கல்யாணம் பண்ணணும்னு, அவன் நினைக்கிறான். தலையில்லாதவனை கல்யாணம் பண்ண, இளவரசி மறுக்கிறாள். இப்போது, அந்த ஊருக்கு சூப்பர் சாமியார் ஒருவர் வருகிறார். தலையில்லா இளைஞனின் அம்மாவும், அவனுமாய் அவரைப்பார்த்து, தலைவேணும் என்று கேட்கிறார் கள். ‘தலை தருகிறேன். ஆனால், அந்தத் தலைக்குள் ஒன்றுமிருக்காது.’ என்று சாமியார் ‘கண்டிஷன்’ போட, சம்மதிக்கிறார்கள்.(கூட்டம் மெர்சல் ஆகிறது. ஆங்காங்கே குதூகல சிரிப்பொலி கேட்கிறது) ‘ரொம்ப பேருக்கு அப்படித்தானோ?’ பிரபஞ்சன் பகடி செய்கிறார். அந்த மந்திரம் சொல்லவும், அவனுக்குத் தலை வந்தது.

அவனது அம்மா, ராஜாவிடம் சென்று, இளவரசியைப் பெண் கேட்கிறாள். தன் பையனுக்கு, தலை அழகானதே தவிர அதற்குள் ஒன்றுமில்லை என்று, உண்மையை சொல்கிறாள். ராஜாவோ, ‘அவனுக்குமா?’ என்று கேட்கிறார். ( மீண்டும் கூட்டத்தில்…கல கலப்பு). ‘ஓ.கே., ஒங்க பையனுக்கு எம்பொண்ணத் தர்றேன். நானும் இப்புடி ஒரு மாப்பிள்ளையத்தானே தேடிக்கிட்டிருந்தேன். என்னியப்போல ஒருத்தன்தான், இந்த நாட்டை ஆளனும்’ என்று சம்மதிக்கிறார். அந்த தலையில் ஒன்றுமில்லாத இளைஞனும், அந்த மாமா ராஜா மறைவுக்குப் பின், ஆட்சிக்கு வந்து விட்டான்,’ என்ற முத்தாய்ப்போடு முடித்தார்.

கூட்டத்தின் கலகலப்புக்கும், கைதட்டலுக்குமிடையே, ‘‘இது பாமரர்கள் சொல்லிவந்த வாய் மொழிக்கதை. இதைப்போல் ஆட்சியாளர்களை விமர்சித்த கதையை வேறெங்கும் நான், வாசித்ததில்லை என்கிறார். அடுத்து, “சரி, நான் இப்போது ஒரு வரி சொல்வேன். நீங்கள் ஆளுக்கொரு வரி சொல்லி, கதையை முடிக்கவேண்டும்’ என்று கூறிய பிரபஞ்சன், தூங்கி எழுந்ததிலிருந்து, அவனது மனம் குழம்பிக்கிடந்தது. என்ன சொல்வதென்றே விளங்கவில்லை,” என்றார். உடனே, கூட்டத்திலிருந்து ஒருவர், ‘‘அப்பாவிடம் சென்று, ஐநூறு ரூபாய் எப்படி கேட்கப்போகிறேன்’’ என்றார். இடைமறித்த பிரபஞ்சன், ‘‘500 ரூபாயும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் அடுத்த வரி சொல்கிறேன். அவனது அம்மா, தட்டுத்தடுமாறி, கையில் காப்பியோடு மாடிப்படி ஏறி வந்தாள் என்று வழிகாட்டினார். இப்போது கூட்டத்திலிருந்து, ‘‘அடுத்த கணம், அவனுக்கு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவின் ஞாபகம் வந்தது’’ என்றது, ஓசூர் இளம் பெண் குரல். “சபாஷ், அப்படித்தான் தொடரணும்,’’ என்று ஊக்கினார் பிரபஞ்சன்.

உடனே அடுத்தொரு இளைஞன், ‘‘தம்பி, போன வாரம் நாம, பெண் பார்க்கப் போயிருந்தமே, அவங்க வீட்டுக்கு போயி, வேணாம்ன்னு சொல்லிட்டு வரச்சொன்னனே?’’ என்றாள், அம்மா. ‘‘சூப்பர் பிக்கப்பு’’ என்று குதூகலித்த பிரபஞ்சன், “‘சரி, இப்ப அவனுக்கு ஒரு பேர் வெக்கணுமோ” என்றதும், ஏராளமான குரல்கள், அந்த இருளரங்கில் ஒலித்தன.”கதையில் ஒரு மனம் வரணும். ஒரு அறம் வரணும். கதைக்களத்திற்கு ஏற்ற பேர் வரணும் என்று துலக்கினார். இறுதியில், ‘குமார்’ என்று பெயரிடப்பட்டது. அதற்கிடையில், ‘சொஜ்ஜி’, ‘பஜ்ஜி’ ஆராய்ச்சியும் களைகட்டியது. இடையில் டால்ஸ்டாயின் கதை ஒன்றைக் கூறிய பிரபஞ்சன், ‘சரி, கதையை தொடர்வோம் என்றார். “‘அந்தப்பெண்ணை பார்த்து, கல்யாணத்தைத் தள்ளி வைக்க வேண்டுமென எப்படிச்சொல்வது, என்ற குழப்பத்தோடு, ஸ்கூட்டரில் ஆபீஸ் கிளம்பினான் குமார்.’’ என்று அடியெடுத்து தந்தார். இன்னொருவர் எழுந்து, ‘‘நாய் ஒன்று, சாலையின் குறுக் கே ஓடியது’’ என்றார். மற்றொரு குரல், ‘‘பைக்கில் வரும் வழியில், எதிரிலிருந்த பூக்கடையில் பூக்களில்லா மாலையின் நார் மட்டும் தொங்கியது,” என்றது. இன்னொருவர் “‘அவன் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த போது,

சாலையோரம் ஒரு சிறு கும்பல். எட்டிப்பார்த்தால், கூட்டத்தில் ஒருவன் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தான்”’ என்றதும், கூட்டம் ஆர்ப்பரித்தது.அதே ஊக்கத்துடன் மற்றுமொரு இளைஞன் எழுந்து, ‘இப்போது மனக்குழப்பத்தினூடே அவனு க்கு, தனது நண்பன் ஞாபகம் வந்தது. (நண்பனுக்கு அன்பு என்று பெயரிட்டனர்.) அப்போது, “அவன் யாரைப்பார்க்க வேண்டும் என்று நினைத்தானோ, அந்த அன்புவே மொபைலில் அழைத்தான்.” என்று, இளம் நங்கையொருவர் அடுத்த அடியை தொடர்ந்தார். இடையில் குறுக்கிட்ட பிரபஞ்சன், ‘‘இந்த இடத்தில், கதையை அழகுபடுத்த, ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி’ என்றெல்லாம் அரதப்பழசான சொலவடையை போடாமல், புதுசா போடணும்’என்று ‘பஞ்ச்’ வைத்தார்.

கலந்தாலோசனைக்குப்பிறகு கதையில், ‘அன்புவே எதிரே வந்தான்’ என்பதை சேர்த்தனர். அடுத்தொருவர், ‘‘இருவரும் அருகிலிருந்த ஓட்டலுக்கு போய், காபி சாப்பிட்டுக்கொண்டே பேசினர்,” என்று அடுத்த இழையை தொடுத்தார்.மீண்டும் குறுக்கிட்ட பிரபஞ்சன், கதையில் வரும் ‘போஸ்ட்மேன்’ வந்தால், பெயர் வைக்க வேண்டியதில்லை. அதேபோல், அகமதுவும், முகமதுவும் நண்பர்கள் என்று ஒரே ஓசை நயத்தில் நண்பர்களுக்கு பெயரிடக்கூடாது, என்றும் அறிவுறுத்தினார். அத்துடன் பாரதியாரின் வாழ்க்கையில் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பின் ‘‘ம்ம்ம்… காபி ஹவுசில் அன்பு கேட்டான்,’’ என்று கதையின் தொடர்ச்சியை ஞாபகமூட்டி னார். ‘‘இந்த இடத்தில், இலக்கணத்தமிழ் வேண்டாம். தமிழில் நேற்றிருந்த மொழிக்குத்தான் இலக்கணம் உண்டு.

வளர்ந்து வந்த மொழிக்கேற்ப, 86 வருட இலக்கியத்திற்கு இலக்கணம் இல்லை,’’என்று சுட்டினார். மங்கை ஒருவர் எழுந்து, ‘‘என்னப்பா அவசரமா வரச்சொன்ன, முடிவு பண்ணிட்டியா?’’ என்றான் அன்பு. அதற்கு குமார், ‘‘அங்கதான் சிக்கல். சொந்தவழியில ஒரு பொண்ண அம்மா பாத்திருக்கா!’’ என்று சொன்னான். ‘‘நீ என்ன நினைக்கிற?’’ அன்பு கேட்டான். ‘‘மாமா பொண்ணத் தொடர்ந்து பார்த்துட்டே இருந்ததால, புடிக்கல’’ என்று முனகினான். கூட்டம் இப்போது, ‘ஹோ!’ என்று ‘கோரஸ்’ பாடியது. “ஆமா, சிலர பாத்த உடனே புடிக்கும். சிலர பாக்கப்பாக்கத்தான் புடிக்கும்,” என்று பிரபஞ்சனும் சுதி ஏற்றினார். ‘‘எனக்கு அந்தப் பொண்ணப் புடிச்சிருக்கு’’ என்றான் குமார், என்றபடி ஒருவர் கூவ, ‘‘மாமா பொண்ணு வீட்டுக்கு போய், எங்கிட்ட கேக்காமத்தான் பேசிருக்காங்க.

மன்னிக்கனும். ‘எனக்கொரு பொண்ணோட ஈடுபாடு!’’ என்று பல குரல்கள். “மீரா”’ என்று அந்தப்பெண்ணிற்கு பெயரிட்டார். கூடவே, ‘அந்த மீரா, குமாரிடம், ‘நானும் உங்கிட்ட பேசனு ம்ன்னு நெனைச்சிட்டிருந்தேன். காலேஜ் டேய்சிலிருந்தே ஒருத்தரோட ரொம்ப பழக்கம். நான் வாழ்ந்தா அவரோடதா வாழ்வேனு’ சொன்னா என்ன? என்று எகிற, கூட்டம் பதறிச் சிதறியது.உடனே ஒரு குசும்பக்காரர், “நான் வேற சாதி, அவர் வேற சாதி. ஆணவக்கொலை நடந்திரு மோனு பயமாருக்கு!” என்று திரிகொழுத்தினார். படைப்பின் பரிமாணங்கள் திசையெங்கும் வெள்ளமென உடைப்பெடுத்தன. அதனை லாவகமாக உள்வாங்கி நெறிப்படுத்திய பிரபஞ்சன். ஒரு மராத்திக் கதையை கூறிவிட்டு “சரி…சரி…நம்ம கதைக்கு வந்துடுங்க’’ என்று உஷாராக அனைவரையும் தன்னிலைப்படுத் தினார். ‘‘குமார், சுமதியின் வீட்டுக்கதவை தட்டினான்.

அவனது முகத்தில் சந்தோஷ ரேகையை கவனித்துவிட்டாள், அவள். இவன் அவள் கைப்பை அருகே ரோஜாவை வைத்தான்,’ என்று பாத்திரங்களை சரமாரியாக தொடுத்தார் ஒரு இளம்பெண். கூட்டத்தில் மீண்டும் கூக்குரலும், கெக்கலிப்பும் அலையடித்து சிதறின. ‘‘அப்பா இல்ல. இப்பதா மார்க்கெட் போனாங்க,” என்று தயங்கினாள் சத்யா. உடனே குமார், ‘‘சரி, அப்பா வந்ததும் சொல்லிடுங்க, நல்லநாள் பாக்கச்சொன்னாங்க!’’ என்று முடித்தார், ஒரு வெடிப்புறு இளைஞர். அப்போது சரேலென பெண்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல், ஏன், ‘‘அதுவரை போயிருந்த ‘கரன்ட்’ அப்போதுதான் வந்தது. மின் விசிறி சுற்ற ஆரம்பித்ததும், புழுக்கம் போனதுன்னு முடிக்கலாமே?’’ என்றார். இளம்படைப்பாளிகள், கரங்கள் சிவக்கச் சிவக்க தட்டினர்.

(ஜூலை 22, 23 மற்றும் 24 தேதிகளில், கோவையில் நடந்த தமுஎகசவின், இளம் படைப்பாளிகளுக்கான மாநில படைப்பூக்க முகாமில், பிரபஞ்சனின் கதைச்சுற்று நிகழ்வு)

Leave A Reply

%d bloggers like this: